Madras Kural

பில்டிங் அப்ரூவல் கொடுக்க யார் தேவை?

சென்னை மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் கட்டட வரைபட (பில்டிங் அப்ரூவல்) அனுமதி கொடுக்க
சட்ட நிபுணர்களே இல்லையா என்ற கேள்விக்கு பதிலே கிடைக்கவில்லை என்கிறார்கள்.

சென்னை மாநகராட்சியின் மனைப்பிரிவு அங்கீகாரம் கொடுக்கும் ஏரியாவில் சட்ட வல்லுநர்களை நியமிக்காமல் பொறியாளர்கள் கையில் பொறுப்பைக் கொடுத்திருக்கும் அவலத்தால்,
‘எது ஒரிஜினல் சொத்து, எது ஒரிஜினல் மாதிரி இருக்கும் சொத்து’ என்ற குழப்பம் நீடிக்கிறது. கட்டட வரைபட அனுமதி, பெருநகரங்களில் (town planing section) CMDA அங்கீகாரம் என்றும்
உள்ளாட்சி – ஊராட்சி- ஊராட்சி ஒன்றியங்களில் DTCP அங்கீகாரம் என்றும் கொடுக்கப்படுகிறது.

இப்படிப்பட்ட அங்கீகாரங்களைப் பெறுவதற்கு குறிப்பிட்ட சதுர அடிகள் வரையில் உள்ளாட்சி அமைப்புகள் வழங்க அனுமதி இருக்கிறது.
ஆன் – லைன் மூலமும் கட்ட வரைபட அனுமதிகளை விண்ணப்பித்து பெறலாம் .
நம் கைகளில் இருப்பது, சரியான கட்டட வரைபடம்தானா, அனுமதி கேட்டு வந்திருக்கும் நபர்தான் கட்டடத்தின் உண்மையான உரிமம் படைத்தவரா, கட்டடம் அல்லது காலிமனைகளில் தீர்க்கப்படாத வில்லங்கம் ஏதாவது இருக்கிறதா போன்ற உண்மைத் தன்மைகளை ‘பொறியாளர்’ ஒரு போதும் சரிபார்த்து விட முடியாது.
சட்ட வல்லுநர்கள் மட்டுமே அதற்கு தீர்வு காணமுடியும், அதற்குத்தான் அவர்கள் நியமனம் அவசியமாகிறது.

பொறியாளர்கள் கைகளில் மனைப்பிரிவு அங்கீகார ஆய்வுப் பணிகளை கொடுத்திருப்பதே கேலிக்கூத்தான நிர்வாக அடையாளம் தான் என்று நகைக்கிறார்கள், விஷயத்தின் வீரியம் உணர்ந்த சட்ட நிபுணர்கள். ‘எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது, நீங்கள் போய் திட்டமிட்டபடி எதையாவது கட்டி பத்து மாடி உயரத்துக்கு தூக்கி நிறுத்திக் கொள்ளுங்கள்’ என்று மெரீனா கடற்கரை மணல்வெளிப் பகுதிக்கு பொறியாள அதிகாரிகள் அப்ரூவல் வழங்கினால் கூட அதில் வியப்பதற்கு ஏதுமில்லை.

பத்திரங்களில் என்னென்ன லிங்க் (இணைப்பு சொத்துகள்) இருக்கிறது, வில்லங்கங்கள் எத்தனை மீட்டருக்கு வரிசை கட்டிக் கொண்டிருக்கிறது
போன்ற அனைத்தையும், சட்ட வல்லுநர்கள்தான் அளிக்க வேண்டும்.
மனைப்பிரிவு அங்கீகாரம் அளிக்கும் இடத்தில் இருக்க வேண்டிய சட்ட வல்லுநர்களுக்கு பதில் பொறியாளர்கள் இருப்பது எல்லா வகையிலும் ஆபத்தானது.
ஏற்கெனவே சென்னை உள்ளிட்ட பல மாநகராட்சி, நகராட்சிகளில் சிவில் இன்ஜீனியர் ஏரியாவில் மெக்கானிக்கல் இன்ஜீனியர்களை மாற்றிப் போட்டு ஒரு பக்கம் ‘தப்பாட்டம்’ ஆடிக் கொண்டிருக்கும் மோசமான நிர்வாகத் தன்மை, அனைவரையும் முகஞ்சுளிக்க வைக்கிறது. விரைவில் கட்டடவரைபட அனுமதிப் பிரிவுக்குள் பொறியாளர்கள் இருப்பதை மாற்றி சட்ட வல்லுநர்களை அங்கு நியமித்து நிர்வாகத்தை
சரியான முறையில் கொண்டு செல்வதே தமிழ்நாட்டு அரசுக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும்.

ந.பா.சேதுராமன்

Exit mobile version