Madras Kural

சசிகலா|விஜய்|மருத்துவர் + கூட்டணி|

திருமதி வி.என்.சசிகலா அகில இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் (அஇபுதமமுக) என்ற புதிய கட்சி அறிமுகமும், தென்னந்தோப்பு சின்னமும் ஒருசேர 13.3.2026- ஆம் தேதி அறிவித்து செய்தியாளர் சந்திப்பும் நடத்திவிட்டார். உடன்பிறவா சகோதரி என்று மறைந்த மேனாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அம்மையாரால் அழைக்கப்பட்டவர் சசிகலா. ஜெயலலிதாவுக்கு ராசியான நம்பரான ஒன்பதே கூட்டுத்தொகையாக வரும்படியான நாளில் (13.3.2026) புதிய கட்சியை அறிமுகம் செய்துள்ளார் சசிகலா.

முதலமைச்சர் இருக்கையில் அமர அத்தனை எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதம் கையில் இருந்த பொன்னான வேளையில்தான் சசிகலாவுக்கு எதிரான தீர்ப்பு வந்ததும், சிறைக்குப் போகும் முன்னே ‘கூவத்தூர்’ காட்சிகள் நடந்து முடிந்ததுமான பல நிகழ்வுகள்… அதிமுக என்ற அடையாளத்தோடு முதலமைச்சர்களான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே. பழனிசாமி, கட்சியின் சக்தி மிகுந்த மனிதரான டிடிவி தினகரன் என ஆளுக்கொரு திசைவழிப் பயணமும் இதன் பின்னே ஏற்பட்டுப்போனது. அதிமுகவில் இருந்து சசிகலா, ஓபிஎஸ், டிடிவி போன்றோர் அதிமுகவின் புதிய பொதுச் செயலாளரான எடப்பாடியால் ஓரங்கட்டப்பட்டனர். அதிமுகவை எடப்பாடி தரப்பிடம் இருந்து மீட்கும் தொண்டர்கள் பேரமைப்பை உருவாக்கிப் பயணம் ஓபிஎஸ் பயணம் தொடங்கினார்.

டிடிவியோ அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற தனிக்கட்சியை உருவாக்கி பயணத்தை மாற்றிக் கொண்டார். சசிகலா மட்டும் அவருக்கு சொந்தமான ஜெயா டிவி குழும சேனல்களில் தினமும் அறிக்கை பேட்டி என அதிமுக பொதுச்செயலாளர் என்றே அறிவித்து வெளிப்பட்டு வந்தார். இந்நிலையில்தான் அஇபுதமமுக என்ற கட்சியைத் தொடங்கி சின்னமும் பெற்று தேர்தல் பணியைத் தொடங்கியுள்ளார். “தொண்டர் ஒருவர் பதிவு செய்திருந்த பெயரைப் பெற்று புரட்சித்தலைவர் கட்சி தொடங்கியதைப் போலவே நானும் ஒரு தொண்டரின் கட்சியைப் பெற்றுள்ளேன், எனது சின்னம் தென்னந்தோப்பு, நான் தனிமரமாக வரவில்லை, தோப்பாக வந்திருக்கிறேன், எல்லோரும் நாட்டின் முதலமைச்சர் நான்தான் என்று பேசித் திரிவதுதான் புரியவில்லை; நான் ஒருத்தி இருப்பதை அனைவருமே மறந்து விட்டது வியப்பாக இருக்கிறது” என்று சசிகலா பேசியதை எளிதில் கடந்து போய்விட முடியாது. அதிமுக மீட்புக்குழு உருவாக்கி, முடிந்தவரை போராடிப் பார்த்துவிட்டு ஓய்ந்த வேளையில்தான்; திமுகவில் இணைந்து விட்டார் ஓபிஎஸ். அவருக்கு முன்னதாக தென்மாவட்ட அதிமுகவின் மேனாள் மந்திரிகள், முன்னணி அதிமுக முகங்கள் திமுகவில் டபுள் டிஜிட்டில் அடுத்தடுத்து இணைந்தே விட்டன. கடைசியாக ரெயிலைப் பிடித்தவர்தான் ஓபிஎஸ். மூன்று முறை அதிமுக என்ற அடையாளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பில் இருந்தவர், தம்மை பிப்ரவரி 2026-ல் திமுகவில் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். போகும்போது அதிமுக மேனாள் எம்.பி.யான மகன், ரவீந்திரநாத் ஜெயனையும் அழைத்துப் போய் திமுகவில் உறுப்பினராக்கி விட்டார்.

