Madras Kural

“ஆட்சியை கலைத்தால் மக்களுக்கு மகிழ்ச்சி” – டி.ஜெயகுமார்

சென்னை புழல் பகுதியில் புதிதாக அதிமுக சார்பில் வைக்கப்பட்டுள்ள இ-சேவை மைய கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயகுமார் கலந்து கொண்டு, இ சேவை மையத்தை திறந்து வைத்து, பொது மக்களுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினார்.பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த நேர்காணல் (பேட்டி) : “நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்களுக்கு மேல் உள்ளது. தற்போது பாஜகவுக்கு எதிராக சேர்ந்துள்ள எதிர்க்கட்சிகள், வேறு அணிக்கு செல்லக்கூடும். ஏற்கனவே நான் ஆருடம் கூறியது போன்றுதான் தமிழக ஆளுநர் டெல்லி சென்றுள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து பேசும் வாய்ப்பு ஆளுநருக்கு அதிகம் உள்ளது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் சீர்கெட்டு உள்ள நிலையில் 356-ஆவது பிரிவை பயன்படுத்தி திமுக அரசு கலைக்கப்பட்டால் தமிழக மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். தேர்தல் அறிக்கையில் படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வருவோம் என கூறியவர்கள் 500 மதுக்கடைகளை மூடிவிட்டதாக ஏமாற்றுகிறார்கள். ஏற்கனவே இரண்டு மதுக்கடைகளை புதிதாக அந்தந்த பகுதிகளில் திறந்து வைத்து விட்டு வியாபாரம் ஆகாத மதுக்கடைகளை மூடியுள்ளனர். பூரண மதுவிலக்கு என்பது அதிமுகவின் நிலைப்பாடு. ஆனால் உடனடியாக மதுவிலக்கு அமல்படுத்துவது சாத்தியம் இல்லை. படிப்படியாக மதுக்கடைகளை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓபிஎஸ்சைப் பொறுத்தவரை லக்கேஜ் கம்பார்ட்மெண்ட். ஏற்கனவே அதை தனியாக கழட்டி விட்டாகி விட்டது. திருச்சியில் நடைபெற்ற அவரது மாநாடு தோல்வி அடைந்த நிலையில் தற்போது அவருக்கு தொண்டர்கள் பலம் இருப்பதாக நாடகம் ஆடுகிறார். அவருடன் இருப்பவர்கள்‌ விரைவில் அணி மாறுவார்கள்.

https://madraskural.com/wp-content/uploads/2023/06/VID-20230625-WA00222-1.mp4

நாடாளுமன்ற தேர்தலுக்குள் தமிழக அமைச்சர்கள் ஒவ்வொருவராக கைது செய்யப் படலாம். நடிகர் விஜய் மட்டுமல்ல, யார் வேண்டுமென்றாலும் அரசியலுக்கு வரலாம். அப்போதுதான்‌ அதில் உள்ள கஷ்ட நஷ்டங்கள் தெரியும். திமுக சொந்த நிதியில் கருணாநிதிக்கு திருவாரூரில் நினைவுச் சின்னம் கட்டியது போன்று ‌ அவர்களது சொந்த நிதியில் மெரீனாவில் பேனா நினைவுச் சின்னம் வைப்பதில் ஆட்சேபணை ஏதும் இல்லை. மக்கள் வரிப்பணத்தை பயன்படுத்தி மெரினா கடற்கரையில் நினைவுச் சின்னம் அமைப்பதுதான் ஏற்கக்கூடியது அல்ல”- இவ்வாறு நேர்காணலில் டி.ஜெயகுமார் தெரிவித்தார்.

சே…

Exit mobile version