Madras Kural

‘கதறல்ஸ்’ என்றால் என்ன?

கதறல்ஸ் அதிகமாருக்கு…

சட்டசபை அவைக்குறிப்பில், ‘கதறல்ஸ்’ போன்ற வார்த்தைகள், அதுவும் மாண்புமிகு முதலமைச்சர் வார்த்தைகள் பதிவேற்றம் என்பது ஒரு தொடக்கம்தான் போல…

கூட்டணிப்பேச்சு வார்த்தை வெற்றிகரமாக முடிந்து விட்டதை குறிப்பிட்டு மேனாள் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் காட்டிய SINGLE HAND ஸ்டைலை, தேர்தல் வெற்றிக்குப் பின்னர், கொளத்தூர் தவெக எம்எல்ஏ திரு.வி.எஸ்.பாபு
DOUBLE HAND செய்கையாகக் காட்டினார்.
தவெக நிறுவனரான தமிழ்நாட்டு முதலமைச்சர் மாண்புமிகு ஜோசப் விஜய் அதையே ‘புஷ்பா’ பட ஸ்டைலில் சட்டசபையில் செய்து காட்டுகிறார்.

அவையில் பேசுங்கள் முதலமைச்சரே என்று கோரினால், “ஐந்து நிமிடம் கொளத்தூரில் பேசியதற்கே இந்த ஆட்டம் (ஸ்டாலின் தோல்வியும் சேர்த்து) கண்டு விட்டது” என்று எள்ளலுடன் குறிப்பிடுவது அவை மாண்புக்கு அழகு சேர்க்குமா என்பதை மாண்புமிகு முதலமைச்சர்தான் சொல்ல வேண்டும். நீங்கள், சிறப்பாக ROAD SHOW முன்னெடுத்த ஏழு மாவட்டங்களில் ஒரு இடம்கூட தவெக வெற்றியைப் பெறவில்லை என்பதை நினைவில் கொண்டால் போதுமானது. சொல்லப் போனால் அங்கெல்லாம் அதிகமாகப் பேசியிருக்கிறீர்கள்…

வானாளாவிய புகழுடன் அம்மையார் ஜெயலலிதா இருந்தபோதுதான் இ.ஜி. சுகவனம் என்ற திமுக வேட்பாளரிடம் பர்கூர் தொகுதியில் தோற்றுப்போனார்.
மகத்தான தலைவர் கர்மவீரரை
சொந்தமண் விருதுநகரிலேயே தோற்கடித்தது, மாணவர் சீனுவாசன்தான்.
இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற திமுக மீண்டெழுந்து ஆட்சியைப் பிடித்த கதைகளும், அதேபோல் தோற்று மீண்டும் எழுந்து ஆட்சியைப் பிடித்த அதிமுகவின் கதைகளும் குட்டிக்கதைகளாக இல்லாமல் நெடுங்கதைகளாகவே வரலாற்றில் இடம் பிடித்திருப்பதை மறக்கக்கூடாது.

இந்தத்தேர்தலில் ஆளுங்கட்சியாக இருந்த திமுகவையும் ஆண்ட கட்சியான அதிமுக வையும் விட கூடுதல் இடங்களைக் கொடுத்து மக்கள் உங்களை உயர்த்திப் பிடித்திருப்பதை கண்டு மகிழுங்கள்.
அடுத்த தேர்தலில் அதே மக்கள் இன்னும் தவெகவை முழுமையாக ஆதரித்தால், யாருடைய தயவுமின்றி பெரும்பான்மை ஆட்சியை அமைக்கலாமே, அதற்காக நாம் இப்போதிருந்தே செய்யவேண்டியது என்ன என்ற எண்ணத்தை நெஞ்சில் விதையுங்கள். பயணத்தை அதைநோக்கி செலுத்துங்கள்.

“பதராய்க் கிடந்த எங்களை பயிராய் மாற்றிய எங்கள் வெற்றித் தலைவா” என்று சட்ட சபையில், நெக்குருகிப்பேசிய உங்கள் கட்சி எம்எல்ஏவின் வார்த்தையை உள்வாங்கிக் கொள்ளுங்கள். அரசியல்மயப்பட தொண்டனே தயாராகிக்கொண்டு வரும் போது அந்தத் தொண்டனை மீண்டும் ரசிக மனப்பான்மைக்குள் தள்ளாதீர்.

தேர்தல் அரசியலில்
வெற்றியும்
தோல்வியும்
நிலைத்தன்மை கொண்டதல்ல.

ந.பா.சேதுராமன்
(24.06.2026)

Exit mobile version