Madras Kural

உஷ்ண நோய்கள்-மேகநோய் – சோர்வு கல்லடைப்பு தீர யானை நெருஞ்சில்!

’ஜானே… திருவண்ணாமலை முடிச்சுட்டு விழுப்புரம்
வந்துருக்கேன், எப்ப உன்னை பாக்கலாம் ?’
”ப்போடா… நெருஞ்சி இலைய நீ சொன்னமாதிரிதான் சாப்பிட்டன், ஆனாலும், கல்லு கரையல; இன்னும் வலிதான் அதிகமாயிடுச்சு”
‘வீடியோ கால் -ல அந்த இலையக் காட்டு’
“இதான் மச்சான், அந்த இலை!”
‘இன்னுமாடா நீ இருக்க… போட்டோவ்ல காட்டுனா சரியா இருக்காதுன்னு, உன்ன கூட்டிக்கிட்டுப் போயி நல்ல வெளிச்சத்துலதானடா இலைய காட்டுனேன்; நான் காட்டுன இலைய விட்டுட்டு வேறெதையோ புடுங்கிட்டு வந்துருக்கே… எருக்கம் இலையையும் சேத்துப் புடுங்கிட்டு வர வேண்டியதுதானே.. சரி விடு ! அட்ரசை லொக்கேசன் அனுப்பு நானே வரேன், நீ வெளில வரவேணாம்’…
நான் இருந்தது, விழுப்புரம் ஜங்சன். லொகேசனை ஜான் பகிர்ந்ததும், ‘அடடா’ என்றானது. அடுத்து மொபைலில் வந்தவன், ”விக்கிரவாண்டி ஊராட்சிலதான் சின்னதச்சூர் வருது. அங்கிருந்து மேக்கால நடந்தா கால் வலிக்கற நேரத்துள்ள ஈச்சங்குப்பம் வந்துடும்; அங்கிருந்து ஒரு பர்லாங் வந்தா…”
’வேணாம், மச்சான் நீயே வந்து கூட்டிட்டுப்போ’ என்ற, அடுத்த ஒரு மணிநேரத்தில் ஜான் வீட்டில் இருந்தேன். பைக்கில் போகும் போதே ரோட்டோரத்தில் நன்கு சதைப்பற்றாக வளர்ந்து நின்ற யானைநெருஞ்சிலை மறுபடியும் அவனுக்கு அடையாளம் காட்டி சில செடிகளை பறித்துக் கொண்டேன்.
மீண்டும் ஜான் பேச ஆரம்பித்தான்.

”என்னோட பிரச்சினை என்னன்னு சொல்லிட்டேன், ஏதோ தப்பான இலையைப் புடுங்கிட்டு வந்து, அதை உன்கிட்ட காட்டாம எடுத்துக்கிட்டதும் தப்புதான், இப்ப சொல்லு; எப்பிடி இதை சாப்புடணும்; என்னென்ன நோய்க்கெல்லாம் இது நல்லது”
’இது குளிர்ச்சி தரக்கூடிய ஒரு மூலிகை, மச்சான். இதோட. பொட்டானிக்கல் நேம் ’பெடாலியும் முரெக்ஸ்’ன்னு சொல்றாங்க.
சாதாரணமா சாப்பிடறதா இருந்தா மழைக்காலத்துல சாப்பிடாத, உன் உடம்பு சீதள உடம்பு; அதுக்கு இது தோது படாது. ஹீட் பாடியா இருந்தா, எல்லா காலத்திலும் சாப்பிடலாம்.
பத்து இலையை பிழிஞ்சியன்னா முப்பதுலருந்து நாப்பது கிராம் அளவுக்கு சாறு கிடைக்கும்; பாலோ மோரோ ஏதோ ஒன்னுத்துல அந்த சாறை கலந்து மூணு நாள் தொடர்ந்து குடிச்சீன்னா, மூத்திரக் கடுப்பு, உச்சா போவும்போது எரிச்சல், வலி எல்லாமே காணாமப் போயிடும். ஒண்ணுக்குல ரத்தம் போற பிரச்சினை இருந்தாலும் அது சரியாய்டும் !

