Madras Kural

சாதியை வேரறுக்கும் பணியை இங்கிருந்தே தொடங்குவோம்…

மாணவர்கள் சாதிய வன்மத்துடன் நடந்து கொள்ளும் போக்கை தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்திட தென்காசி கல்விக் கருத்தரங்கம், “சாதியெனும் தாழ்ந்தபடி நமக்கெல்லாம் தள்ளுபடி” என்ற பொருண்மையில் 06.01.2024 அன்று தென்காசி மேலகரம் பேரூராட்சி சமுதாய நலக் கூடத்தில் நடைபெற்றது.

மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் எழுதிய கட்டுரைகளுடன், பேராசிரியர் பா. தயானந்தன், முனைவர் பி. இரத்தினசபாபதி, முனைவர் கு. இரவிக்குமார் உள்ளிட்டவர்களின் கட்டுரைகளும் அரசுக்கு அளிக்கப்பட்ட பரிந்துரைகளும் உள்ளடக்கிய “சாதி ஒழிப்பு: இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பார்வையில்” என்ற நூல் கருத்தரங்கில் வெளியிடப்பட்டது. கருத்தரங்கை முன்னிட்டு நடைபெற்ற கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு பரிசு, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. சாதி ஒழிப்பிற்கான பாடலுக்கு மாணவர்களின் கும்மி நடனம் நடந்தது.

பொதுப் பள்ளிக்கான மாநில மேடை நடத்திய இந்த கருத்தரங்கில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் உள்ளிட்ட பலரும் பங்கேற்று கருத்தாளர்கள் முனைவர் பி. இரத்தின சபாபதி, முனைவர் கு. இரவிக்குமார், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோருடன் விவாதித்தனர்.

கருத்தரங்கின் இறுதியில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோருடன் பங்கேற்ற அனைவரும் சாதி ஒழிப்பிற்கான உறுதிமொழி ஏற்றனர். கருத்தரங்கில் உருவான ஆலோசனைகளை பொதுமக்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் முன் வைக்கின்றோம்.

பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், சமூகப் பாகுபாடுகள் ஆகியவை அனைவருக்கும் சமத்துவமான வாழ்க்கை முறை அமைவதற்கு பெரும் இடையூறாக அமைகின்றது. பாகுபாடுகள் நிறைந்த சமூகக் கட்டமைப்பில் இருந்து பள்ளிக்கு வரும் குழந்தைகள் பாகுபாடுகளை களைந்திட பெரும் ஆற்றலை பெற கல்வி நிலையங்கள் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அத்தகைய பெரும் பொறுப்புடைய கல்வி வளாகங்களில் மாணவர்கள் சாதிய ரீதியாக அணிதிரள்கிறார்கள் என்பது வேதனைக்குரியது. அன்பும், நேசமும் வளர வேண்டிய வயதில் வெறுப்பும் பகையும் அவர்களை மூழ்கடிக்கிறது என்பது மிகவும் வேதனை தரும் செய்தி. இத்தகையச் சூழலுக்கு அடிப்படை காரணம் கல்வியின் நோக்கத்தை நாம் முழுமையாக உணராததே. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கூறு : 17 தீண்டாமை ஒழிக்கப்பட்டது என்று திட்டவட்டமாக கூறுகிறது.

கூறு 17: “தீண்டாமை ஒழிக்கப்பட்டது மற்றும் எந்த வடிவத்திலும் அதை நடைமுறைப் படுத்துவது தடைசெய்யப் பட்டுள்ளது. தீண்டாமையின் விளைவாக உருவாகி நடைமுறைப் படுத்தப்படும் எந்த தகுதி இழப்பும் சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.” என்கிறது.

சமூகத்தில் பாகுபாட்டை உருவாக்கி, ஒரு சாதியில் பிறந்த ஒருவர் மற்றோரு சாதியில் பிறந்த ஒருவரை சமமாக நடத்த சாதி அமைப்பானது அனுமதிப்பதில்லை. ஒரு சாதியைச் சார்ந்தவர்கள் தன்னைவிட கீழான சாதியில் பிறந்தவரை தீண்டத்தகாதவர் என்று கருதச் செய்து அவர்களுடன் குடும்ப உறவு வைத்துக் கொள்ள சாதி கட்டமைப்பு அனுமதிப்பதில்லை.

சாதியின் அடிப்படையில் ஒரு பிரிவினர் மற்றோரு பிரிவினருக்கு சமமற்றவர், அதாவது தீண்டத்தகாதவர், அதனடிப்படையில் ஒரு சாதியைச் சார்ந்தவர்கள் மற்றோரு சாதியைச் சார்ந்தவர்களுடன் திருமணம் உள்ளிட்ட குடும்ப உறவு ஏற்படுத்திக் கொள்ள சாதி தடையாக உள்ளது. தீண்டாமையின் அடிப்படை வடிவமாக திகழும் சாதி என்ற கருத்தியல் ஒரு மனிதர் இன்னோரு மனிதருடன் சமமான திருமணம் உள்ளிட்ட சமூக உறவை ஏற்படுத்திக் கொள்ள தடை விதிப்பதின் விளைவாக அந்த மனிதர் சமமான சமூக உறவை ஏற்படுத்திக் கொள்ளும் தகுதியை இழக்கச் செய்கிறது. தீண்டாமையின் விளைவாக உருவாகி நடைமுறைப் படுத்தப்படும் இத்தகைய தகுதி இழப்பு, சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றம் என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 17 தெளிவுபட கூறுவதால் இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த ஜனவரி 26, 1950 முதல் சாதி ஒழிக்கப்பட்டது.

