சென்னையைச் சேர்ந்த இளம்பெண், காதல் கணவ்ருடன் ஆந்திராவுக்கு சுற்றுலாவுக்கு சென்ற இடத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார். புதரில் கிடந்த அந்த பெண்ணின் உடலை போலீசார் மீட்டுள்ளனர்.
சென்னையை அடுத்த செங்குன்றம் பாடியநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் மதன். ஆட்டோ மெக்கானிக். பாடியநல்லூருக்கும், புழலுக்கும் அருகிலுள்ள கதிர்வேடு பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி. நான்கு மாதங்களுக்கு முன்னர் இவர்கள், காதல் திருமணம் செய்து கொண்டனர்.
கடந்த (ஜூன் -2022) மாதம், மனைவி தமிழ்ச்செல்வியை அழைத்துக் கொண்டு, மதன் ஆந்திராவுக்கு சென்றுள்ளார். சுற்றுலா தலமான கைலாசா கோனே என்கிற கோனே பால்ஸ் நீர்வீழ்ச்சியில் தம்பதியர் இருவரும் குளித்துள்ளனர். அதன் பின்னர் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாத நிலையில் மதன் மட்டும் வீடு திரும்பினார்.
மதன் வீட்டில் மகள் தமிழ்ச்செல்வி இல்லாத தகவலை அறிந்த தமிழ்ச்செல்வியின் பெற்றோர் மாணிக்கம் – பல்கிஸ் தம்பதி, செங்குன்றம் போலீசில் புகார் அளித்தனர். “காதல் திருமணம் செய்த நாளிலிருந்தே, அடிக்கடி தமிழ்ச்செல்வியிடம் பணம் கேட்டு மதன் துன்புறுத்தி வந்தார்., மகளிடம் போனில் கூட பேசவிடாமல் மதன், தடுத்து விடுவார். 23 ஆம் தேதி முதல் என் மகளிடம் நாங்கள் போனில் பேசவில்லை. இது குறித்து விசாரிக்க வேண்டும்” என்பதே புகார் மனுவின் சுருக்கம்.
புகாரின் அடிப்படையில், செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், மதனிடம் விசாரணை நடத்தினார். ‘கோனேபால்சுக்கு போன இடத்தில் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது, தமிழ்ச்செல்வியை அங்கேயே விட்டு விட்டு நான் மட்டும் திரும்பி வந்து விட்டேன்’ என்று விசாரணையின் போது மதன் சொன்னதாக தெரிகிறது.
நாராயணவனம் மண்டல் டவுன் போலீஸ் உதவியுடன், சித்தூர் அருகே நகரி மலைப் பகுதியில் அமைந்துள்ள கோனே பால்ஸ் பகுதிக்கு செங்குன்றம் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். கோனேபால்ஸ் அடிவார சிசிடிவி கேமராக் காட்சிகளை, அப்போது ஆய்வு செய்தனர். ஒரு பதிவில், மதன் மோட்டார் சைக்கிளில் ஒரு பெண்ணுடன் போவதும், சில மணி நேர இடைவெளிக்குப் பின்னர், மதன் மட்டும் தனியாக மோட்டார் சைக்கிளில் போவதும் அதில் பதிவாகி இருந்தது.
தமிழ்ச்செல்வியின் பெற்றோர், ’மதனின் நண்பர் பாண்டுவின் வீட்டில் மகளை மறைத்து வைத்திருக்கலாம் என்றும் இன்னொரு நண்பர் சந்தோஷ் மீதும் சந்தேகம் இருக்கிறது, தீவிர விசாரணை நடத்தி எங்கள் மகளை எங்களிடம் ஒப்படையுங்கள்’ என்றும் தெரிவித்தனர். இதற்கிடையில் தமிழ்ச்செல்வியின் தாயார், மகளை மீட்டு ஒப்படைக்கும்படி ஆட்கொணர்வு மனு ஒன்றையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் மீண்டும் மதனை அழைத்துக்கொண்டு செங்குன்றம் போலீசார் கோனேபால்ஸ் பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். அந்தப் பகுதியில் அருவியில் குளிப்போருக்கு மசாஜ் எண்ணை தேய்க்கும் ஆட்களிடமும் விசாரித்தனர். அப்போது அடர்ந்த புதர்ப்பகுதியில் ஒரு பெண்ணின் உடல் இருப்பதை பார்த்ததாக மசாஜ் செய்யும் ஆட்கள் தெரிவித்தனர்.
தகவலையடுத்து, தமிழ்ச்செல்வியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், உடலை அடையாளம் காட்ட, கோனே பால்ஸ் பகுதிக்கு, போலீசாரால் வரவழைக்கப்பட்டனர். அனைவரும் வந்தபின்னர், தகவல் கொடுத்தவர்களை அழைத்துக் கொண்டு போலீசார், உடல் இருந்த பகுதிக்கு சென்றனர். மரக் கிளைகள், சருகுகள் நிறைந்த இடத்தில் எறும்புகள் அரித்த நிலையில் பாதிக்கும் மேல் எலும்புக்கூடாக ஒரு உடல் அங்கே கிடந்தது. உடலின் மீது ஒட்டாமல் சுரிதார் ஒன்று இருந்தது. ஒரு ஜோடி செருப்பு அருகில் கிடந்தது. அதைப் பார்த்ததும், இறந்தது தமிழ்ச்செல்விதான் என்று அவரது பெற்றோரும் உறவினர்களும் உறுதி செய்தனர்.
உடலின் பாகங்களை ஆய்வுக்காக சேகரித்த போலீசார், அவற்றை ஆந்திராவின் புத்தூர் அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னை திரும்பியுள்ள செங்குன்றம் போலீசார், மதனிடம் தீவிர விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில், பெண் காணாமல் போனது எப்போது, போலீசில் புகார் செய்தது எப்போது, பெண்ணின் பெற்றோர் எந்த சூழ்நிலையில் ஆட்கொண்டர்வு மனுதாக்கல் செய்தனர் போன்ற பல சந்தேகங்களுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்… எலும்புக்கூடாக கிடைத்துள்ள தமிழ்ச்செல்வியின் மரணத்தின் காரணகர்த்தாவுக்கு தண்டனை கிடைப்பதில் இனியும் வேண்டாம் தாமதம்…
ந.பா.சேதுராமன்
.