Madras Kural

பாஜக-அதிமுக கூட்டணி ரகசியம்!

தமிழ்நாட்டில் தேர்தல் கூட்டணியின் இறுதிச்சுற்று – கடைசிச் சொட்டு தேநீரை உறிஞ்சுகிற நொடிகளில் இருக்கிறது.

தேர்தலில் கூட்டணி சேர்ப்பில் தமாகாவுக்கு பெரிய ரோல் இருக்கிறது.

“எடப்பாடி பழனிசாமியை நேரில் பார்த்துப் பேசிவிட்டேன். பாஜக அண்ணாமலையிடம் போனில் பேசி விட்டேன். நாளை பாமக அன்புமணியை சந்திக்கிறேன். அதிமுகவும் பாஜகவும் இணைந்தால்தான் பொதுஎதிரியை வீழ்த்த முடியும்” – என்று ஸ்பீடா மீட்டரை விட வேகம் காட்டுகிறார் ஜிகேவாசன்.

பாஜக- அதிமுக கூட்டணி விவகாரத்தை ஜிகேவாசன்தான் முதலில் பூடகமாக வெளியில் சொன்னவர். செய்தியாகவும் மாறியவர். பின்னர் பாஜக சைடிலிருந்து வேறு மாதிரி எதிர்வினை வரவே, சொன்ன கருத்துக்கே எதிர்கருத்தை சொல்லி வருகிறார்.

“பாமக அன்புமணி ராமதாசும் தேமுதிக பிரேமலதா விஜயகாந்த்தும் நேரடியாக ராஜ்யசபா எம்.பி. ஆக்கப்பட்டு அப்படியே மத்திய அமைச்சர் ஆகிறார்கள்” – என்கிற தகவலும் வலுவில் கசிகிறது.

இதைக் கேள்விப்பட்டதும் பலர் வரிசையில் வந்து சிரித்து வைக்கலாம். பல நேரங்களில் இப்படிப்பட்ட சிரிப்புகள் இடம் மாறிப் போவதுதான் காலத்தின் கைவண்ணம்.

பாஜகவை நேற்றுவரை எதிர்த்த அதிமுக முன்னணி லீடர் டி.ஜெயகுமார், “தேர்தல் கூட்டணியைப் பொறுத்தவரை கடைசி நேரத்தில் எதுவும் நடக்கலாம்” என்று சொல்லியிருப்பதை, ஜிகேவாசன் ட்ராக்கிலேயே கொஞ்ச தூரத்துக்கு ஓடிப் போய் பார்த்து புரிந்திட தேவை இல்லை.
கதம் கதம். அவ்வளவுதான்.

இப்போது தனியாக நிற்கிறோம். 2026- ல் உங்களோடு கைகோக்கிறோம் – என்று பாஜகவிடம் அதிமுக சொல்வதாக வைத்துக் கொண்டாலும் ” 2024 ஐ மட்டும் பேசுங்கள். 2026- ஐ பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்றுதான் பாஜக சொல்லும். பெரிய பிம்பத்தை கட்டமைத்து வெளியில் காட்டிக் கொண்டாலும் அதிமுகவைத் தவிர்த்து பாஜகவுக்கு கூட்டணி அமைக்க வேறு வழி இல்லை.

இந்தப் பக்கம் களநிலவரமே வேறு. கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டு (கள்), மதிமுக, விசிகவுக்கு கொடுத்தது போக திமுகவுக்கு மிஞ்சப்போவது 15 தொகுதிக்கும் குறைவாகத்தான் இருக்கும். இதுபோக அறிவாலயத்தை நம்பி வந்திருக்கும் மய்யம் கமலஹாசன் போன்றோர் லிஸ்ட்டும் இன்னொரு பக்கம் முட்டிக் கொண்டிருக்கிறது.

கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு ‘சீட்’ ஒதுக்கீடுதான் திமுகவுக்கு, பாஜகவைவிட பெரிய சவாலாக இருக்கப் போகிறது.

ந.பா.சே

ந.பா.சேதுராமன்
04.02.2024
madraskural.com

Exit mobile version