சென்னையில் விவிஐபிகள் அதிகமாக வசிக்கும் பகுதியில் அண்ணாநகர் முக்கியமான ஒன்று. இங்குதான் ‘அம்மா அரங்கம் சி.கே.என்.சி.’ என்ற (படம்) அரங்கம் உள்ளது.
வார்டு 101 -பகுதி 22- மண்டலம் -8 -ல் ‘அம்மா அரங்கம் சி.கே.என்.சி.’ வருகிறது. வீதியில் குப்பைகளை பார்ப்பதே அரிதாக இருக்கிறதே என்று அண்ணாநகரைப் பார்த்து வாய் பிளக்கும் அதிசயர்கள், இந்த அரங்கத்தை பார்த்தால் எண்ணத்தை மாற்றிக் கொள்ள வாய்ப்பு உள்ளது.
நாய்கள் நிறையவே வசிக்கிறது. புல் -புதர் மண்டிக் கிடக்கிறது. வாசலில் கதவுக்கு பூட்டு தொங்குகிறது. காவலாளி பதவியில் இருந்த நபர் இப்போது காணக் கிடைக்கவில்லை.
சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான அரங்கமாக இந்த அரங்கம் செயல்பட்டதை சில ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்திருக்கிறேன். சில்லென்ற குளிரில் அரங்கம் அத்தனை அட்டகாசமாக இருக்கும்.
பிரமாண்டம் பூசி நிற்கும் இந்த அரங்கத்தை இப்படி கவனிக்காமலே விட்டு வைத்திருக்கிறார்கள். பொதுமக்களுக்காக குறைந்த கட்டணத்தில் நிகழ்வுகளை நடத்திக் கொள்ள இந்த அரங்கம் பயனுள்ளதாக இருந்தது என்று பலர் நினைவு கூர்கின்றனர். .
வார்டு -101- ன் கவுன்சிலர், மண்டலம் -8 -ன் மண்டலக்குழுத் தலைவர் உள்ளிட்டோர் பார்வையில் பட்டிருக்காதா, இந்த பராமரிப்பே இல்லாத அரங்கம் ? விகடகவி எஸ். கந்தசாமி