Madras Kural

ஆர்ம்ஸ்ட்ராங் கொலை- விலகாத மர்மம்!

பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூரில் கொடூரமான முறையில் கொல்லப் பட்டிருக்கிறார். விலகாத மர்மங்களை உள்ளடக்கியதாக கொலைக்கான பின்னணி நீளமாக போகிறது. ஒன்றன்பின் ஒன்றாக இந்த விவகாரத்தை அடுக்கி வைத்துப் பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லை.

காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் இடம்பெற்ற பெயர் கதிரவன். சென்னை புளியந்தோப்பு ரவுடி ஆர்க்காடு சுரேஷின் நண்பன். சென்ன கேசவலு என்கிற சின்னாவும், தென்னரசுவும் நண்பர்கள். தென்னரசு பகுஜன் சமாஜ் பார்ட்டியில் முக்கிய நிர்வாகி.

சென்ன கேசவலு Vs கதிரவன் முன்பகை என்பது ஊரறிந்த போலீஸ் ரகசியம். ஒருகட்டத்தில் கதிரவன் கொலை செய்யப்படுகிறார். முன் விரோதக் கொலை என்ற அடிப்படையில் கொலையாளி சென்ன கேசவலுதான்தான் என்று முடிவாகிறது.

மே 2010 – சென்ன கேசவலுவும் அவரது நண்பர் வழக்கறிஞர் பகத்சிங்கும் பூந்தமல்லி கோர்ட் வாசலில் காரில் வைத்தே கொலை செய்யப் படுகிறார்கள். உடனிருந்த பெண் வழக்கறிஞர் இதில் தப்பிக்கிறார்.
ஆர்க்காடு சுரேஷ் -கூட்டாளி அஞ்சலையுடன் இந்தக் கொலையை செய்ததாக முடிவாகிறது. முடிவுக்கு காரணம் முன்பகை.

அதன்பின்னர் தாதா லேபிலில் ஹிட் லிஸ்ட்டில் இருந்தவர்கள் தலை ஏதும் உருளவில்லை. ஐந்தாண்டுகள் நீடித்த அமைதி 2015 -ஆம் ஆண்டுகளில் சீர்குலைகிறது.

கதிரவன் கொலைக்கு உடந்தையாய் இருந்ததாக சென்ன கேசவலு நண்பரான பகுஜன் சமாஜ்பார்ட்டி தென்னரசு கொலை கொலை செய்யப்படுகிறார். ஆர்க்காடு சுரேஷ் தலைமையில் இந்தக்கொலை நடந்ததாக முடிவாகிறது. காரணம் முன்பகை.

பகுஜன் சமாஜ் பார்ட்டி தென்னரசுவின் சகோதரன், ரவுடி ‘பாம்’ சரவணன்.

பட்டினப்பாக்கம் கடற்கரை அருகே ஆர்க்காடு சுரேஷ் 2023-ம் ஆண்டு கொலை செய்யப்படுகிறார். சகோதரர் தென்னரசு கொலைக்கு பழிதீர்க்கும் விதமாக ‘பாம்’ சரவணன், இந்தக் கொலையை செய்ததாக முடிவாகிறது. காரணம் முன்பகை.
கொலை செய்யப்பட்ட தென்னரசு, பகுஜன்சமாஜ் பார்ட்டி என்பதால், ஆர்க்காடு சுரேஷ் கொலையின் பின்னணியில் கட்சியின் மாநிலத் தலைவரான ஆர்ம்ஸ்ட்ராங் மீது சந்தேகப்பார்வை விழுகிறது.
ஆர்க்காடு சுரேஷின் உறவினர்கள், கொலைக்கு காரணமானவர்கள் என்று கொடுத்த புகாரில் ஆர்ம்ஸ்ட்ராங் பெயரை சொல்லியிருந்தனர். விசாரணைக்குப் பின்னர் போலீசார், முகாந்திரம் இல்லையென்று கூறி ஆர்ம்ஸ்ட்ராங் பெயரை எஃப்.ஐ.ஆரில் சேர்க்கவில்லை.