யானை நெருஞ்சில் இலைய நிழல்ல, அதாண்டா வீட்டுக்குள்ளயே காய வெச்சிட்டு வா… கையில எடுத்துப் பாக்கும்போது பொல பொலன்னு உதிர்ற மாதிரி ஆகும் போது, அதை பொடியா அரைச்சுக்க… இதேபோல இது கூடவோ தனியாவோ, அருகம்புல்லையும் இதே மாதிரி செஞ்சிக்க. அருகம்புல்லை எங்கயும் தேடிட்ருக்க வேணாம். புள்ளையார் கோயில் வாசல்ல பத்து ரூபாய்க்கு ஒரு கட்டுன்னு விக்கறாங்க, வாங்கிக்க. ஏன் இதை புள்ளையாருக்கு வெச்சு கும்புடறாங்கன்ற கேள்விக்கும் ஒரு பதில் இருக்கு. பதினெண் சித்தர் பெருமக்கள், மொத மொதல்ல ஒரு மூலிகைப் பொருளா ஐடெண்டி பண்ணினது இந்த அருக்கம்புல்லைத் தானாம்; அதனாலதான் முதற்கடவுள் புள்ளையாருக்கு அதைக் கொடுத்துட்டு, கூடவே ஆப்ளிகேசனையும் அவர்கிட்ட மக்கள் வைக்கிறாங்க. சரி, இதை பேசுனா, இன்னொரு சப்ஜெக்ட்டுக்குள்ள போயிடுவோம், விஷயத்துக்கு வர்றேன். யானை நெருஞ்சில் தூளும், அருக்கம்புல் தூளும் ஒன்னா சேர்த்துக்க, ஒன்னா சேர்ந்ததும் அதுல அரை ஸ்பூன் பொடியை எடுத்து பசும்பாலுல கலந்து காலையிலயும், சாயங்காலம் ஆறு மணிக்கு முன்னாலயும் மூணுநாளு குடிச்சா, வெட்டைச்சூடு, ரத்தப்போக்கு குணமாயிடும், நரம்பு மண்டலங்கள்லாம் உற்சாகமாயி யாரையாவது உதைக்கணும்கற மாதிரி உடம்பு திமிராயிடும். இன்னும் தேவைன்னா, பத்து நாளைக்கு இதே மாதிரி எடுத்துக்க; அதுக்குப் பிறகு வேணாம்.’

