Madras Kural

கேன்சருக்கு மருந்து! 18பேரை காப்பாற்றி அமெரிக்கா சாதனை !

புற்றுநோய் (கேன்சர்) வரலாற்றில் முதல்முறை சாதனையாக 18 நோயாளிகள் முற்றிலும் குணமடைந்துள்ள தகவல், உலகை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது!
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தின், ’ஸ்லோன் கெட்டரிங் நினைவு புற்றுநோய் மைய’ டாக்டர் லூயிஸ் ஏ. டயஸ், “மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 18 பேரை, நோயின் பிடியிலிருந்து முழுமையாக விடுவித்துள்ளோம், இந்தநாள் வாழ்வில் மிக உன்னதமான நாள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
புற்றுநோய்த் தாக்குதலின் தீவிரத்தன்மையை நோயாளி எதிர்கொள்ள, கீமோதெரபி, ரேடியேஷன் வகைகளைத்தான் இதுநாள் வரையில் மருந்து – மாத்திரைகளுக்கு அடுத்தபடியாக மருத்துவ உலகம் பயன்படுத்தி வந்தது. அமெரிக்க மருத்துவ நிபுணர் குழாம், மருந்து -மாத்திரையைப் பயன்படுத்தியே முழுமையான தீர்வைப் பெறமுடியும் என்று உலகிற்கு தற்போது தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக மூன்று வாரத்திற்கு ஒருமுறை தொடர்ந்து ஆறு மாதங்கள் என்றளவில் புற்றுநோய் பாதிப்புக்குள்ளான நோயாளிகளுக்கு, ’டோஸ்டார்லிமப்’ என்ற மருந்தை கொடுத்து மருத்துவர்கள் பரிசோதித்து வந்துள்ளனர். பரிசோதிப்பின் முடிவில், மருந்தை உட்கொண்ட 18 நோயாளிகளும் முழுமையாக குணமடைந்துள்ளனர்.
எண்டோஸ்கோபி, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு வகையான ஸ்கேன் ரிப்போர்ட்கள் மற்றும் மருத்துவ பரிசோதனைகளின் முடிவில் புற்றுநோய் இருந்ததற்கான அறிகுறிகளே அந்த 18 பேருக்கும் இல்லை என்ற ரிசல்ட்டை பெற்றுள்ளது் சிறப்பு!
இதுநாள்வரையில் மருத்துவ ஆய்வகங்களில் டோஸ்டார்லிமப் – மருந்தை நோயெதிர்ப்புக்கான மருந்தாகவே பயன்படுத்தி வந்துள்ளது மருத்துவ உலகம். இப்போது மலக்குடல் கேன்சருக்கான மருந்தாக அதைப் பயன்படுத்தி வெற்றியை கண்ணெதிரே பார்த்துள்ளது வியக்க வைத்துள்ளது. பதினெட்டு பேர்கள் மட்டும் பரிசோதனையின் மூலம் தற்போது முழுமையாக குணமடைந்துள்ளனர். பல்வேறு விதமான புற்றுநோய்களுக்கும் இந்த மருந்து எந்தளவுக்கு தீர்வாக இருக்கும் என்பதை நோக்கியும், சிகிச்சைக்கான நபர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் அடுத்தகட்ட ஆராய்ச்சிகள் நகர்கிறது.

பிரிட்டிஷ் பன்னாட்டு மருந்து நிறுவனமான, க்ளாக்ஸோஸ்மித்க்ளைன் (GlaxoSmithKline) மூலம் உருவாக்கப்பட்ட (அ) கண்டெடுக்கப்பட்ட மருந்துதான் ’டோஸ்டார்லிமப்’ (dostarlimab) – ஆகும். புற்று நோயாளியான ’சாஸ்காரோத்’ நோயின் உச்ச தாக்கத்தில் இருந்ததால், பெரிய நகர்ப்புற மருத்துவமனைகளை முதலில் நாடியுள்ளனர். அவரின் மருத்துவ நண்பர்தான், நியூயார்க்கின் ’மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங் கேன்சர்’ சென்டரில் உள்ள அறுவை சிகிச்சை நிபுணரை சாஸ்கோரோத்துக்கு பரிந்துரை செய்துள்ளார். அங்கே ’டோஸ்டார்லிமப்’ மருந்தை சாஸ்கோராத் உட்கொள்ள ஆரம்பித்த பின் கைமேல் பலன் கிடைத்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக புற்றுநோயின் தாக்கமே இல்லாமல் இருக்கிறார் சாஸ்காரோத்.

