(தொடர் பதிவு – 5)
என்னுடைய முந்தைய 4 பதிவுகளில் (கட்டுரைகள்) பரிகாரங்கள் எப்படி பலன் தருகின்றன என்பதை பார்த்தோம். ஒருவருக்கு வாழ்க்கையில் ஏற்படும் தடைகள், தாமதங்கள் அது எதனால் ஏற்படுகிறது என்பது குறித்தும்; எந்த கிரகம் எந்த விதமான பாதிப்புகளை ஏற்படுத்தும், அந்த கிரகத்திற்கு எந்த வகையில் பரிகாரம் செய்வது என்பது குறித்தும் இனி பார்க்கலாம்.
இன்றய காலகட்டத்தில் பரிகாரம் பலன் தருவது இல்லை. ஜோதிட சாஸ்திரத்தில் பரிகாரம் என்று எங்குமே குறிப்பிடப்படவில்லை. பரிகாரம் என்பது பணம் சம்பாதிக்க பயன்படுத்துவது என்ற கருத்துகளும் நிலவுகிறது. பல யூ டியூப் சானல்களில் ஜோதிட பலன்கள், பரிகாரங்கள் பற்றி குறிப்பிடப்படுகின்றன. ஜோதிடம் குறித்தும் பரிகாரம் குறித்தும் பொதுமக்கள் குழம்பாமல் இருக்கவும் நன்கு அறிந்து கொள்ளவும், இந்த பதிவுகள் போடப்படுகின்றன.
ஜோதிடம் இரண்டு பிரிவுகளை கொண்டது! (1) வான சாஸ்திரம், (2) ஆன்மீகம். வானசாஸ்திரம் தெரிந்தால்தான், வான் வெளியில் கிரகங்கள் சஞ்சரிக்கும் நிலை- அதாவது 360 பாகைக்குள் கிரகங்கள் இருக்கும் நிலை பற்றி அறிந்து கொள்ள முடியும். அதே போல் பொது மணி , சுதேசமணி அதாவது உள்ளூர் நேரம், கிரீன்வீச் நேரம் குறித்தும் அறிந்து கொள்ளவேண்டும். அப்போதுதான் ஜாதகத்தில் முதலாவது வீடு அல்லது முதலாவது பாவம் குறிப்பிடும் லக்னம் குறிக்க முடியும். இந்த முதலாவது வீட்டை வைத்து தான் ஒருவரது ஜாதகத்தில் மற்ற கிரகங்கள் இருக்கும் வீடுகள் அல்லது பாவங்களை சரியாக குறிப்பிட முடியும். அவ்வாறு குறிப்பிட்டால்தான் அந்த கிரகம் அந்த ஜாதகருக்கு நன்மை செய்யுமா அல்லது தீமை செய்யுமா என கண்டறிந்து அதற்கான பரிகாரங்களை செய்ய முடியும். அதனால் வானசாஸ்திரம் தெரிவது அவசியம். அதற்காக கஷ்டப்பட வேண்டாம், இன்றைய திருக்கணித பஞ்சாங்கங்களில் கிரகங்கள் தினமும்; எந்த பாகையில் சஞ்சாரம் செய்கின்றன என்பது தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
ஆன்மீகம் என்பதில்தான் கிரகங்களை கடவுளாக வணங்குவதும், அந்த கிரகங்களுக்கு ப்ரீதி செய்வதின் மூலமும் கிரகங்களால் ஏற்படும் பாதிப்பில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்வதும் வருகிறது. ஜோதிடத்தில் வானியல் மற்றும் ஆன்மிகம் இரண்டும் சேர்ந்து இருப்பதால்தான் அதனை “ஆர்ட்ஸ்” எனப்படும் கலைபிரிவின் கீழ் பல்கலைக் கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. ஆன்மிகம் என்றாலே அங்கு தெய்வ பக்தி வந்து விடுகிறது. அதனால் தெய்வ அனுகிரகம் இருந்தால் தான் ஒரு ஜோதிடர், ஒரு ஜாதகருக்கு பலன் தரும் விதத்தில் பரிகாரம் சொல்ல முடியும்.
பண்டைய காலங்களில் ரிஷிகள், முனிவர்கள், ஜோதிடசாஸ்திரத்தை நன்கு கண்டறிந்து பல நூல்களை எழுதியுள்ளார்கள். அவர்கள் அந்த நூல்களில் வானியல் குறித்து குறிப்பிட்டுள்ளார்கள். கிரகங்களின் அசைவுகளையும் அவற்றில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகளையும் அவர்கள் கண்டதால் அதனை ‘ஜோதி’ என்றும் ‘ஒளி’ என்றும் பொருள்படும் வகையில் ஜோதிஷம் என்று குறிப்பிட்டார்கள். மேலும் கிரகங்களின் காரகத்துவங்கள், 12 வீடுகள், அவற்றில் இருக்கும் கிரகங்கள் அவை தரும் பலன்கள் என பல தகவல்களையும் குறிப்பிட்டுள்ளார்கள். புராணங்களில் கிரகங்களால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் அவற்றை நீக்க பரிகாரங்கள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்திய ஜோதிடமாக இருந்தாலும் மேலை நாட்டு ஜோதிடமாக இருந்தாலும் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி ஆகிய கிரகங்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. இந்த கிரகங்களுக்கு ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிட்ட பொறுப்புக்களை கொடுத்துள்ளார்கள்.. சூரியன் என்பதற்கு தந்தை, ஆத்மா, அதிகாரம் உடல் உறுப்புக்களில் தலை என்று கொடுத்துள்ளார்கள்.. அதே போல் சுக்கிரனுக்கு களத்திரக்கராகன்: ஆடை ஆபரணம் என்று பிரித்து இருக்கிறார்கள்.
இங்குதான் ஏன் சூரியனுக்கு அந்த பொறுப்புகளை கொடுத்துள்ளார்கள், ஏன் சுக்கிரனுக்கு அதை கொடுக்க வில்லை; என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன. இந்த கேள்விகள் குழப்பம் தருவதுபோல் இருந்தாலும் அவற்றுக்கும் பதில் உள்ளது.
பூமியில் இருந்து கிரகங்கள் இருக்கும் தூரம் அவற்றில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சின் தாக்கம் அதனால் மனிதருக்கு ஏற்படும் மாற்றங்கள் என பலவற்றை கருத்தில் கொண்டு கிரகங்களுக்கான பொறுப்புகள் தரப்பட்டுள்ளன.
(மீதி அடுத்த பதிவில்)
(கட்டுரையாளர்: ஜோதிடரத்னா பஞ்சாங்க கணிதமணி பூம்புகார் ஜி.ஸ்ரீனிவாசன் M.A (Astrology) தொடர்புக்கு: வாட்சப் எண்: 9499902400 – கைபேசி > 9080082200-)