ஜூலை 2024-ல் ஆர்ம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூரில் வீட்டுவாசலில் வைத்து கொலை செய்யப்படுகிறார்.

ஆர்க்காடு சுரேஷின் தம்பி புன்னை பாலு, ஆறுபேருடன் சென்னை அண்ணாநகர் போலீசில் சரண் அடைகிறார்.
“அண்ணன் ஆர்க்காடு சுரேசை கொலை செய்ததற்காக பழி தீர்த்துக் கொண்டோம்”- என்று வாக்குமூலம் கொடுக்கிறார்.

அதேவேளையில், “அவர்கள் உண்மைக் கொலையாளிகள் இல்லை. போலியான நபர்கள்தான் சரண் அடைந்துள்ளனர். உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை பெற்றுத்தர வேண்டும்” என்று ஆர்ம்ஸ்ட்ராங்கின் உறவினர்களும் கட்சியினரும் கோரிக்கை வைத்ததோடு கொலையில் அரசியல் பின்னணி இருப்பதாக தெரிவித்தனர். விசிக தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களும் அதையே தெரிவிக்கின்றனர். எதிர்க்கட்சி வரிசையில் உள்ள அதிமுக, பாமக, நாம் தமிழர், அமமுக, புதிய தமிழகம், புரட்சி பாரதம் கட்சியினரும் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலையைக் கண்டித்ததோடு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கேள்விக் குறியாகி விட்டதாக குற்றஞ்சாட்டி யுள்ளனர். பகுஜன் சமாஜ்கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி, சென்னைக்கு வந்து ஆர்ம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதோடு, ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தேவை என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விவகாரத்தில் கவனிக்கப்பட வேண்டிய அம்சம் எதுவென்றால், கொலையாளிகள் நாங்கள்தான் என்று சில மணி நேரங்களிலேயே எட்டுபேர் ஆஜரானதும்… அதே வேகத்தில் கொலையாளிகள் அவர்கள் இல்லை என்று ஆர்ம்ஸ்ட்ராங் தரப்பில் அவசர அவசரமாக மறுப்பு எழுந்ததும்தான்…

எப்போதுமே கொலை வழக்குகளில் கோர்ட்டில் ஆஜராகும் தொழில் ரீதியிலான கொலையாளிகள், போலீஸ் ஸ்டேசனில் ஆஜரானது சற்றே நெருடல்.

கொலையாளிகள் அந்த எட்டுபேர் அல்ல என்று அவசரகதியில் மறுப்பு தெரிவித்த அத்தனை பேருமே வேறொரு வடிவத்தில் வேறொரு கொலைகார குழுவின் தாக்குதலை எதிர்பார்த்து இருந்தார்கள் என்ற பொருள் இதன் பின்னால் புதைந்துள்ளதே…?

அரசியல் பின்னணி கொண்ட நிதி நிறுவன பங்கு பிரிப்பு, நிலத்தகராறு, ஆண்டுக்கணக்கில் நீடித்த முன்பகை தொடர்ச்சி என ஆர்ம்ஸ்ட்ராங் கொலையில் போலீஸ் நிறையவே விசாரிக்க வேண்டியுள்ளது.

கமிஷனர் அருண் /சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன்தேவாசிர்வாதம்

சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோடு இடமாற்றம் செய்யப்பட்டு புதிய கமிஷனராக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியான அருண் நியமனம் என்ற அறிவிப்பை சற்றுமுன் அரசு வெளியிட்டுள்ளது. அருண் வகித்து வந்த பொறுப்பில் டேவிட்சன் தேவாசிர்வாதம் நியமிக்கப் பட்டுள்ளார்.

ந.பா.சேதுராமன்

Exit mobile version