Madras Kural

பொதுமக்களை அச்சுறுத்திய 107 குற்றவாளிகள் கைது – சிறை!

சென்னை பெருநகரில், தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும். பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் போலீசாரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், கொலை, கொலை முயற்சி குற்றம், திருட்டு, செயின் பறிப்பு. சைபர் குற்றங்கள், போதைப் பொருட்கள் கடத்துதல், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு மிரட்டி பணம் பறித்தல், நில அபகரிப்பு, ஆபாச வீடியோ தயாரிப்பு. மணல் கடத்தல், உணவு பொருட்கள் கடத்தல், போக்சோ மற்றும் பாலியல் குற்றச்செயல்கள், உயிர்காக்கும் கொரோனா மருந்துகளை பதுக்கி விற்றல் போன்ற கொடுஞ்செயல் புரியும் நபர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழும் பலரை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 01.01.2022 முதல் 06.05.2022 வரை சென்னை பெருநகரில் அப்படிப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டு வந்த மொத்தம் 107 குற்றவாளிகள், போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளிகள் குறித்த விபரம் :
எண்ணூர் சுபாஷ், வினோத் ஆகிய இருவரும் சேர்ந்து ரூ.2 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்த குற்றத்திற்காகவும், ஆள் மாறாட்டம் செய்து ரூ. 2 கோடி மதிப்பு நிலத்தை அபகரித்ததாக கேரளாவின் கோட்டயத்தைச் சேர்ந்த சமீர் கோட்டக்கல் உமர், கார்த்திகேயன் என்பவரை கத்தி முனையில் மறித்து வழிப்பறி செய்ததாக திருவல்லிக்கேணி – ரோட்டரி நகர் விக்கி (எ) விக்னேஷ், ராயப்பேட்டை ஹரிஷ் (எ) சின்ன ஹரிஷ் ஆகியோர் கைது செய்யப் பட்டிருந்தனர். விக்கி (எ) விக்னேஷ் மீது விக்கி (எ) விக்ரம் என்பவரை கொலை முயற்சி செய்த வழக்கு உட்பட 3 கொலை முயற்சி வழக்குகள், ஒரு கொலை வழக்கு என 5 குற்ற வழக்குகள் உள்ளது. ஹரிஷ் (எ) சின்ன ஹரிஷ் மீது 3 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 10 குற்ற வழக்குகள் உள்ளது. திருவல்லிக்கேணி அழகுராஜா மற்றும் அவரது சகோதரர் பாலாஜி இருவரும் சமீபத்தில் தேவேந்திரன் என்பவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக ஜாம்பஜார் போலீசில் வழக்கும் சரித்திர பதிவேடும் உள்ளது. அழகுராஜா மீது 1 கொலை வழக்கு, 1 கொலை முயற்சி வழக்கு உட்பட 13 குற்ற வழக்குகளும். பாலாஜி மீது 1 கொலை வழக்கு, 2 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 15 குற்ற வழக்குகளும் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சுபாஷ், சமீர் கோட்டக்கல் உமர் மற்றும் வினோத் ஆகியோரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க மத்திய குற்றப்பிரிவு, நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு ஆய்வாளர்களும், விக்கி (எ) விக்னேஷ் மற்றும் ஹரிஷ் (எ) சின்ன ஹரிஷ் ஆகிய இருவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க ஐஸ் அவுஸ் காவல் நிலைய ஆய்வாளரும், அழகுராஜா மற்றும் பாலாஜி ஆகிய இருவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க ஜாம்பஜார் காவல் நிலைய ஆய்வாளரும். பரிந்துரை செய்ததின் பேரில், சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், அவர்களை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதேபோல்
அழகுராஜா, தினேஷ்குமார், கணேசன், குமரேசன், இன்பம், புரூட்டி (எ) கார்த்திக், விக்னேஷ் (எ) விக்கி (எ) மாசி (எ) அமாவாசை, வசந்தகுமார், தினேஷ்குமார், கணேசன், குமரேசன், இன்பம், (எ) கார்த்திக் ஆகியோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப் பட்டனர்.

– விகடகவி எஸ். கந்தசாமி

Exit mobile version