சென்னையில் வீதிக்கு வீதி நம்பிக்கையோடு கல்லு, மணல், ஜல்லி, ரப்பீஸ், சிமெண்ட் கலவைகளை கொட்டி வைத்து மேஸ்திரிகள் வேலை பார்க்கிறார்கள். பக்கத்திலோ தூரத்திலோ ஏரியா கவுன்சிலர்களைக் காணோம். கவுன்சிலர்களின் நிழலாய் இயங்கும் உறவுகளோ உதவியாளர்களோ ஒருவரையும் காணோம். என்னடா இந்த பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனை என்று பாணபத்திரப் புலவர் புலம்புவதைப் போலத்தான் ஆகிவிட்டது மனசு. மெட்றாஸ்ல தான் இருக்கோமா என்ற சந்தேகத்தில், வீட்டுக்கு போனைப் போட்டு, என் பாஸ்போர்ட்டை போட்டோ எடுத்து வாட்சப்ல போட்டு விடச் சொல்லலாமா? என்று கூட தோணியது. என்னை உரசுவது போல ஸ்கூட்டியில் கடந்து போன நபரைப் பார்த்த பின்னர்தான் காண்பது நிஜம் என்ற முடிவுக்கு வந்தேன். பக்கத்தில் நின்றவர், நம்மைப் போல. உருப்படவேக் கூடாது என்று உளவியலை படித்திருப்பார் போல… “உங்க யோசனை எனக்கு நல்லா புரியுது ரிப்போட்டரே, ஒன்னும் கலெக்சன் தேத்த வழியில்லேங்ற கோவத்துலதான் கவுன்சிலர் வண்டி அவ்ளோ வேகமா, உங்கள ஒராய்ஞ்சிக்கிட்டுப் போவுது” என்று லேசாக அதான் சார், கால் புள்ளி வைத்து கணக்கை துவக்கி வைத்தார். அடுத்தடுத்து நானும் நகரத் தொடங்கினேன். “தலைமைய்ல மீட்டிங் போட்டாங்க. கட்சி சொல்லுக்கு கட்டுப்படணும், இல்லேன்னா கட்சியிலருந்து நீக்கிட்டு வார்டுக்கு ரீ எலெக்சன் சாதாரணமா நடக்கும். கட்சிய ராஜினாமா பண்ணிட்டு சுயேச்சை கவுன்சிலராவும் யாரும் காலத்தை ஓட்டிட முடியாது. கவுன்சிலர்களுக்கே இந்த நிலைமைன்னா, சேர்மன், மண்டலக் குழுத்தலைவர் போஸ்ட்ல இருக்கவங்களோட நிலைமைய யோசிச்சுப் பாருங்க” ங்க என்று முதல் பொக்ரானை வீசினார் சென்னையின் சீனியர் உடன்பிறப்பு. அடுத்த உடன்பிறப்போ, ரஷ்யா – உக்ரைன் போர்முனையை ஞாபகப்படுத்தி விட்டார். “கோடியில செலவு பண்ணிட்டு வந்தவங்கள்லாம் இப்ப கையப் பிசைஞ்சுக் கிட்டிருக்காங்க சார். முக்கியமான ஃபைல் எதுவாயிருந்தாலும் லோக்கல் மினிஸ்ட்டருக்கு தகவல் கொடுத்து அனுமதி வாங்கிட்டுத்தான் அதை செயல்படுத்த முடியும்னு தெளிவா சொல்லிட்டாங்க சார்” என்றார். ‘மந்திரி கையில மொத்த ஃபவரையும் கொடுத்துட்டாங்கன்னு எடுத்துக்கலாமா?’ என்றதும், “நீங்க வேற சார்… மந்திரி ஓகே பண்றதுக்கு முன்னால அது சி.எம். கிட்ட ஒப்புதல் வாங்கியிருக்கணுமாம்… இதுக்கு அந்த பருத்தி மூட்டை குடோன்லய இருந்திருக்கலாம்”கற புலம்பல்தான் ரொம்ப சவுண்டா இருக்கு” என்கிறார். எவ்வளவு தூரத்துக்கு இது உண்மை என்பதை உள்வாங்க அண்ணாசாலையின் ஏழுகிலோ மீட்டரும், எண்ணூர் – கொன்னூர் நெடுஞ்சாலைகளின் தலா இருபது கிலோ மீட்டர்களும் மூன்று நாள் பயணம் போயாச்சு. அடுத்து ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகளின் முடிவு வரை முட்டிப் பார்த்தாச்சு. ஒரு இடத்திலும் ஒரு முகத்திலும் சொல்லிக் கொள்ளும்படியான தெளிவோ பூரிப்போ இல்லை… மறுபடியும் மறுபடியும் நமக்கு இதில் குழப்பம் வந்து கொண்டே இருப்பதால் அடுத்தடுத்து