Madras Kural

பளீச் கண்ணு, ஸ்ட்ராங் கல்லீரலு, எரிச்சல் இல்லாத உச்சாவுக்கு வழி!

பெண் வளர்த்தியோ பீர்க்கு வளர்த்தியோ என்றொரு சொலவடை நாட்டில் உண்டு. அந்தளவுக்கு வேக வேகமாய் வளர்ந்து நிக்கிற நார்ச்சத்து மிகுந்த காய், பீர்க்கங்காய் ! ஞாயிற்றுக்கிழமைல மார்க்கெட்டுக்குப் போயி மிஸ்டர் பீர் பாட்டில வாங்கினாதான் ஆச்சுங்ற சன்டே சபதிஸ்ட்கள் (சபலிஸ்ட்டுகள் மாதிரி இது சபதிஸ்ட்) கையோட பைய்ல பீர்க்கங்காயையும் வாங்கிப் போட்டுக்குறது நல்லது. குடிகார மகன்களின் கல்லீரலைக் காப்பாத்தணும் என்றாலும், உஷ்ண நோய்களில் ஒன்றான காமாலையிலிருந்து ஆளை தேற்றணும் என்றாலும் நம்ம பீர்க்குப் பையனோட (பீர்க்கங்காய் தான்) தயவு நிச்சயம் வேணும்!


