Madras Kural

ரவுடி நீராவிமுருகன் திண்டுக்கல் போலீசாரால் சுட்டுக்கொலை !

கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட பல வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டு வந்த நீராவி முருகன் சுட்டுக் கொல்லப்பட்டார். பெண்களை குறி வைத்து வழிப்பறியில் ஈடுபட்டது உள்பட சுமார் 60 குற்ற வழக்குகள், நீராவி முருகன் மீது நிலுவையில் இருப்பதாக போலீஸ் தரப்பில் சொல்லப் பட்டுள்ளது. முன்னாள் மந்திரி ஆலடி அருணா கொலைவழக்கில் நீராவி முருகன் கூலிப்படையாக செயல்பட்டவர் என்றும் போலீசார் தெரிவிக்கிறார்கள். நெல்லை மாவட்டம் களக்காடு அடுத்த மறவன்குளம் பகுதியில் போலீசாரை தாக்கி விட்டு நீராவி முருகன் தப்பிச் சென்றதாக போலீஸ் தரப்பில் சொல்லப் பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே திண்டுக்கல் மாவட்ட தனிப்படை போலீஸ் எஸ்.ஐ. இசக்கிராஜா மற்றும் போலீசார் இருவரை நீராவி முருகன் அரிவாளால் வெட்டி விட்டு தப்ப முயன்றபோது போலீசார் சுட்டுக் கொன்றதாக சொல்லப்படுகிறது. இன்று (16.03.2022) காலை 11.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது. தூத்துக்குடி மாவட்டம் புதியம்புதூர் அடுத்த நீராவிமேடு கிராமத்தைச் சேர்ந்த முருகனுக்கு கிராமத்தின் துவக்கப் பெயரான ‘நீராவி’ அடைமொழியாக ஒட்டிக் கொள்ளவே நீராவி முருகன் ஆனார். சென்னையில் அதிக குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் சென்னையன் போலவே தன்னை நீராவிமுருகன் காட்டிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

– சே –

Exit mobile version