Madras Kural

தமிழ்நாட்டு அரசியலில் 13-நாள்கள்…

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் ஆர்.கே.நகர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயலலிதா(அதிமுக) 2016- ல், மொத்தம் 97,218 – வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

அதிமுக பொதுச்செயலாளர் கம் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சிம்லா முத்துச்சோழன், 57,673- வாக்குகள் பெற்று தோற்றுப் போனார்.

தொகுதி தேர்தல் பொறுப்பாளர் லிஸ்ட்டில் எடப்பாடியும் இருந்தார்.

அதே சிம்லா முத்துச்சோழன் 07.03.2024- அன்று – அதாவது 10 நாள்களுக்கு முன்பு அதே அதிமுகவின் இன்றைய பொ.செ. எடப்பாடி கே பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் சேர்ந்து விட்டார்.

கட்சியில் சேர்ந்து 13- வது நாள், சிம்லா முத்துச்சோழனை திருநெல்வேலிக்கு அதிமுகவின் எம்.பி., வேட்பாளராக போட்டிக் களத்தில் இறக்கி விட்டிருக்கிறார், எடப்பாடியார்.

கட்சியில் சேர்ந்து 13-வது நாள் எம்.பி. சீட் வாங்கியிருக்கும் சிம்லாமுத்துச் சோழன், எடப்பாடி பழனிசாமியிடம் ஆசி பெறும் புகைப்படத்தில் 13- நாள் மட்டுமே தமிழ்நாட்டின் சட்ட அமைச்சராக இருக்க ஜெ.ஜெயலலிதாவால் அனுமதிக்கப் பட்ட இசக்கிசுப்பையா இருக்கிறார்.

இது என்னமாதிரியான 13-ம் நம்பர் ஒற்றுமை என்று தெரியவில்லை.

இசக்கி சுப்பையா பதவி பறிபோக அப்போது காரணமாக இருந்தவர் சசிகலாநடராஜன் என்று அந்த காலகட்டத்தில் பரவலாக பேசப்பட்ட ஒன்று.

திமுகவும் இப்படிப்பட்ட 13- நாள் முடிவுகளில் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்றொப்பவே செயல்பாட்டில் இருந்துள்ளது.
நடிகை ராதிகா மூலமாக திமுகவுக்குள் வந்து இப்போது பாஜகவில் கட்சியோடு ஐக்கியமாகியிருக்கும் நடிகரும் ராதிகாவின் கணவருமான ஆர். சரத்குமாருக்கு கட்சியில் சேர்ந்த 13-வது நாளில் எம்.பி., சீட் கொடுத்து அழகு பார்த்தவர், அன்றைய திமுக தலைவர் மு.கருணாநிதி.

அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவுக்கும் நம்பர் 13-ஐ மிகவும் பிடிக்கும் போலிருக்கிறது.
1996-ல் மத்தியில் பாஜக சார்பில் ஆட்சியில் இருந்த வாஜ்பாய் அரசுக்கு கொடுத்த ஆதரவை 13- நாளில் திரும்பப் பெற்று பாஜக, ஆட்சி கவிழ காரணமாக இருந்தார்.

அனைத்துமே மிக உயர்தரமான சம்பவங்கள்தான்.
“அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” என்பதை
“முறம்” கூற்றாகும் என மாற்றிப் படித்தவர்கள், வீட்டுக்கு வெளியே சிலவற்றை வாரிக்கொட்டியும்
வீட்டுக்கு உள்ளேயே சிலவற்றை வாரிக்கொட்டியும் அனைத்துக்கும் “அறம்” கற்பிக்கும் விதமே அலாதி!

ந.பா.சேதுராமன்

Exit mobile version