பகல்லியே பசுமாடு கண்ணுக்குத் தெரியலேம்பாங்களே, அது மாதிரி ஒரு கேரக்ட்டரு, நம்ம நட்பு லிஸ்ட்ல இருக்கான், கொஞ்சம் பீர் வண்டி, நிறையவே விஸ்கி வண்டி… அவனப் பத்தி வெளில பேசுனா அவமானம் தாங்க முடியாம பத்துநாள் பட்டினி கிடக்குற ஆளு. சோறு போட முடியாத நாம ஏன் அவனை பட்டினி போடோணும்? தின்னுட்டு நல்லாவே வாழட்டுமேன்னு, இந்த ஸ்டோரில அவன் பேரை எருமைன்னு வெச்சுக்கலாம்… இருந்தாலும் மோகன்னு இப் ‘போதை’ க்கு வெச்சுடறேன். இதை எழுதுவதற்கு சில நிமிடங்கள் முன்பு வரை ஜூஸ் கடையில் எதையோ உறிஞ்சிக் கொண்டிருந்தான் மோகன். கடைக்காரருக்கு பைசா கொடுக்கும் போதுதான் பார்த்தேன், இரண்டு டம்ளர் ஜூஸ் உள்ளே போயிருக்கிறது… “என்ன மச்சான், உச்சா (சிறுநீர்) போனா எரிச்சலா இருக்குன்னு சொல்லுவே, இப்ப எரிச்சல் எப்படியிருக்கு? என்றேன்! “பாத்தா தெரீலே, அதனாலதான லெமன் ஜூஸ் சாப்பிடறேன்” என்றான் மோகன். இனி எங்கள் வைத்திய உரையாடல் : “டேய் வெளெக்கெண்ண, லெமன் ஜூஸை இப்டி அடிக்கடி சாப்ட்டா மட்டும் உச்சா ஏரியா, க்ளியர் ஆவாது. வாரத்துல ஒருநாளு பீர்க்கங்காய் ஜூஸை அடி, உன்னோட கண்ணு பிரச்சினையும், சரக்கடிச்சு வீங்கிக் கிடக்குற உன்னோட கல்லீரல் பிரச்சினையும் குயிக்கா எஸ்கேப் ஆகிரும்”. “வூட்ல பீர்க்கங்காய் சாம்பார் வெப்பாங்க, அதையே நான் சாப்ட மாட்டேன் மாம்ஸ்… நீ சொல்றதப் பாத்தா நெறைய மேட்டரு பீர்க்கங்காய்ல இருக்கும் போலருக்கே?”
“இருக்கு மோகன். விட்டமின் சி நிறைய இருக்கு, துத்தநாகம் இருக்கு, அயர்ன் சத்து இருக்கு, இரும்பு, மெக்னீசியம், தயாமினுன்னு எக்கச்சக்கமா இருக்குடா” … “மச்சான், அயர்னும், தயாமினும் நம்ம பாடில ரொம்ப கம்மின்னு சொல்லி அதுக்குத் தனியா டேப்ளெட் எடுத்துக் கிட்டிருக்கேன், மாசத்துல அது மட்டுமே ஐயாயிரம் ஓவாவுக்கு மேல போவுது”… ” மச்சான் மோகனே, இப்பத்தான் ஓரளவுக்கு தெளிய ஆரம்பிச்சுருக்கே, பீர்க்கங்காய்ல
நீர்ச்சத்து அதிகம்கறதால மலச்சிக்கலுக்கும், மூலத்துக்கும் கூட இது எதிரி.
பெப்டைட், அப்புறம் ஆல்கலாயிட்ன்னு சில பெயர்களைச் சொன்னா உனக்குப் புரியாது, அதெல்லாம் இயற்கை இன்சுலின்னு வெச்சுக்கோயேன்… பிளட்டு, யூரின்லருக்க சுகரோட அளவை கட்டுப்படுத்துற வேலையைச் செய்யற வேலைக்காரங்கதான் இவங்க! இவங்க ரெண்டுபேருமே பீர்க்கங்காய்ல இருக்கவங்க. நோய்த்தொத்து தடுக்கறதுலயும், கல்லீரல காப்பாத்தறதுலயும் பீர்க்கங்காய் சாறுக்கு தனி இடம் இருக்கு மோகன்” …
“கண்ணுக்கு நல்லதுன்னு ஏதோ சொன்னியே மாம்ஸ்?” “உறுதியாவே சொல்றேன், பீர்க்கங்காய் கண்ணுக்கு ரொம்பவே நல்லதுதான். பீர்க்கங்காய்ல இருக்குற பீட்டா கரோட்டீன்கற பொருள்தான் கண்ணை காப்பாத்தி பளீச்ன்னு பார்வையை கொடுக்க வைக்குது… யாரும் பாக்கலேன்னா மரத்துக்கு முதுகைக் கொடுத்துட்டு இப்படியும் அப்படியும் பாடியை திருப்புவியே, இப்பவும் அப்படித்தான் பண்ணிட்டுருக்கியா?” ” ஏன் சேது, வெறுப்பேத்தற… மாசத்துல ஒரு சட்டையாவது கிழிஞ்சுடுது தெரியுமா?” “பீர்க்கங்காய் இலைகளை அரைச்சி வெச்சு பிரச்சினை இருக்குற இடத்துல பூசி ஊற வெச்சி, பூசுனது காய்ஞ்ச பின்னால குளிச்சுட்டு வந்தா போதும், அதுவே உன் சட்டைக்கும் உனக்கும் பாதுகாப்பு. சொறி சிரங்கு நாள்பட்ட புண்ணு எல்லாத்துக்கும் இதையே செய்யலாம். பீர்க்கங்காய் நாறுன்னு கேட்டா தமிழ் மருந்துகளை விக்குற கடைகள்ல கொடுப்பாங்க, அதை யூஸ் பண்ணி குளிச்சுட்டு வந்தாலும் ரிசல்ட்டு நல்லாருக்கும்”… “சரக்கடிக்காமயே என் வயிறெரியுது சேது… தமிழ்மருந்து கடைகளைத்தான் நாட்டு மருந்துக் கடைகள்ன்னு சொல்லி நம்மளை தூரமா ஓரங்கட்டுறாங்களா?” “புரிஞ்சா சரி ! ஆமா என்ன சொன்னே? வயிறெரியுதா? அமிலவாயு அதிக சுரப்பால் தான் வயிறு எரியும், அதை சரி பண்ணனும்னாலும் நீ பீர்க்கங்காய் சாப்பிட்டே ஆகணும் மோகன்”… பதிலே சொல்லவில்லை, விருட்டென்று கிளம்பி, மோகன் மார்க்கெட்டுக்குப் போயே விட்டான்…

எர்ணாவூர் பச்சிலை நம்பி

Exit mobile version