ஜூன் 5, 2022 அன்று நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, நோயாளிகளுக்கு ஒவ்வொரு மூன்று வாரங்களுக்கும் (6 முதல் 25 மாதங்கள்) டோஸ்டார்லிமாப் கொடுக்கப்பட்டது.
இரண்டாம் நிலை (செகண்ட் ஸ்டேஜ்) அல்லது மூன்றாம் நிலை (தேர்ட் ஸ்டேஜ்) மலக்குடல் புற்றுநோயால் கண்டறியப்பட்ட நோயாளிகளுக்கு சோதனை நடத்தப்பட்டது. வழமையில் உள்ள சிகிச்சைமுறையான கதிர்வீச்சு, கீமோதெரபி மற்றும் அறுவை சிகிச்சை ஆகியவை அப்போது கையாளப்படவில்லை. நரம்பு பின்னடைவுகள், மலட்டுத்தன்மை, குடல், சிறுநீர் மற்றும் பாலியல் பாதிப்பு போன்ற எதிர்வினையாற்றக் கூடிய அம்சங்கள் இதன்மூலம் முற்றிலும் இல்லாமல் போனது.

புற்றுநோயை வென்ற மருத்துவ வல்லுநர்கள் குழுவின் சார்பில் பேசிய பிரிவின் தலைவர் லூயிஸ் டயஸ், “நோயாளிகள் ஆறு மாத மருந்தை உட்கொண்ட பிறகு கடைசி இரண்டு (ஸ்டேஜ்) படி சிகிச்சையைப் பெற வேண்டும். சிகிச்சைக்குப் பிறகு அவர்களில் யாருக்கும் புற்றுநோயின் அறிகுறியே இல்லாததால், கீமோதெரபி அல்லது அறுவை சிகிச்சை தேவையில்லை.

குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், திடமான கட்டி புற்றுநோயில் நாங்கள் 100 சதவிகிதம் முழுமையான பதிலைப் பெற்றுள்ளோம், சாதாரண தரமான பராமரிப்பை நாங்கள் முற்றிலும் தவிர்த்துவிட்டோம் என்பது இதுவே முதல் முறை ! “ என்கிறார்.

தலையங்கக் கட்டுரை ஒன்றில், ”இந்த முடிவுகள் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன, ஆனால் அத்தகைய அணுகுமுறை இன்னும் எங்கள் தற்போதைய குணப்படுத்தும் சிகிச்சை அணுகுமுறையை மாற்ற முடியாது. வழங்கப்பட்ட இறுதிப் புள்ளி – மருத்துவ முழுமையான பதில் – நீண்டகால புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு மறைமுக ஊக்கி.

புற்றுநோய் மீண்டும் வருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். பதிலின் காலத்தை மதிப்பிடுவதற்கு நீண்ட (பாலோயப்) பின்தொடர்தல் தேவை. இந்த மறுநிகழ்வு இயக்கவியல் நோயெதிர்ப்பு சிகிச்சை மற்றும் வேதியியல் சிகிச்சை, ஆரம்ப மற்றும் பிற்பட்ட நிலை நோய்களுக்கு இடையில் வேறுபடலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்” ” என்கிறார், டாக்டர் சனோஃப்

கலிபோர்னியா பல்கலைக்கழக புற்றுநோய் நிபுணர் டாக்டர் அலன் பி வெனூக், ”பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்ட புற்றுநோயாளிகள் அனைவரும் குணமடைந்திருப்பது என்பது இதுவரை கேள்விப்படாத ஒன்று” என்கிறார் !

ந.பா.சேதுராமன்

(ஆங்கில மூலம் : Taran Deol – Down to Earth. org.in).

Exit mobile version