மாணவர்கள் பள்ளியில் மேற் கொள்ளும் தேசிய உறுதி மொழியில் “இந்தியர்கள் அனைவரும் எனது சகோதர சகோதரிகள்” என்ற வாசகத்தின் பொருள் உணர்ந்து இந்திய அரசமைப்புச் சட்டம் முன்வைக்கும் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் என்ற விழுமியங்களை தங்களின் வாழ்க்கையில் உயர்த்திப் பிடிக்க தேவையான கல்வி செயல்பாட்டை பள்ளியிலும் கல்லூரியிலும் பாடத்திட்டம் வாயிலாக உருவாக்க வேண்டும். சாதி என்பது தவறான நம்பிக்கையின் அடிப்படையில் உருவான கருத்தியல் என்பதை மக்கள் உணர்ந்துக் கொண்டால் இந்திய அரசமைப்புச் சட்டம் முன்வைக்கும் சமத்துவச் சமூகம் மலரும். மாணவர்கள் தாங்களாகவே சாதிய வன்மத்துடன் நடந்து கொள்ளவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பெரியவர்களின் நடவடிக்கைகளில் இருந்தே மாணவர்கள் பலவற்றையும் கற்கின்றனர். சாதி என்பது தீண்டாமை அடிப்படையில் அமைந்த சமூகப் பாகுபாடு என்பதை பாடத்திட்டத்தின் வாயிலாக மாணவர்கள் உணர்ந்திடும் வகையில் கல்வி செயல்பாடு அமைய வேண்டும். பட்டியல் இன மக்களுக்காக உருவாக்கப்பட்ட சிறப்பு உடற்கூறு திட்டம், அதற்காக ஒதுக்கப்படும் நிதி முறையாக, மக்களின் தேவை என்ன என்பதை மக்களிடமே கேட்டறிந்து, செயல்படுத்தினால் திட்டத்தின் நோக்கம் நிறைவேறும், கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சி பெற பயன் படும். சீர்மரபினர், மிகவும் பிற்படுத்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்ட திட்டங்கள், அதற்காக ஒதுக்கப்படும் நிதி, முறையாக கையாளப்பட்டால் இப்பிரிவு மக்கள் சுயசார்புடன் வாழவும், சாதிய பிடியில் இருந்து விடுபட்டு, தங்களின் சமூக மற்றும் கல்வி பின்தங்கலில் இருந்து வெளியே வர உதவும். மனிதருடன் சமமான திருமணம் உள்ளிட்ட சமூக உறவை ஏற்படுத்திக் கொள்ள தடை விதிப்பதின் விளைவாக அந்த மனிதர் சமமான சமூக உறவை ஏற்படுத்திக் கொள்ளும் தகுதியை இழக்கச் செய்கிறது.

ஒரு சாதியில் பிறந்த ஒருவர் மற்றோரு சாதியில் பிறந்த ஒருவரை தன்னுடன் திருமணம் உள்ளிட்ட சமூக உறவு வைத்துக் கொள்ள தகுதி அற்றவர் என்று கூற இயலாது. அவ்வாறு கூறுவது தீண்டாமையின் விளைவாக ஏற்படும் தகுதி இழப்பாகும். தீண்டாமையை அடிப்படையாக கொண்ட சாதி ரீதியான பாகுபாட்டை கடைப்பிடிப்பது தண்டனைக்குரிய குற்றம் என்பதை மக்கள் உணரச் செய்வதே கல்வியின் அடிப்படை நோக்கம். வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கித் தருவதற்காகவே கல்வி மற்றும் வேலை முன்னுரிமைக்கானச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. சாதியை தக்கவைக்க அல்ல.

சாதியக் கட்டமைப்பிற்குள் இருக்கும் வரை சமூகப் பின்தங்கலில் இருந்து வெளியே வர இயலாது. கல்வி அறிவு தெளிவைத் தரும். தெளிவு பெற்ற மக்கள் சமூக பின்தங்கலில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்வார்கள். சாதிப் பிடிக்குள் இருக்கும் போது பண்பாடு ரீதியான வளர்ச்சியும், சமூக மேம்பாடும் சாத்தியமில்லை.

சாதி என்பது பாகுபாட்டை அடிப்படையாகக் கொண்டது, பாகுபாட்டைக் கடைப்பிடிப்பது குற்றமாகும் என்று அரசின் அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை உணர்ந்து நடந்திட போதிய விழிப்புணர்வு பயிற்சியை பணிப் பயிற்சியின் ஒரு பகுதியாக அரசு அனைவருக்கும் வழங்கிட வேண்டும். மகிழ்ச்சியான குழந்தைப் பருவமே வன்முறை இல்லாத அடுத்த தலைமுறைக்கான உத்தரவாதம் என்பதை உணர்ந்து பேதத்தை வளர்த்த சாதியை ஒழித்து அன்புடன் கூடி வாழும் பண்பாட்டை வளர்த்தெடுக்க நமது பள்ளிக் கல்வித் துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தென்காசி கல்விக் கருத்தரங்கம் கோருகிறது.

பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு பொதுச் செயலாளர், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை / மின்னஞ்சல் spcsstn@gmail.com தொடர்புஎண் : 94456 83660 –

Exit mobile version