பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணனை பார்த்துதான் இடை நிற்றல் மாணவர்களுக்காக கல்வி பயிற்சி மையத்தை நான் தொடங்கினேன் என்று நடிகை ரோகிணி பேசினார்.
அறம் இணைய இதழின் 4ம் ஆண்டு தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகையும் சமூகசெயற்பாட்டாளருமான ரோகிணி பேசியதாவது:
“இந்த நிகழ்ச்சியில் எனக்கு முன்பாக பேசியவர்கள் பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணனின் தனித்துவமான எழுத்துப்பணி பற்றி விரிவாக பேசினர். நான் அவரை நீண்ட காலமாக அறிவேன். எழுதுவதோடு சமூக நலத்திற்காக களத்தில்
இறங்கி செயல்படவும் செய்வார்.
அவருடைய வீட்டில் தான் முதன் முறையாக அவரை சந்தித்தேன். அங்கே ஏராளமான ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த பள்ளி பிள்ளைகள் படித்துக் கொண்டிருந்தனர். குடும்ப சூழல் காரணமாக பள்ளி படிப்பை தொடர முடியாமல் பாதியில் நிறுத்திய மாணவ மாணவியரும் அங்கு கல்வி கற்றனர். அவருடைய செயல்பாட்டை பார்த்து வியந்து பின்னாளில் நானும் அது போன்ற கல்விபயிற்சி மையத்தை தொடங்கினேன்.
“அறம்” இதழில் வெளிவரும் கட்டுரைகளை தொடர்ந்து படித்து வருகிறேன். இதன் வளர்ச்சிக்கு என்னால் இயன்ற பங்களிப்புகளை செய்வேன்” இவ்வாறு அவர் பேசினார்.
விஞ்ஞானி நடராசன், தமிழ் இந்து டாட் காம் ஆசிரியர் பாரதி தமிழன், ‘மெட்ராஸ் குரல்’ இணையதள ஆசிரியர் ந.பா.சேதுராமன், எம்யூஜே மணிமாறன் உள்ளிட்ட மூத்த பத்திரிக்கையாளர்கள் வாழ்த்துரை வழங்கினர். சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன் உள்ளிட்ட சமூக செயற்பாட்டாளர்கள், ஏராளமான அறம் வாசகர்கள் வருகை தந்திருந்தனர்.
வழக்கறிஞர் அமர்நாத் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.சமூக செயல்பாட்டாளர் இலங்கை வேந்தன், எழுத்தாளர் பீட்டர் துரைராஜ் முன்னிலை வகித்தனர். ச.பாண்டியம்மாள் தொகுத்து வழங்கினார். சூழலியல் ஆர்வலர் ‘காக்கைக்கூடு’ செழியன் நன்றி கூறினார்.
ம.வி.ராஜதுரை- (மூத்தபத்திரிகையாளர்)