
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை தனது 12.08.2025 தேதியிட்ட செய்திக் குறிப்பில் (Press Release), அரசு அமைத்த உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில்; மாநிலக் கல்விக் கொள்கையாகவே – பள்ளிக் கல்வி உருவானது என்றும், கொள்கை தொடக்க வரைவுதான், அது தொடர்ந்து கருத்துக்கள் பெற்று மேம்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த செய்திக் குறிப்பு அடிப்படையில், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறைக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளது. அதன் நகல் தலைமைச் செயலாளர் அவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அக்கடிதத்தில், உயர் மட்டக் குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில்தான், மாநிலக் கல்விக் கொள்கை – பள்ளிக் கல்வி உருவானது என்றால், உயர் மட்டக் குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும், வெளியிடப்பட்டுள்ள பள்ளிக் கல்வித் தொடர்பான மாநிலக் கல்விக் கொள்கையானது வரைவா; அல்லது இறுதியானதா? என்பதை; தெளிவு படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளது. உயர் மட்டக்குழுவில் இருந்தவர்களில் பலர், முப்பதாண்டு காலமாக சமமான கற்றல் வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று போராடிவருபவர்கள்; அப்படிப் பட்டவர்கள் இத்தகைய பரிந்துரைகள் தந்திருந்தால், அவர்கள் எந்த நோக்கத்திற்காக போராடினார்களோ; அதற்கே எதிராக பரிந்துரைகள் தந்ததாக அமைகிறது. பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் உயர் மட்டக் குழுவின் அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
பு.பா.பிரின்ஸ்கஜேந்திரபாபு (பொதுச்செயலாளர், பொதுப் பள்ளிக்கான மாநிலமேடை)