சென்னை புழல் பகுதியை சேர்ந்தவர் சங்கர். ஓய்வு அரசு மருத்துவர். தமக்கு முறைப்படி வந்து சேர வேண்டிய பணிக்கால பணப் பலன்களை பெற கடைசியாய் பணிபுரிந்த பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அங்கு சென்ற ஓய்வு மருத்துவர் சங்கர், சுகாதாரத்துறை அலுவலர் லோகேஷ் என்பவரைப் பார்த்து விபரத்தை சொல்லியிருக்கிறார். அப்போது லோகேஷ், ‘மாவட்ட சுகாதாரத்துறை தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் உயரதிகாரி ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும், கொடுத்தால் மட்டுமே காரியம் நடக்கும்’ என தெரிவித்துள்ளார்.
அவர் கூறிய அந்த உயர் அதிகாரியை தொடர்பு கொண்டு ஓய்வு மருத்துவர் சங்கர் கேட்ட போது, ‘ஆமாம். பணம் கொடுத்தால்தான் உங்கள் வேலை முடியும்’ என அந்த அதிகாரியும் கூறியதால் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து சென்னை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மருத்துவர் சங்கர் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் ஆலோசனைப்படி ரசாயன கலவை தடவிய பணத்தை பழவேற்காடு அரசு மருத்துவமனையில் உள்ள சுகாதாரத்துறை அலுவலர் லோகேஷிடம், மருத்துவர் சங்கர் கொடுத்தார். அந்தப் பணத்தை வாங்கிய லோகேஷ், அதை ரமேஷ் என்ற மருத்துவமனை ஊழியரிடம் கொடுத்தபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், கையும் களவுமாக லோகேசைப் பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓய்வு பெற்ற மருத்துவரிடமே அவர் பணியாற்றிய சுகாதாரத்துறை அலுவலக ஊழியர் லஞ்சம் பெற்று கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதே போன்று பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்படும் ஆதிதிராவிடர் நல அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தகவலின் பேரில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு அலுவலர்கள் யாரும் இல்லாததால் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திரும்பி சென்றனர்.
பொன்கோ. முத்து