”நெருஞ்சி இலைக்கு மேலே மஞ்சளா ஒரு பூவும், சின்னச்சின்னதா காய்ங்களும் இருக்குதே மச்சான், அதுவும் நாம் யூஸ் பண்ற பொருளுங்கதானா?”
’உனக்கு எத்தனை பசங்க?’
”நாலு”
’அப்ப தேசத்துரோகின்னு சொல்லு… எதெதுக்குப் பயன்படும்னு சொல்றேன், நீ பயன்படுத்தாத, நாலு பேருக்கு சொல்லு. ராணுவ ரகசியம் மாதிரி உனக்குள்ளயே புதைச்சுக்காத. உன்னப் போல நாலு பேருக்கிட்ட நான் இதையெல்லாம் சொல்றதே நாலாயிரம் பேருக்கு தகவல் போய்ச் சேரணும்கறதுக்காகத்தான், புரியுதா… சொல்றேன், குறிச்சுக்க !
யானைநெருஞ்சி விதையை பாலுல அவிக்கணும். அவியல் எப்படீன்னு தெரியலேன்னா, யார்கிட்டயாவது கேட்டுக்க, அதை விட்டுட்டு விதைய பால்ல ஊற விட்டுட்டு அவிச்சிட்டேன்னு சொல்லாத. பாலுல விதைய அவிச்சிட்ட பிறகு, அந்த விதையை நிழல்ல காயப்போட்டுட்டு அது கைய்ல நொறுங்கறளவுக்கு காத்திருக்கணும்; ஒரு வாரமோ பத்துநாளோ கூட ஆகலாம். விதை நல்லா நொறுங்கறளவுக்கு வந்ததும், அதைப் பொடி செய்ஞ்சி சுடுதண்ணில ஒரு சிட்டிகை போட்டு குடிச்சுட்டு வந்தா, உடம்பு முறுக்கேறி நிக்கும். ஆண்மை குறை பாட்டை மொத்தமா சரி செய்ற, வித்தைக்கார விதை இது ! அதே பொடியை எளநீர்ல கலந்து சாப்பிட்டுட்டு வந்தா, கல்லடைப்பு சரியாவும், மூத்திரப்பாதைல இருக்கற எல்லாக் கோளாறும் குணமாயிடும்.
யானைநெருஞ்சில் காயை இதே மாதிரி நிழல்ல காயப்போட்டு அதை தூள் செய்ஞ்சி வெச்சுக்க. அதே மாதிரி பசும்பாலுல அரை ஸ்பூன் இந்தப் பொடியைக் கலந்து சாப்பிட்டுக்கிட்டு வந்தா, நீரடைப்பு, சதையடைப்பு, வெட்டை, எலும்புருக்கி நோய்ன்னு பல பிரச்சினை, ‘பாடி’ யை விட்டு, ‘லெப்ட்’ ஆயிடும்; ஆமாண்டா ஓடியே போயிடும்! வயசான காலத்துல உண்டாகுற பிராஸ்டேட் சுரப்பி வீக்கத்தை சரி பண்ணி, அதை சரியான முறையில் சுரக்கச் செய்யற வேலையையும், யானை நெருஞ்சில் இலை பாத்துக்குது. அடிவயிற்றுவலி, உடம்பு எரிச்சலு, அதிக தாகம், பித்தம், பித்த மயக்கங்களுக்கு நல்ல தீர்வைக் கொடுக்குது. உடம்புல வரக்கூடிய வெண்புள்ளிகளுக்கும் இது தீர்வைக் கொடுக்கறதா சித்தர் பாடல் ஒன்னு சொல்லுது!
“மேகத்தைப் போக்கிவிடும் வெண்குஷ்டந் தானுக்கு தேகத்திற் கல்லடைப்பைத் தீர்க்குங்கா – கைத்தாந் தேனையரும் பாகைத் திருத்துங் கிளிமொழியே யானை நெருஞ்சிலது !” ன்னு பாட்டுல மொத்தக்கதையும் இருக்குது.
கல்லீரல் வீக்கம், மன அழுத்தம், உடல் சோர்வு, பெண்களின் முக்கியப் பிரச்சினையா சொல்லப்படுற வெள்ளைப்படுதல் போன்றவற்றுக்கு இந்த இலையும், தண்டும், காயும், பூவும் தீர்வு மச்சான். பூவைப் பத்தி ஒன்னும் சொல்லலையேன்னு நினைக்காத; அதையும் நிழல் காய்ச்சல்ல வெச்சு, உதிர்ந்ததும் பொடியாக்கி, கால் ஸ்பூன் அளவு பசும்பால்ல கலந்து சாப்பிடும் போது நான் முன்னால சொன்ன பிரச்சினைகள் அத்தனைக்கும் விடிவுகாலம் பிறக்கும் !
இது எதுவுமே வேணாம், என்னால முடியாதுங்கறியா, அப்ப இதை செய்! வெறும் இலை – தண்டை கொண்டாந்து தண்ணில போட்டு அரை மணிநேரம் ஊற விட்ட பின்னால அந்த தண்ணிய குடிச்சுட்டு வந்தாலே போதும். தண்ணி பிசுபிசுன்னு வெண்டக்காய் கோந்து போல லைட் க்ரீன் கலர்ல தெரியும்’…
“லைட் க்ரீன்ல தெரியலே, பிசுபிசுன்னு வரலேன்னா?”
‘அப்ப நீ புடுங்குனது யானை நெருஞ்சில் இலை இல்லேன்னு அர்த்தம் ! வண்டி கட்டிக்கின்னு விழுப்புரம் தாண்டி விக்கிரவாண்டிக்கு நான் வந்திருக்கக் கூடாதுடா; உன்னை வரவெச்சிருக்கணும்… சரி நான் கிளம்பறேன், நம்ம சகலை வெங்கிக்கு ஒரு பிரச்சினை, அங்கதான் போறேன்…


எர்ணாவூர் பச்சிலை நம்பி

Exit mobile version