Madras Kural

அதிமுக பெண் நிர்வாகிக்கு செருப்படி – சுவரெழுத்து அழிப்பு புகார்களால் போலீஸ் திணறல்!

சுவர் விளம்பரம் வரையும் போட்டியிலும், மாஜி. அமைச்சரை யார் முதலில் வரவேற்பது என்ற தகராறிலும் சென்னை அதிமுகவினர் மோதிக் கொண்டது தொடர்பாக இரண்டு போலீஸ் ஸ்டேசன்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை ராயபுரம் 49-வது வார்டு, அதிமுக இணைச் செயலாளர் பொறுப்பில் இருப்பவர் ஜெயாமதி. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஜெயாமதி அளித்த புகார் மனு விபரம் : ராயபுரம் பகுதி, குன்ஹிராம் ஸ்டோர்ஸ் அருகே, முன்னாள் மந்திரி ஜெயகுமார் காரில் வந்தார். நான் உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் அங்கே நின்று கொண்டிருந்தோம். ஜெயக்குமார் காரில் இருந்து இறங்கிய போது அவர் அருகே நிற்பதற்காக நான் சென்றேன். அப்போது அருகில் நின்றிருந்த அம்மா பேரவை பகுதிச் செயலாளர் சதீஷ்குமார் அவர் மனைவி ஜெயமாலினி உள்ளிட்டோர் என்னை தள்ளிவிட்டு செருப்பால் என் தலையில் அடித்தனர். இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – இவ்வாறு ஜெயாமதி புகாரில் தெரிவித்துள்ளார். போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

இன்னொரு விவகாரம் : சுவர் விளம்பரம் எழுதுவது தொடர்பாக அதிமுகவினர் மோதிக் கொண்ட சம்பவம் சென்னை எம்.கே.பி.நகரில் நடந்துள்ளது. புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். அதிமுக பெரம்பூர் பகுதி இளைஞர் அணி செயலாளர் வியாசை மகாலிங்கம் அளித்த புகார் மனு விபரம் : 36-வது வட்ட அதிமுக செயலாளர் லயன்குமார், வின்சென்ட் ஜோசப், மற்றும் வட சென்னை வடகிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பு வகிக்கும் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோரின் தூண்டுதலில் நான் வரையும் சுவர் விளம்பரங்களை சிலர் அழித்து வருகின்றனர். குருசந்திரா மகால் அருகில் உள்ள சுவரில் மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வரைந்துள்ள சுவரை தங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியுள்ள மூவரும் மிரட்டல் விடுக்கின்றனர். கடந்த 10 வருடங்களாக இந்த சுவரில் கட்சி நிகழ்வுகளை எழுதி வருகிறேன். புகாரில் கூறப்பட்டுள்ள மூவரும் என்னுடன் வம்பு செய்து மிரட்டல் விடுக்கின்றனர். நான் வரைந்த சுவரை வர்ணம் பூசி அழித்துள்ளனர். எனக்கோ என்னைச் சார்ந்தவர்களுக்கோ எவ்வித கெடுதலும் இவர்களால் நிகழாமல் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன் – இவ்வாறு புகார் மனுவில் சொல்லப் பட்டுள்ளது. புகாரின் பேரில் எம்.கே.பி. நகர் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

-விகடகவி எஸ். கந்தசாமி.

Exit mobile version