ஓபிஎஸ், சசிகலா, தினகரன் வரிசையை அதிமுகவில் இணைத்துக் கொள்ள, ஈ.பி.எஸ்., மட்டுமல்ல, கட்சியில் முக்கிய தலைகளில் பலரும் எதிர்ப்பு காட்டினர். டி.ஜெயகுமார், கே.பி. முனுசாமி, சி.வி. சண்முகம், ஆர்.பி.உதயகுமார் போன்றோர் கடுமையாகவே எதிர்த்தனர். இப்படியான காலகட்டத்தில்தான் ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24- 2026 ல் கட்சிக்கான அறிவிப்பை கொடுத்து விட்டு, 2026 -மார்ச் 13 -ல் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை அறிவித்துள்ளார் சசிகலா. இதற்கு இரு தினங்கள் முன்னதாக, கட்சி மற்றும் சின்னம் இல்லாத, தொண்டர்கள் பலம் மட்டும் குன்றாத மருத்துவர் ராமதாசு – சசிகலா சந்திப்பு நிகழ்ந்துள்ளது. திமுகவில் கதவு திறக்கும் என்று மருத்துவர் காத்திருப்பதாகவும், விசிக அதற்குத் தடையாக உள்ளதாகவும், சில கருத்துரு அதே காலகட்டத்தில் தோன்றி மறைந்து ஆட்டங்காட்டியது தனிக்கதை. இந்நிலையில்தான் சசிகலா, மருத்துவர் சந்திப்போடு, தவெக தரப்பு சந்திப்பும் நடந்துள்ளதாக தெரிகிறது. நான்தான் முதலமைச்சர் என்பதில் தவெக தலைவர் விஜய் காட்டும் உறுதியை சசிகலாவோ, மருத்துவரோ இதுவரை காட்டியதில்லை. அந்த அடிப்படையில் இந்த மூவர் ஓரணியாய் கைகோக்கவே அதிக வாய்ப்பு நிலவுகிறது. பாஜகவைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் திமுகவை வெற்றிபெற வைக்கக்கூடாது என்ற ஒற்றை குறிக்கோள் மட்டும்தான். விஜய் மீதான அல்லது விஜய் தொடர்பான ஜனநாயகன் படரிலீஸ், கரூர் கூட்ட கலவரத்தினால் உண்டான 41இறப்புகள் என பல விசாரணைகளின் பின்னால்; பாஜக அரசியல் வலுவாய் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அதுகுறித்து தொடர்ந்து பேசியும், எழுதியும் வருகின்றனர். விஜய்க்கும் அவரது தவெகவுக்கும் எதிர்காலம் பிரகாசமாக இருக்க, அவர் பாஜகவின் தமிழ்நாட்டுக் (என்.டி.ஏ.) கூட்டணியில் வரவேண்டும், அல்லது பாஜக ஏற்றுக் கொள்கிற – விரும்புகிற கூட்டணியை கட்டமைக்க வேண்டும்; இதற்கு மட்டுமே இப்போது வாய்ப்பும் சூழலும் உள்ளது. சசிகலாவே முன்னின்று அதை செய்யத் தொடங்கியிருக்கிறார்…

நடந்து முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் வட மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலுமாகச் சேர்த்து அறுபது தொகுதிகளை ஐநூறு முதல் ஐந்தாயிர வாக்குகள் வித்தியாசத்தில்தான் அதிமுக இழந்திருந்தது. அந்த இடங்களில் பாமக (வடமாவட்டம்) வும், அமமுகவும் (தென் மாவட்டம்) தொகுதிக்கு ஐந்தாயிரம் தொடங்கி ஐம்பதாயிரம் வாக்குகள் வரை பெற்றிருந்தனர். அதேபோல் தனி மனிதனாக ஓபிஎஸ் மட்டுமே சில லட்சம் வாக்குகளையும், சசிகலாவின் ஆதரவு பெற்ற வாக்காளர்கள் சுயேச்சையாகவே சில லட்சம் வாக்குகளையும் அறுவடை செய்திருந்தனர். இப்போது மருத்துவர் அன்புமணியின் பாமக, டிடிவி தினகரனின் அமமுக ஆகிய கட்சிகள் அதிமுக கூட்டணியிலும், ஓபிஎஸ்சின் ‘தனியொருவன்’ அமைப்பு திமுக கூட்டணியிலும் இப்போது உள்ளன. அதிமுகவின் தென்மாவட்ட ஒரு பகுதி அடையாளமான சசிகலாவும், வடமாவட்ட ஒரு பகுதி அதாவது பாதி மாம்பழ அடையாளமான மருத்துவர் ராமதாசும் ஓரணியில் நிற்க; இவர்களை சுமந்தோ அல்லது இவர்களது தேர்தல் அனுபவத்தை பயன்படுத்தியோ தவெகவின் பயணத்திட்டம் இரண்டொரு நாளில் உறுதிப்பட்டு விடும். பாஜக அணியில் தவெக சேராது, அப்படி சேரவும் பாஜக வலியுறுத்தாது, பாஜக உருவாக்கும் அணிக்கு தவெக தலைமை தாங்கும்; அது மட்டுமே சாத்தியப்படும். சொல்லப்போனால், இந்த அணியில், ‘பங்கீடு’ அதிருப்தியிலுள்ள இன்னும் சில கட்சிகளும் இடம் பிடிக்கக்கூடும்.

ந.பா.சேதுராமன்

Exit mobile version