Madras Kural

இளையோர் குவிந்த அறிவுத் திருவிழா|

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இளையோர் திருவிழாபோல நடந்து முடிந்திருக்கிறது அறிவுத் திருவிழா. அரசியல் நூல்களின் அணிவகுப்பு என்ற அடையாளத்துடன் முற்போக்கு புத்தகக் காட்சி, 2025 நவம்பர் – 8 முதல் 16 ஆம் தேதி வரை நடைபெற்றது. திமுக இளைஞரணி செய்து முடித்த மகத்தான சேவை – சாதனை என்றே ஒற்றை வரியில் இதை கூறி விடலாம். புத்தகக் கண்காட்சி என்பதைத் தாண்டி, குடிநீர் மற்றும் உணவு ஏற்பாடுகளும் வெகு சிறப்பாக இருந்தது. நூல் அரங்கிற்கு வந்து போவோர், விலை கொடுத்து நூல்களை வாங்குவோர், வாசிப்போர் என அனைத்துத் தரப்பும் பாதுகாப்பு உணர்வோடு; சொந்த நூலகத்தை அணுகுவதுபோல அணுகும் வகையில் ஆகச் சிறந்த ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம், தமிழ்த்தேசியம், பெண்ணியம், முற்போக்கு அரசியல் என்று வகைப்படுத்தப்பட்ட புத்தகங்கள் மட்டுமே கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது சிறப்பு எனலாம். கண்காட்சி அரங்கிற்குள் எந்த வாசகர் வரக்கூடும் என்று முன்னரே தெளிவாக கணித்திருந்தனர் என்றே சொல்ல வேண்டும். திமுக இளைஞரணி கணிப்பு பொய்த்துப்போய் எட்டுநாள் கண்காட்சியும் கெட்டுத்தான் போகுமென்று யாரேனும் நினைத்திருந்தால் அதுதான் கெட்டுப் போயிருக்கும் என்றளவு புத்தக விற்பனை களைகட்டியது தனிக்கதை. பெயரளவில் திமுக இளைஞரணி நடத்துவதாக இல்லாமல் ஒவ்வொரு நாளும் ஒரு கவியரங்கம், கருத்தரங்கமாக அரங்கம் மிளிர்ந்தது.

கவிஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், பேராளர்கள் அரங்கின் விழா அரங்கை, தங்களுடைய கருத்துரைகளால் கட்டிப்போட்டனர். குறிப்பாய் கவிஞர் யுகபாரதியின் நடப்பு அரசியல் வெ (நெ) டி கலந்த பேச்சு சரவெடி. திமுக ‘ஐடி விங்’ ஆலோசகரும் மூத்த பத்திரிகையாளருமான கோவி.லெனின், பத்திரிகையாளர் சுகுணா திவாகர் உள்ளிட்டோரின் வீச்சு, அதிர்வலைகளை உண்டாக்கியது.

குளிரூட்டப்பட்ட அரங்கத்தில் 46 பதிப்பகங்கள் அரங்கு அமைத்திருந்தன. முதல் நாளே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ என்ற நூலின் விற்பனை அரங்கு முதலில் இருந்தது. சொல்லவும் வேணுமோ, ஆங்கே திமுக இளைஞரணியினர் குவிந்திருந்தனர்.

காலத்தின் நிறம் கருப்பு – சிவப்பு நூல் முழுமையாக உறுதுணையாய் நின்ற திராவிட இயக்க மூத்த எழுத்தாளர் திருநாவுக்கரசு, பத்திரிகையாளர்கள் ஜென்ராம், ஃப்ரண்ட் லைன் விஜயசங்கர் உள்ளிட்டோரை நேரில் தேடிப்போய் சந்தித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்து திரும்பிய கையோடு; நடந்தேறிய புத்தகக் காட்சி என்பதும் முன் கூட்டியே எதிர்பார்ப்புகளை எகிற வைத்தது எனலாம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது மிகுந்த பிரியம் கொண்ட எழுத்தாளுமைகளுள் ஒருவர், மூத்த பத்திரிகையாளர் தமிழ்மகன். தமிழ்மகனின் அரங்கான ‘மின்னங்காடி’ க்குள், முதலமைச்சரோடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நுழைந்து நூல்களை பார்ப்பார் என்று தமிழ்மகன் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார், ஆனால் அது நடந்தே விட்டது. மின்னங்காடி பதிப்பித்த அத்தனை புத்தகமும் விற்றுத் தீர்ந்துவிட்ட பெரு மகிழ்ச்சி தமிழ்மகன் முகத்தில் மின்னலடித்துக் காட்டியது. ஆண்டுக்கு இருமுறை இப்படியான புத்தகக் காட்சிகளை மாவட்டந்தோறும் நடத்தினாலே திமுகவுக்கு அது, ‘தனி’ வாக்கு சேகரிப்புத்தான்.

ந.பா.சேதுராமன்

Exit mobile version