(தொடர் பதிவு -10)
ஒருவர் கல்வியில் வெற்றி பெற என்ன பரிகாரம் செய்யலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
கல்வி என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்று. குழந்தை பருவத்தில் இருந்தே சிலர் நன்கு கல்வி கற்கிறார்கள். சிலர் கல்வி கற்பதில் அதிக ஆர்வம் காண்பிப்பதில்லை. பெற்றோர்களுக்கு தங்கள் மகன் / மகள் சரிவர படிப்பதில்லையே என்ற கவலை உள்ளது. சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் படிக்க என்ன பரிகாரம் செய்யலாம் என்று கேட்கிறார்கள். கல்வியில் ஆர்வம் காட்டாதது ஏன் அதற்காக என்ன பரிகாரங்கள் செய்யலாம் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
ஒருவரது ஜனன ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 2 ம் வீடு ஆரம்ப கல்வியை குறிக்கும். 4ம் வீடு உயர் கல்வியை குறிக்கும். இரண்டாம் வீட்டில் பாப கிரகம் இருந்து, அந்த வீடு அசுபர் பார்வை பெற்று, அதன் அதிபர் மறைவு ஸ்தானங்களில் இருந்து, அசுபர் சேர்க்கை பெறுவது; இது போன்று இரண்டாம் வீடு ஏதாவது ஒருவகையில் பாதிக்கப்பட்டால்; அந்த ஜாதகருக்கு ஆரம்ப கல்வியில் பாதிப்புகள் ஏற்படும். இதே போல் 4ம் வீட்டில் பாப கிரகம் இருந்து, அந்த வீடு அசுபர் பார்வை பெற்று, அதன் அதிபர் மறைவு ஸ்தானங்களில் இருந்து, அசுபர் சேர்க்கை பெற்று இது போன்று நான்காம் வீடு ஏதாவது ஒருவகையில் பாதிக்கப்பட்டால் அந்த ஜாதகருக்கு உயர் கல்வியில் பாதிப்புகள் ஏற்படும். மேலும் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5 ம் வீடு பாதிக்கப்பட்டாலும் கல்வியில் தடைகள் ஏற்படும்.
இரண்டாம் வீடு பாதிக்கப்பட்டு 4 ம் வீடு பலம் பெற்று இருந்தால், ஆரம்ப கல்வியில் தட்டுதடுமாறும் அந்த ஜாதகர்; உயர் கல்வியில் சிறந்து விளங்குவார். அதே போல், இரண்டாம் வீடு பலம்பெற்று ஏதாவது ஒரு வகையில் 4ம்வீடு பாதிக்கப்பட்டால்; அந்த ஜாதகர் ஆரம்ப கல்வியில் சிறப்பாக படித்தாலும்; உயர் கல்வி பாதிக்கப்படக்கூடும். மேலும் கல்வியை குறிக்கும் கிரகம் புதனாகும். ஒருவரது ஜாதகத்தில் புதன் ஏதாவது ஒரு வகையில் பலம் இழந்து இருந்தாலும் அந்த ஜாதகருக்கு கல்வியில் தடுமாற்றங்கள் ஏற்படும். மனதை குறிக்கும் மனோகாரகனான சந்திரன், ஒருவரது ஜாதகத்தில் கெட்டு இருந்தாலும்; அந்த ஜாதகர் சிந்தனை பலவிதங்களில் பாதிக்கப்பட்டு, படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். அறிவுக்கு அதிபதியான குரு, ஒருவரது ஜாதகத்தில் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அந்த ஜாதகருக்கு கல்வி பாதிக்கப்படும்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் கல்வி : லக்னம், 3, 6, 10, 11 ஆகிய வீடுகள், அந்த வீட்டு அதிபதிகள். சூரியன் ,செவ்வாய் கிரகங்கள் பலம் பெற்று இருக்க வேண்டும்.
இன்ஜினியரிங் கல்வி: நான்காம் வீட்டுடன் செவ்வாய் தொடர்பு இருப்பதுடன் புதனுடனும் தொடர்பு இருந்தால் இன்ஜினியரிங் படிக்க முடியும். தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டுடன் இந்த கிரகங்கள் தொடர்பு பெற்றால் அந்த ஜாதகர் இன்ஜினியராக வேலை பார்க்க முடியும்.
மருத்துவக் கல்வி: 4 ம் வீடு மற்றும் 10ம் வீட்டுடன் சூரியன், செவ்வாய் தொடர்பு கொண்டு இருப்பதுடன், அவர் பலம் பெற்றும் இருக்க வேண்டும். இவர்களுடன் ராகு அல்லது கேது இணைந்து இருந்தாலும் மருத்துவராகலாம்.
வழக்கறிஞர் கல்வி : 2, 5, 6,10ம் வீடுகள், குரு, செவ்வாய், புதன் ஆகிய கிரகங்கள் பலம் பெற்று இருக்க வேண்டும். மேலும் இவற்றுக்கு தொடர்பும் இருக்க வேண்டும். அப்போதுதான் சிறப்பான வழக்கறிஞராக முடியும்.
