Madras Kural

ஏ.டி.ஜி.பி., எம்.எல்.ஏ. கைது – விசாரணை பின்னணி…

நேரடி ஐ.பி.எஸ். அதிகாரியும், கூடுதல் டி.ஜி.பி. (ஏடிஜிபி) யுமான, ஹெச்.எம். ஜெயராம், சிறார் கடத்தலுக்கு துணை போன வழக்கில் நேற்று (16.06.2025) கைது செய்யப் பட்டுள்ளார். அவர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தேர்தல் அட்டவணையில் முதல் மாவட்டமான திருவள்ளூர் மாவட்டத்தின், திருவாலங்காடு காவல் நிலையத்தில் வைத்து, எஸ்.ஐ. ஒருவர், வழக்கின் தன்மையைச் சொல்லச் சொல்ல, ஸ்டேசன் ரைட்டர் ஒருவர், ஐ.பி.எஸ். மீதான எஃப்.ஐ.ஆரை எழுதி முடித்திருப்பார்.

இதுபோன்ற வழக்கில் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ஒருவர்மீது வழக்கு பதியப்பட்டு, கோர்ட் வளாகத்திலேயே அவர் கைது செய்யப்படுவதும், உடனே போலீஸ் பாதுகாப்பில் (கிளைச் சிறை) வைக்கப்படுவதும் தமிழ்நாட்டில் இதுதான் முதல்முறை.

இந்த வழக்கில் அரசாங்கமும்,
போலீசும் காட்டியிருக்கும் வேகம்
குறித்து இருவேறு கருத்துரு இருக்கிறது. “போலீஸ் வேலை செய்தாலும் குத்தம், செய்யாது விட்டாலும் குத்தம், அடப் போங்கய்யா” என்பது, ஒரு கருத்துரு.

மற்றொன்று, “போலீசுக்குத் துணை போன அல்லது போலீசை பயன்படுத்திக் கொண்ட கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜெகன்மூர்த்தி, ஆளுங்கட்சி (திமுக) மீது தொடர்ந்து பாய்கிறவர், எதிர்க்கட்சி அணியில் முக்கிய தூண் என்பதால் இப்படி நடந்துள்ளது”
இது இன்னொரு கருத்துரு.

இன்னொரு தகவலாக,
“நடந்த கடத்தல் சம்பவத்தில் முகாந்திரம் இருக்கும் பட்சத்தில், யார் சொன்னாலும் (கவனிக்க : யார் சொன்னாலும்) கேட்டுக் கொண்டு போய்விடக்கூடிய / கேட்கக் கூடிய நபர், ஐ.ஜி. அஸ்ராகர்க் (மண்டல போலீஸ் ஐ.ஜி.) இல்லை’ என்றும் சொல்லப்படுவது கவனிக்கத்தக்கது.

இதுபோக, “சாட்சி ஆவணமாக ஜெகன்மூர்த்தி – ஜெயராம் தொலைபேசி உரையாடல் கிடைத்திருக்கிறது” என்கிறது போலீஸ்.

அரசியல்வாதிகள் மீதான கைது நடவடிக்கையின் போது அவர்களை எஸ்.ஐ. அந்தஸ்து அதிகாரிகள் கைது செய்வது போலீஸ் ஏரியாவில் சாதாரண விஷயமே. அது பேசுபொருள் ஆகா.

ஜெ.ஜெயலலிதா அம்மையாருக்கு சிறை என்ற தீர்ப்பை கர்நாடக கோர்ட் சொன்னதுமே, அவரது கையை இறுகப் பற்றியது ரேங்க் புரமோட்டட் வுமன் எஸ்.ஐ. தான். சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கலைஞரை பென்ச்சில் உட்கார (நாற்காலி அல்ல) வைத்தபடி, புகாரை எழுதி எஃப் ஐ. ஆர் போட்டதும் ஒரு எஸ்.ஐ.தான்.

அரசியல் தலைவர்களுக்கு, ‘அதிகாரம் போய் விட்டால், நாம் எப்படி நடத்தப் படுவோம்’ என்பது ரத்த சம்மந்தப்பட்ட அத்துபடி. எளிதில் அதை ஏற்றுக் கொள்வர். அப்படித்தான் அவர்கள் டிசைன் இருக்கிறது. ஐ.பி.எஸ்.கள் அப்படியான டிசைனுக்குள் தங்களை மட்டுமல்ல, தங்கள் குடும்பத்து உறுப்பினர்கள் வருவதைக் கூட தாங்கிக் கொள்ள மாட்டார்கள் என்பதே எதார்த்தம்.

கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ஹெச்.எம். ஜெயராம் மீதும், எம்எல்ஏ ஜெகன்மூர்த்தி மீதும் கோர்ட் அடுக்கியுள்ள குற்றச்சாட்டு மற்றும் கேள்விகளைப் பார்த்தால், வழக்கு விசாரணை தீவிரமாகும் என்றே தோணுகிறது. ஜெகன்மூர்த்தி மீது சபாநாயகர் வரை புகார் கொடுத்து நடவடிக்கை கோரவும் சட்டத்தில் இடம் இருப்பதாக சொல்கிறார்கள். எம்.எல்.ஏ. ஜெகன்மூர்த்தியை விசாரிக்கவும், கூடுதல் டிஜிபியை கைது செய்து சிறைப்படுத்தவும் சென்னை ஐகோர்ட் நீதிபதி பி.வேல்முருகன் உத்தரவிட்டது, னைத்து மட்டத்திலும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில்தான் ஜெகன்மூர்த்தி -ஜெயராம் இருவரிடமும் விசாரணை நடத்தி முடித்து இருவரையும் விடுவித்துள்ளனர்(?!).போலீசார். ஆள் கடத்தல், குற்றச்செயலில் ஈடுபடும் நபர்களோடு தொடர்பு போன்ற குற்றங்களின் அடிப்படையில் மூன்று பிரிவுகளின் கீழ் ஏடிஜிபி ஜெயராம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அடுத்த கட்டமாக ஜெயராம், உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார். அதேபோல் ஜெகன் மூர்த்தி மீதும் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டிருந்தது. ஜெகன்மூர்த்தி முன்ஜாமீன் கோரி சென்னா ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், “போலீஸ் விசாரணைக்கு நீங்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், பொய்யான புகார் என்றால், விசாரணைக்கு ஆஜராகி, அதை சொல்லுங்கள். ஆஜர் ஆகாமல் போலீசுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் இருப்பது சரியல்ல. வாக்களித்த மக்கள் உங்களை கட்டப்பஞ்சாயத்து செய்யச் சொல்லவில்லை” என்று காட்டமாக தெரிவித்தார்.

