Madras Kural

த.வெ.க.வில் சேர்ந்த அதிமுக பச்சமால் பின்னணி|

அதிமுகவில் இருந்து விலகி, தவெகவில் இணைந்திருக்கும் மற்றும் பலரில் ஒருவர் திரு. கே.ட்டி. பச்சமால். 2013-ல் ஜெயலலிதா அம்மையாரின் அரசமைப்பில் வனத்துறை மந்திரியாக இருந்தபோது, முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கையால் பதவியை
பறிகொடுத்தவர். தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் இருந்தவர். நேற்றுவரை அதிமுககாரர். தவெகவில் இணைந்தபோது அவர் அளித்த பேட்டியின் சுருக்கம் இது.
👇

“அதிமுகவில் பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே பதவியும், மரியாதையும். தீய சக்தி திமுகவோடு கூட்டணி அமைத்து புரட்சித் தலைவி அம்மாவும், இதயதெய்வம் எம்ஜிஆரும் உருவாக்கிய கழகத்தை சிதைத்து கருணநிதி வாரிசின் உதவியோடு கழக ஆட்சி மலர்வதை ஒருபோதும் என்னால் ஏற்கமுடியாது. ஆகவே ‘தூய’ தவெகவில் என்னை இணைத்துக் கொள்கிறேன்”

சின்னதாய் ஒரு ப்ளாஷ் பேக்.

மந்திரி கே.ட்டி. பச்சமாலிடம் உதவியாளராக இருந்த சகாயத்துக்கும், வனத்துறை ஊழியர் ஆறுமுகத்துக்கும் சொத்து தகராறு.
2011- ல் ஆறுமுகமும் அவரது மனைவி ஜெகதீஸ்வரியும் மர்மமான முறையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்டனர்.

இந்த வழக்கில் மந்திரி பச்சமாலின் உதவியாளர் சகாயம், அப்போது A-1 குற்றவாளி. பலர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடக் கேட்டு ஜெகதீஸ்வரியின் அம்மா குமாரி மற்றும் பலர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணை வேகம் பிடித்த நிலையில்தான் பச்சமாலின் மந்திரி பதவியையும், மாவட்டச் செயலாளர் பதவியையும் பறித்து மார்ச் 2013-ல் முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார்.

இதற்கு முன்னதாக கன்னியாகுமரி எம்.பி., தேர்தலில் (1999) பச்சமாலுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து உயர்த்தி விட்டார் ஜெயலலிதா. அந்தத் தேர்தலில் பாஜகவின் பொன். ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். மீண்டும் 2011-ல் ஒரு வாய்ப்பு கொடுத்து எம்எல்ஏ மற்றும் அமைச்சராக ஆக்கினார் ஜெயலலிதா.

அதிமுகவில் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் உருவாக்கப்பட்ட ஐவர் குழுவால்தான், தன்னுடைய கட்சிப் பொறுப்பு, அமைச்சர் பதவி எல்லாமே போனதாக பச்சமால் கருதினார். எதிர்வினையை ஜெயலலிதா அம்மையார் உயிரோடு இருந்தவரை ஆற்றாமல் அம்மையார் மறைவுக்குப் பின், அதிமுக உடைந்தபின் ஆற்றினார். தீவிர டிடிவி தினகரன் ஆதரவாளராக மாறினார். தளவாய் சுந்தரம் போன்றோர் டிடிவி தினகரனை விட்டுப் போனபோது கூட கே.ட்டி. பச்சமால் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த டிடிவியை தூக்கிப்போட்டு விட்டு அதிமுகவில் எடப்பாடி அணியை ஏற்றார்.

ஓபிஎஸ், அம்மையார் சசிகலா, டிடிவி தினகரன் போன்றோரை மறுத்து ஒதுக்கி, “ஒன்றுபட்ட அதிமுகவே எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகதான்” என்று வெளிப்படையாக பேசிவந்த பச்சமால்தான் இப்போது அதிமுகவை ‘மற்றும் பலர்’ இருக்கக்கூடிய கட்சி என விமர்சித்து விட்டு, தவெகவில் தம்மை இணைத்துக் கொண்டிருக்கிறார்.

எதிர்கால வெற்றிக்கு இப்போதே வாழ்த்தி வைப்போம்.

ந.பா.சேதுராமன்
(13.06.2026)

Exit mobile version