ஆடிட்டர் கல்வி: லக்னம் 5, 9 ஆகிய வீடுகள், அந்த வீட்டு அதிபதிகள் மற்றும் புதன் கிரகம் ஆகியவை பலம் பெற்றால் ஆடிட்டராக முடியும். இதுபோன்ற அமைப்புகள் உடைய ஜாதகர்கள், அந்தந்த துறையில் கல்வியை திறம்பட கற்று, சிறப்பாக தொழில் செய்ய முடியும். ஆனால் ஒருவரது ஜாதகத்தில் மேற்கூறிய கிரகங்களில் ஒரு சில கிரகங்கள் கெட்டு இருந்தாலும், அந்த வீடுகள் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அந்த ஜாதகர், அந்த துறைக்கு உரிய உயர்கல்வியில் வெற்றி பெற முடியாத நிலை உருவாகும். எனவே இது போன்று கிரகம் பாதிப்புகள் ஏற்பட்டால் அந்த கிரகங்களுக்கு பரிகாரம் செய்வதன் மூலம் அந்த ஜாதகர் உயர் கல்வியை கற்க முடியும்.
ஒரு துறையில் உயர்கல்வியை கற்க ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் பலம் பெற்று இருக்க வேண்டிய நிலையில் ஏதாவது ஒருகிரகம்மட்டும் பலவீனமாக இருந்து மற்ற கிரகங்கள், அந்தந்த கல்விக்கு உரிய வீடுகள் பலம் பெற்று இருந்தால் மட்டுமே பரிகாரம் பயன் தரும். ஒன்றுக்கு மேற்பட்ட பல கிரகங்கள் பலம் இழந்தும், ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டாலும் அந்த ஜாதகருக்கு பரிகாரங்கள் செய்தாலும் பெரிய அளவில் பலன் கிடைக்காமல் போகலாம். அதனால் ஜாகத்தை நன்கு ஆராய்ந்த பின்னரே பரிகாரங்களை செய்யவேண்டும்.
இனி பரிகாரங்கள் குறித்து பார்ப்போம்:
சூரியன் : ஒருவரது ஜாதகத்தில் சூரியன் பாதிக்கப்பட்டால் ஞாயிற்றுக்கிழமை சிவன் கோயிலுக்கு சென்று சிவனுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதுடன், நவகிரகத்தில் சூரிய பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவேண்டும். கும்பகோணம் அருகே உள்ள சூரியனார் கோயிலுக்கு ஒரு முறை சென்று வழிபடவேண்டும். அரை கிலோ அளவில் கோதுமையை தானமாக வழங்கலாம். சூரியன் பாதிக்கப்பட்டதை கணக்கில் கொண்டு எத்தனை வாரம் ஞாயிற்றுக்கிழமை தீபம் ஏற்றி வழிபடவேண்டும். கோதுமை தானம் தரவேண்டும் என நிர்ணயம் செய்ய வேண்டும்.
சந்திரன்: ஒருவரது ஜாதகத்தில் சந்திரன் பாதிக்கப்பட்டால் திங்கள் கிழமை களில் நவகிரகத்தில் சந்திர பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவேண்டும். பௌர்ணமி நாட்களிலும் சந்திரனை வணங்க வேண்டும். கும்பகோணம் அருகே உள்ள திங்களூர் ஒரு முறை சென்று சந்திரனை வணங்க வேண்டும். அரை கிலோ அளவில் பச்சரிசியை தானமாக வழங்கலாம். சந்திரன் பாதிக்கப் பட்டதை கணக்கில் கொண்டு எத்தனை வாரம் திங்கள் கிழமை தீபம் ஏற்றி வழிபடவேண்டும். பச்சரிசி தானம் தரவேண்டும் என நிர்ணயம் செய்ய வேண்டும்.
செவ்வாய்: ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் பாதிக்கப்பட்டால் செவ்வாய் கிழமைகளில் நவகிரகத்தில் செவ்வாய் பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோயிலுக்கு ஒருமுறை சென்று அங்காரகன் மற்றும் சுவாமி, அம்மனுக்கு அர்ச்சனை செய்து வணங்கலாம். கிருத்திகை அன்று முருகனை வணங்கலாம். அரைகிலோ அளவில் துவரை தானம் செய்யலாம். செவ்வாய் பாதிக்கப்பட்டதை கணக்கில் கொண்டு எத்தனை வாரம் செவ்வாய் கிழமை தீபம் ஏற்றி வழிபடவேண்டும். துவரை தானம் தரவேண்டும் என நிர்ணயம் செய்ய வேண்டும்.
