Madras Kural

ஆருத்ரா கோல்டு சுருட்டிய 2,438 கோடி ரூபாய் எங்கே?

ஆருத்ரா கோல்டு கம்பெனியில் பல அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருக்கிறது என்ற தொனியில்தான் பலரும் பேசி வருகிறார்கள்.

சென்னை அமைந்தகரையில்
செயல்பட்டு வந்த ‘ஆருத்ரா கோல்டு’ நிறுவனம், தமிழ்நாடு முழுவதும் கிளை பரப்பி, ஆருத்ரா என்ற பெயரைச் சொல்ல வைத்திருக்கிறது.
ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் பணம் முதலீடு செய்பவர்களுக்கு 25 சதவீதம் முதல் 30 சதவீதம்வரை வட்டி தருவதாகச் சொல்லியதால் லட்சக் கணக்கானோர், ‘ஆருத்ரா கோல்டு’ நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.
முதலீடுகளின் மூலமாக மக்களின் பணம் ரூ.2,438 கோடியை கடந்து ‘ஆருத்ரா’ சிறப்பாகவே செழித்தது.
லட்ச ரூபாய் முதலீட்டுக்கு, மாதவட்டி 36ஆயிரம் ரூபாயை கொடுப்பதாக
ஆருத்ரா சொன்னபோது பலரும் அதில் விழுந்தனர்.

இந்நிலையில்தான், பா.ஜ.க.வின் கலைப்பிரிவு செயலாளரும் சினிமாப்பட தயாரிப்பாளர் கம்
நடிகருமான ஆர்.கே.சுரேஷ் பெயர் ஆருத்ராவில் பலமாய் வெளிப்பட்டது. ஆர்.கே.சுரேஷ் பெயர் வருவதற்கு முன்னர் ‘அண்ணாமலைகளும் ரெட்டிகளும் சுருட்டிய கோடிகள்’ என வாட்சப் செய்திகள், ‘டார்கெட்’ சுற்றலில் இருந்தது. இப்போது ஆர்.கே.சுரேஷ் அந்த பட்டியலில் வந்துள்ளார் என்றே சொல்லத் தோணுகிறது.

சொன்ன வார்த்தையை காப்பாற்ற முடியாமல் லட்ச ரூபாய்க்கு மாதவட்டிப் பணமான 36 ஆயிரம் ரூபாயைக் கொடுக்க முடியாமல் நிறுவனம் திணறிய வேளையில்தான் பலரும் நிறுவனத்தின் மோசடி வேலை இது என்று பேச ஆரம்பித்து விட்டனர்.
மூன்று மாதத்துக்கும் மேலாக வட்டிப் பணம் அப்படியே தேங்கி நிற்கிறது
என்ற குற்றச்சாட்டு அடுத்தடுத்த மாதங்களில் பரவலாகவே எழுந்தது.
சிலர் துணிச்சலாக முன் வந்து, ‘ஆருத்ரா கோல்டு ஒரு அயோக்கிய ‘கவரிங்’ என்று நேரடியாய் தாக்கினர்.
சினிமா பிரபலமான ஆர்.கே.சுரேஷ், பாஜகவில் இருக்கும் சில முக்கியப் பிரமுகர்களுக்கு ‘ஆருத்ரா’ வின் மூலம் சொர்க்க வழியை காட்டியிருக்கிறார் என்று இன்னொரு டீம் சொல்லத் தொடங்கியது. இந்நிலையில்தான் வெளிநாட்டு படப்பிடிப்புக்காக ஆர்.கே. சுரேஷ், சில மாதங்கள் முன்னர் பறந்து விட…

அதேநேரத்தில்தான் ஆருத்ரா கோல்டு
கம்பெனியும் தன்னுடைய ஒரிஜினல் முகத்தை வெளிக்காட்டியது.