கண்ணாடியை துடைத்துப் போட வேண்டியதாகி விட்டது. ஆளுங்கட்சி கவுன்சிலர்களின் நிலையே இப்படி என்றால்… இதே நிலைமை அடுத்து வரும் காலங்களிலும் தொடருமா என்று தெரியவில்லை – தொடர வேண்டும் என்பது நம் விருப்பம். பார்ப்போம். தகவலைக் கேட்ட. நம் காதுகளும், பார்த்த சாட்சியான நம் கண்களும் நம்மை ஏமாற்றாமல் இருக்கவே பெரிதும் விரும்புகிறேன். பத்திரிகையே வாழ்க்கையாக்கிக் கொண்டவர்களுக்கு மிகச் சிறந்த சுற்றுலாத்தலம் எது என்றால் யார் கண்ணிலும் படாமல் அதிகார மையங்கள் கோலோச்சும் இடங்களை சுற்றுவதுதானே ? நானும் அப்படியான ஊரைச்சுற்றுகிற ஆள்தான். பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகையில் சுற்றுவதும் இந்த ‘ஊர்சுற்றி’ கணக்கில்தானே வரும். ‘எல்லோரும் கொண்டாடுவோம்’ என்று சிலர் கூடிக்களித்த இடமாச்சே என்பதால் சுற்றினேன். சுற்றி சுற்றி சுற்றி வந்து சுற்றினேன். எதையோ பறிகொடுத்து விட்டு வந்தவர்களைப் போலவே பார்த்த முகம் அத்தனையும் தெரிந்தது. நமக்குத்தான் பார்வைக்கோளாறா என்று தெரியவில்லை. ப்ளஸ் 25 ஃபவர் கிளாஸை நன்றாக துடைத்துப் போட்டுக் கொண்டு பார்த்தேன், முன்னர் பார்த்ததை விட ‘பறிகொடுப்பு’ வேதனை அதிகமாகவே தெரிந்தது. ரிப்பன் பில்டிங் பின்னால் இருக்கும் டீக்கடைகளிலும் கலகலப்பு இல்லை – பழைய கூட்டமும் இல்லை. பாட்டிலுக்குள் நான் வந்து பத்து நாளாச்சு மிஸ்டர் என்பது போல் கழுத்து வரை ‘ஸ்டாக்’ கில் திமிறிய பிஸ்கட்டுகள் எதையோ சொல்லிக் கொண்டிருந்தது. உள்ளாட்சித்தேர்தல் முடிந்து விட்டது. வார்டு கவுன்சிலர்களாக இருநூறு பேர் வந்து விட்டார்கள். இருநூறு பேருக்குமே உறவினரோ உதவியாளரோ கட்சிக்காரரோ இரண்டு பேர் துணையாக வந்திருந்தாலே ஆயிரக்கணக்கில் தலைகள் தெரிய வேண்டுமல்லவா, அதையும் காணோம்… “சரி, மாமன்றக்கூட்டம் நடக்கும் போது எப்படியும் வந்துதானே ஆகவேண்டும், இப்ப மாமன்றக் கூட்டமா நடக்கிறது ?” என்று எனக்கு நானே சமாதானம் ஆகிக் கொண்டேன். ஓரளவு அல்ல, அதையும் தாண்டி அது பொய் சமாதானம்தான். கவுன்சிலர் தேர்தல் முடிந்து ரிசல்ட் வந்த மறுநாளே மாநகராட்சி ஏரியாவில் கரை வேட்டிகளும் கான்ட்ராக்டர்களும் மொத்தமாய் குழுமி விடுவதை கடந்த காலங்களில் பார்த்திருக்கிறேன். விதவிதமான காலண்டர்களில் கவுன்சிலர்களும் எதிர்கால சேர்மன்களும் கும்பிட்டபடி தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். நோ பார்க்கிங் ஏரியாவில் மட்டும் நிற்கும் மக்கள் பிரதிநிதிகளின் இன்னோவாவும் பொலிரோவும் கண்முன் வந்து வந்து போகிறது. பான்பராக் எச்சில் நீரால் மெள்ள மெள்ள செத்துப் போகும் மரங்களின் இடுப்புக்கு கீழே பள்ளம் பறித்து பான்பராக்கை கைகளால் அள்ளி வெளியே வீசும் துப்புரவுப் பணியாளர்களை அதிகம் பார்த்திருக்கிறேன். அவர்களோடு சாப்பிட்ட டீத்தண்ணி இப்போதும் நெஞ்சில் மோதுகிறது… என்னாச்சு மெட்ராஸ் கார்ப்பரேசனுக்கு? ‘மெட்ராஸ்குரல்’ இங்கிருந்துதானே ஒலிக்க வேண்டும்!
ந.பா.சேதுராமன் –