புதன்: ஒருவரது ஜாதகத்தில் புதன் பாதிக்கப்பட்டால் புதன் கிழமைகளில் நவகிரகத்தில் புதன் பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவேண்டும். சீர்காழி அருகே உள்ள திருவெண்காட்டிற்கு ஒருமுறை சென்று அர்ச்சனை செய்து பச்சை வஸ்திரம் சாற்றி வழிபட வேண்டும். கால்கிலோ அளவில் பயத்தம்பருப்பு வாங்கி தானம் தரலாம். அல்லது சுண்டல் செய்து புதனுக்கு படைத்து வினியோகம் செய்யலாம். புதன் பாதிக்கப்பட்டதை கணக்கில் கொண்டு அத்தனை வாரம் புதன் கிழமை தீபம் ஏற்றி வழிபடவேண்டும். பயத்தம்பருப்பு தானம் தரவேண்டும், அல்லது சுண்டல் விநியோகம் என நிர்ணயம் செய்ய வேண்டும்.
குரு: ஒருவரது ஜாதகத்தில் குரு பாதிக்கப்பட்டால் வியாழக்கிழமை களில் நவகிரகத்தில் குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவேண்டும். கும்பகோணம் அருகே உள்ள ஆலங்குடிக்கு சென்று அர்ச்சனை செய்து வழிபடலாம். கால்கிலோ அளவில் கொண்டை கடலை தானம் தரலாம். அல்லது கொண்ட கடலை சுண்டல் நைவேத்தியம் செய்து விநியோகம் செய்யலாம். குரு பாதிக்கப்பட்டதை கணக்கில் கொண்டு அத்தனை வாரம் வியாழக்கிழமை தீபம் ஏற்றி வழிபடவேண்டும். கொண்ட கடலை தானம் தரவேண்டும், அல்லது சுண்டல் விநியோகம் என நிர்ணயம் செய்ய வேண்டும்.
வீடுகள் பாதிக்கப்பட்டு இருந்தால் எந்த வீடு பாதிக்கப்பட்டு உள்ளதோ அந்த வீட்டு அதிபதிக்கு பரிகாரம் செய்வது நன்மை தரும்.
சுக்ரன், சனி வீட்டின் அதிபதிகளாக வந்தால் சுக்ரனுக்கு வெள்ளிக் கிழமைகளில் நவகிரகத்தில் சுக்கிரபகவானுக்கு நெய்தீபம் ஏற்ற வேண்டும். கால்கிலோ அளவில் மொச்சை தானம் செய்யலாம். கும்பகோணம் அருகே உள்ள கஞ்சனூருக்கு சென்று சுக்ரனை வழிபடவேண்டும்.
சனிக்கு சனிக்கிழமையில் (சனி பகவானுக்கு) நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடவேண்டும். எள்ளுருண்டை தானம் செய்யலாம். திருநள்ளாறு அல்லது குச்சனூர் ஒரு முறை சென்று சனி பகவானை வணங்க வேண்டும்.
மற்றபடி எத்தனை வாரம் தீபம் ஏற்றவேண்டும். தானம் செய்ய வேண்டும் என்பது அந்த வீட்டு அதிபதியின் பலம் மற்றும் பலவீனத்தை கணக்கிட்டு அதற்கு ஏற்றவாறு செய்யவேண்டும்.
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு ஆகிய கிரகங்கள் வீட்டின் அதிபதிகளாக வந்தால் மேலே குறிப்பிட்டுள்ள பரிகாரங்களை செய்யலாம். முக்கியமாக கவனத்தில் கொள்ளவேண்டியது, ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் பலம் பெற்று இருக்க வேண்டிய நிலையில், ஏதாவது ஒரு கிரகம் மட்டும் பலவீனமாக இருந்து மற்ற கிரகங்கள், அந்த அந்த கல்விக்கு உரிய வீடுகள் பலம் பெற்று இருந்தால் மட்டுமே பரிகாரம் பயன் தரும். ஒன்றுக்கு மேற்பட்ட பல கிரகங்கள் பலம் இழந்தும், ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டாலும் அந்த ஜாதகருக்கு பரிகாரங்கள் செய்தாலும் பெரிய அளவில் பலன் கிடைக்காமல் போகலாம். பூர்வபுண்ணியம் என்ற கடந்த ஜென்மத்தில் அந்த ஜாதகர் செய்த பாப புண்ணியங்களுக்கு ஏற்பவே இந்த ஜென்மத்திலும் பலன்கள் நடக்கும் என்ற விதியை மனதில் கொண்டு பரிகாரங்கள் செய்வது நல்ல பலன் தரும் என்று கூறலாம்.
கடந்த ஜென்மத்தில் கல்வி கற்று தரும் குருவை மதிக்காமல் செயல்பட்டு அவர் சாபம் பெற்று இருந்தாலும், குழந்தைகளை படிக்க விடாமல் கெடுத்து இருந்தாலும், கற்ற கல்வியை தவறாக பயன்படுத்தி இருந்தாலும் இந்த ஜன்மத்தில் அந்த ஜாதகருக்கு கல்வியில் பின் தங்கிய நிலை ஏற்படும் எனலாம்.
கட்டுரையாளர்: ஜோதிட ரத்னா, பஞ்சாங்க கணிதமணி, பூம்புகார் ஜி.ஸ்ரீனிவாசன் M.A (Astrology) தொடர்புக்கு: வாட்சப் எண்: 9499902400 – கைபேசி > 9080082200-