Madras Kural

ஐசியூ கூட்டணிகள்…

ஐசியூவில் அனுமதிக்கப் பட்டவரின் நாட்களைப் போலத்தான் அரசியலில் கூட்டணிக்கான இறுதி நாட்களைப் பார்க்க முடிகிறது. தொகுதிப் பங்கீடு, எண்ணிக்கை (சீட் பகிர்வு) போன்ற காட்சிகளை அடுத்ததாய் பார்க்கலாம்.

அதிமுகவில் கூட்டணி உறுதி என்றாலும், எண்ணிக்கையும், தொகுதிப் பங்கீடும் காத்திருப்புப் பட்டியலில் இருக்கிறது. திமுகவிலும் கூட்டணி உறுதிதான். அதே வேளையில் எண்ணிக்கைப் பகிர்வு, காத்திருப்புப் பட்டியலை விட்டு வெளியேறி ஒரு வழியாக இறுதி செய்யப்பட்டு முடிந்தும் விட்டது.
அடுத்தது, தொகுதிப் பங்கீடுதான்.

தேசியக்கட்சியான காங்கிரஸ், திமுக கூட்டணியில் 28 சீட்டுகளோடு ஒரு மாநிலங்களவை சீட்டும் இன்று (04.03.2026) பெற்றிருக்கிறது. துணை முதலமைச்சர் பதவியைத்தவிர மந்திரிசபையில் இடம், உள்ளாட்சி மன்றங்களில் மேயர் உள்ளிட்ட பொறுப்புகளோடு அதிகாரம், 49 எம்.எல்.ஏ., சீட்டுகள் என்று போன வாரம்வரை காங்கிரஸ் உறுதி காட்டிய நிலையில்தான் இப்போது மொத்தமாய் நிலைமை மாறிப் போயுள்ளது.

இன்னொரு பக்கம், திமுக கூட்டணிக்குள் வந்து ஒரு மாதம்கூட ஆகாத தேமுதிகவுக்கு, மாநிலங்களவை சீட் ஒன்று கொடுத்து, தேமுதிகவை உற்சாகப் படுத்தியுள்ளது திமுக. அதிமுகவோ இரண்டு மாநிலங்களவை சீட்டுகளில் ஒன்றை மு.தம்பித்துரைக்கு கொடுத்து அவரை ஏழாவது முறையாக செங்கோட்டைக்கு அனுப்பி வைத்துள்ளது.

இன்னொரு சீட்டை, கூட்டணியில் இருக்கும் டாக்டர் அன்புமணியின் பாமகவுக்கு ஒதுக்கியுள்ளது அதிமுக. தமாகாவுக்கு அந்த சீட்டை ஒதுக்கிக் கொடுக்கும்படி பாஜக தலைமை அழுத்தம் கொடுத்தும், அதை அதிமுக (எடப்பாடி பழனிசாமி) ஏற்கவில்லை.

மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு செய்வதில் உறுதிகாட்டும் அதிமுக, பாஜக கேட்கும் தொகுதிகளை ஒதுக்குவதிலும், கேட்கும் எண்ணிக்கையை கொடுப்பதிலும் அதே உறுதியை கையாளுமா தெரியவில்லை.

49 இலட்சியம், 35 நிச்சயம் என்று உறுதியாய் நின்ற காங்கிரஸ் 28+1 என்றளவில் கம்பெனி கொடுத்ததை வாங்கிக் கொண்டிருக்கிறது. அதே போலத்தான் அதிமுக கொடுப்பதை பாஜக வாங்கிக் கொள்ளுமா என்று இப்போதைக்கு சொல்லிவிட முடியாது.

மருத்துவர் அன்புமணி, டிடிவி தினகரன்,
ஜி.கே.வாசன், ஏ.சி.சண்முகம், ஜான் பாண்டியன், ஜெகன்மூர்த்தி,
பாரிவேந்தர் மற்றும் சில கட்சிகள், அதிமுக (என்.டி.ஏ.) கூட்டணியில் இருந்தாலும், பாமக (அன்புமணி) தவிர்த்து பிறகட்சிகளுக்கு சீட் ஒதுக்கிக் கொடுக்கும் பொறுப்பு, பாஜகவுக்கு உள்ளதாகவே தெரிகிறது.

அதிமுகவிடம் சீட்டுகளை கூடுதலாகக் கேட்டுப்பெற்று, என்டிஏ வின் தமிழ்நாட்டு கூட்டணிக் கட்சிகளுக்கு பாஜக கொடுப்பதாக இருந்தாலும் (பாமக – அன்புமணி நீங்கலாக) 40 சீட்டுகளுக்கு மேலே கொடுக்க அதிமுக முன்வராது என்றுதான் தகவல்கள் கிடைக்கின்றன.

டிடிவி தினகரன், ஜி.கே.வாசன்,
ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர்,
ஜெகன்மூர்த்தி, ஜான்பாண்டியன்,
மற்றும் சில பல என சீட்டுகளை பகிர்ந்து கொடுத்துவிட்டபின் பாஜகவுக்கான சீட்டுகள் -தொகுதிகள் எது – எத்தனை என்பதெல்லாம் இன்னும் தெரியாத விஷயங்கள்.

அதிமுக – பாஜக கூட்டணியாகட்டும், திமுக – காங்கிரஸ் கூட்டணியாகட்டும், எதுவுமே இறுதியானதுதான் என்று சொல்லிவிட துளியும் வாய்ப்பு இல்லை. எல்லாமே வானிலை அறிக்கை போல கடைசிநேர மாறுதலுக்கு உட்பட்டவைதான். கூட்டணி தர்மம், ஒப்பந்தம் கையெழுத்து ஆகிவிட்டபின் எதுவும் மாறாது என்பதெல்லாம் கட்டுக்கதை- வெட்டிக்கதை!

ந.பா.சேதுராமன்

Exit mobile version