Madras Kural

ஆம்ஸ்ட்ராங் கொலையில் சிக்கிய ரவுடி திருவேங்கடம் என்- கவுன்ட்டர்!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி திருவேங்கடம் தப்பி செல்ல முயன்றதால் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ் ட்ராங் (2024-ஜூலை) கடந்த 5-ஆம் தேதி தான் புதிதாக கட்டி வரும் வீட்டின் அருகே இருவருடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர ஊர்திகளில் வந்தவர்கள் ஆம்ஸ்ட்ராங்கை கொடூரமாக அரிவாள் பட்டாகத்திகளால் சரமாரியாக வெட்டியது. உடன் இருந்தவர்கள் இருவர் தடுக்க சென்ற போது அந்த கும்பல் அவர்களையும் வெட்டிவிட்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் இரு சக்கர ஊர்தியில் தப்பி சென்றது. மர்ம நபர்கள் வெட்டியதில் படுகாயம் அடைந்த ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்தார். தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரது உடலை செம்பியம் காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் இருந்து வெடிக்காத இரண்டு நாட்டு வெடிகுண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழகம் மட்டுமின்றி நாட்டையே உலுக்கிய இந்த கொடூர சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பகுஜான் சமாஜ் கட்சியினர் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடவே ஆங்காங்கே பதட்டமான சூழல் நிலவியது. சென்னை அண்ணா நகரில் உள்ள இணை ஆணையர் அலுவலகத்தில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக 8 பேர் தானாக முன்வந்து சரணடைந்தனர், அவர்களிடம் நடத்தப்பட்ட முதற் கட்ட விசாரணையில் ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்கு பழி வாங்கவே இந்த கொலை அரங்கேற்றப்பட்டது தெரியவந்தது. இவ் வழக்கில் மேலும் மூன்று பேர் உள்ளிட்ட 11 பேரை கைது செய்த காவல் துறையினர் குற்றவாளிகளை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பூவிருந்தவல்லி சிறையில் அடைத்தனர். குற்றவாளிகளை தங்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் 7 நாட்கள் அனுமதி கேட்ட நிலையில் நீதிமன்றம் 5 நாள் விசாரணைக்கு அனுமதி வழங்கியது. இதனையடுத்து காவல்துறையினர் 11 பேரையும் தங்களது விசாரணை வளையத்திற்குள் கொண்டு சென்று விசாரித்த போது, வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி பிரபல ரவுடி திருவேங்கடம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பான திடுக்கிடும் தகவல்களையும், அதற்கான சதி திட்டம் தீட்டிய இடத்தில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது குறித்தும் காவல்துறையில் தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிட்ட புழல் வெஜிடேரியன் நகருக்கு இன்று அதிகாலை அழைத்துச் சென்று தடயங்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து கண்டறிய காவல்துறையினர் சென்ற போது, அவர்களின் பிடியிலிருந்து ரவுடி திருவேங்கடம் தப்பிச் சென்றான். அப்பகுதியில் உள்ள இரும்பு தகடு வேயப்பட்ட சிறு கூரையின் உள்ளே பதுங்கிக் கொண்டு அங்கு மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் காவல் துறையினரை நோக்கி சுட்டுள்ளான். அப்போது சரணடையும்படி எச்சரிக்கை விடுத்தும் சரணடையாமல் வெளியே வர மறுத்து தப்பி செல்ல திட்டம் தீட்டியதாக தெரிகிறது, இதனால் வேறு வழியின்றி காவல்துறையினர் ரவுடி திருவேங்கடத்தை இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டதில் மார்பிலும், வயிற்றிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் சுருண்டு விழுந்தார். உடனடியாக திருவேங்கடத்தை மீட்டு மாதவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்ததை தொடர்ந்து, ரவுடி திருவேங்கடத்தின் உடலை உடற்கூராய்வுக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். புழல் காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை காவல் துறையினர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரவுடி திருவேங்கடத்தின் உடல் வைக்கப்பட்டுள்ள ஸ்டான்லி பொது மருத்துவமனைக்கு நீதிபதி ஒருவர் நேரடியாக சென்று விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் திருவேங்கடம் உடற்கூராய்வு, மாஜிஸ்திரேட் முன்னிலையில் நடக்கிறது.

PKM

Exit mobile version