திருவள்ளூர், திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, கோயம்புத்தூர் என
பல்வேறு பகுதிகளில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற
பெயரில் விதை விதைத்த 21பேர் மீது, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இதுவரையில் ஆருத்ராவில் முதலீடு செய்துவிட்டு ஏமாந்தோர் லிஸ்ட்
ஒரு லட்சத்து 9,255 பேர், ஏமாற்றப்பட்ட பணம், ரூ.2,438 கோடி என்கிறது போலீஸ். இந்த புகார் தொடர்பாக 10 பேர் இதுவரையில் கைது செய்யப் பட்டுள்ளனர்.

ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் இயக்குநர்கள் ராஜசேகர், உஷா ராஜசேகர், மைக்கேல்ராஜ் ஆகியோர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விட்டதால் ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக சொல்லியிருந்தது போலீஸ். இதுவரையில் நிறுவனத்துக்கு சொந்தமான வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.96 கோடி மட்டுமே முடக்கப் பட்டுள்ளது. துபாயில் இருந்து
சென்னைக்கு விமானத்தில் வந்த
மைக்கேல்ராஜை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார்
கைது செய்து விசார்ணை நடத்தினர்.

மைக்கேல்ராஜ்தான் ஆருத்ரா நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளை பராமரிக்கும் பொறுப்பில் இருந்தவர் என்பதால், விருதுநகர் மாவட்டம் முத்துராமலிங்கபுரம் பகுதியிலுள்ள அவர் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அங்கிருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. பத்து மாதகாலம் துபாயில் தங்கியிருந்த மைக்கேல்ராஜ், சில நாட்களுக்கு முன்தான் தாய்நாட்டுக்கு
திரும்பி போலீசில் சிக்கிக் கொண்டிருக்கிறார்.

ஏற்கெனவே ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் வங்கிக்கணக்குகள்,
சொத்துக்கள் முடக்கப்பட்டு 21 பேர் மீது வழக்குப் பதிவாகியுள்ளது. எட்டுபேர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப் பட்டுள்ளனர். ஏற்கனவே இந்த வழக்கில் கைதான துணை நடிகர் ரூசோ அளித்த வாக்குமூலத்தின்
அடிப்படையில்தான் நடிகர்
ஆர்.கே. சுரேஷ் சிக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குனரும், பா.ஜ.க. நிர்வாகியுமான ஹரீஷ், மற்றொரு இயக்குனரான மாலதி ஆகியோர், ஏற்கெனவே கைதாகி தற்போது நீதிமன்ற காவலில் உள்ளனர்.

போலீஸ் விசாரணையில் இன்னொரு தகவலும் கிடைத்துள்ளது. “ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் மீதான
புகார்களையும், வழக்குகளையும் மத்திய அரசில் பேசி, ‘ஒன்றும் இல்லாமல்’ ஆக்கி விடுவதாக ரூ.12 கோடிக்கு டீல் பேசி, மொத்தமாக 12 கோடி ரூபாயையும் வாங்கிக் கொண்டு சொன்னபடி ஆர்.கே.சுரேஷ், செய்து தரவில்லை. அதுதான் அவர் மீதான
புகார். ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் முதலீடு செய்ய ஆட்களை சேர்க்கும் வேலையில் அவருக்குத் தொடர்பு இல்லை” என்ற தகவலும் ஓடுகிறது.

போலீஸ் விசாரணையில் இருக்கும் ஆருத்ரா கோல்டு இயக்குநர்கள், விசாரணைக்கு வரவிருப்பவர்கள், தலைமறைவாக இருப்பவர்கள் என்று பல முகங்கள், ஆருத்ரா கோல்டில்
இருந்தாலும், வெளியில் தெரியாமல் மறைந்திருக்கும் பல அரசியல் முகங்கள் வெளியுலகிறகு தெரிய வந்தாலே தவிர, ‘ஆருத்ரா கோல்டு’ மர்மங்கள் விலகப் போவது இல்லை ! ந.பா.சே.

Exit mobile version