வழக்கு குறித்து எளிதான வட்டத்தில் சொல்வதென்றால், தேனி பொண்ணு. திருவள்ளூர் பையன். இன்ஸ்டாவில் நான்காண்டு காதல். “காதலனோடுதான் போகப்போகிறேன்” என்ற வெள்ளவேடு போலீசில் நேராகப் போய் எழுதிக் கொடுத்திருக்கேன்” என்று சொல்கிறார் தேனிக்காரப் பொண்ணு. இதற்கிடையேதான், “திருவள்ளூர் பையனின் தம்பியை போலீஸ் ஜீப்பிலேயே போய் கடத்தியதற்கு சான்றாக சிசிடிவி பதிவு கிடைத்துள்ளது” என்கிறது விசாரணை தரப்பு. “பையன் நாயுடு. பெண் இடை நிலைசாதி. சிலர் குறிப்பிடுவது போல ஒடுக்கப்பட்ட சமூகம் இதில் யாரும் இல்லை” என்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

காவல்துறையில் நேரடி போலீஸ் சப். இன்ஸ்பெக்டராக வேலைக்கு சேர்ந்து முப்பது வருஷத்துக்கு மேலே வேலை பார்த்தாலும் அத்தனை பேருமே எஸ்.பி. அந்தஸ்து வரை வந்துடறது இல்லை. ஏசிபி யோடு ரிட்டயர்ட் ஆகிறவங்களே அதிகம். சிலர் கூடுதல் எஸ்.பி. வரைக்கும் பதவி உயர்வு பெற்று ரிட்டயர்ட் ஆகிப் போவார்கள். ஒரு எஸ்.ஐ., எஸ்.பி. வரை வருவதெல்லாம் பெருங்கனவுதான்.

அதிகவயதில் வேலைக்கு சேருவது, தேர்வின் போது மார்க்கில் கோட்டை விடுவது, லாக்-அப் டெத் விவகாரங்களில் சிக்கி தண்டனை பெறுவது, அரசியலின் நீக்கு போக்கு புரியாமல் (அ) மதிக்காமல் தன் போக்கில் நடப்பது, இப்படி பல காரணிகள் பதவி உயர்வுக்கு முட்டுக்கட்டை.

இது போக ஆட்சியாளர்களின் மெத்தன செயல்பாடு – அதாவது புரமோசன் கோப்புகளை எங்கே வைத்தோம் என்ற இலக்கே இல்லாமல் இருப்பது.

டி.என்.பி.எஸ்.சி. மூலம் வெற்றி பெற்று நேரடியாக டி.எஸ்.பி. ஆகிறவர்களுக்கு, உரிய வயது இருந்தால் கூடுதல் டி.ஜி.பி. வரையும், வயது இல்லையென்றால் ஐ.ஜி. வரையிலும் பணிகால பதவி குறியீடு இருக்கும்.

யு.பி.எஸ்.சி. மூலம் நேரடி ஐ.பி.எஸ்., தேர்ச்சி பெற்று வருகிறவர்கள், முதல் போஸ்டிங்கே ஏஎஸ்பிதான். ஐபிஎஸ் என்பதால் மிகக் குறுகிய காலத்திலேயே எஸ்.பி. பதவியும் வந்துவிடும். பணி ஓய்வின் போது உறுதியாக அவர்கள் டி.ஜி.பி. அந்தஸ்தோடுதான் ஓய்வு பெறுவார்கள்.

ஹெச்.எம்.ஜெயராம், நேரடி ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தாலும் டிஜிபி அந்தஸ்து வரைக்கும் போக வாய்ப்பு குறைவு. இந்த வழக்கில் சிக்காமல் இருந்தாலும் கூட. ஏனெனில், ஜெயராம் தமது 34-வது வயதில்தான், ஐபிஎஸ் தேர்ச்சி பெற்றார். அடுத்த ஆண்டு மே மாதம் பணி ஓய்வு பெறும் போது அவருக்கு பணிக்கொடை முழுமையாக கிடைத்தாலே வியப்புதான். கூடுதல் போலீஸ் டிஜிபி ஜெயராம் குறித்து கூறும் போது, “அதிர்ந்து கூட பேசத் தெரியாதவர்” என்கிறார்கள், அவரை அறிந்தவர்களும், காவல்துறையில் உள்ளோரும்.

இப்படிப்பட்ட நேரடி ஐ.பி.எஸ். அதிகாரி, பணியில் இருக்கும் போதே, அதுவும் சீருடையிலேயே கைது செய்யப் பட்டிருக்கிறார்.

ந.பா.சேதுராமன்.

Exit mobile version