Madras Kural

புற்றுநோய் மற்றும் நுண்ணூட்ட உரத்தின் நன்மை குறித்த விழிப்புணர்வு முகாம்!

வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பாக புற்று நோய் மற்றும் நுண்ணூட்ட உரத்தின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு முகாம், விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடந்தது.

கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்கள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் புற்றுநோய் குறித்தும் அதன் பரவல் குறித்தும் நுண்ணூட்ட உரம் பயன்படுத்தினால் என்னென்ன நன்மைகள் என்பன குறித்தும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சிவகாசியின் புதுப்பட்டி கிராமத்தில், விருதுநகர் மாவட்ட கலசலிங்கம் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை கல்லூரி மாணவர்கள் ம. அபினேஷ், கு. நாகராஜன், சு.இசக்கிராஜ், கோ. ஸ்ரீராம், அ. அதுல் கிருஷ்ணன், க.சியாம் என்கிற சோனைமுத்து, கோ.சீ. ஸ்ரீராம் ஆகியோர் விவசாயிகளுக்கு புற்றுநோய் குறித்தும் அதன் பரவல் குறித்தும், நோய் வராது தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

புற்றுநோய் என்பது தொற்று நோயல்ல அது ஆண்களுக்கு நுரையீரல், வயிறு, குடல், உணவுக் குழாய், ப்ராஸ்ட்ரேட் சுரப்பிகளிலும். பெண்களுக்கு மார்பகம், நுரையீரல், வயிறு, குடல், கர்ப்பப்பை வாய் ஆகியவற்றிலும் அதிகமாக புற்றுநோய் வருகிறது. இதனால் உடலிலுள்ள பழைய உயிரணுக்கள் அவற்றின் கால அளவை மீறி உயிர் வாழ்ந்து விடுகின்ற படியால் இந்த அதிகப்படியான உயிரணுக்கள் உடலில் புற்றுநோய் கட்டியாக தோன்றுகின்றன. இந்நோயால் பாதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்றும் நோயினை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் தடுத்துவிடலாம் எனக்கூறி ஆரம்ப அறிகுறிகள் என்னென்ன என்பதையும் தெரிவித்தனர்.

புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் :
குரலில் திடீர் மாற்றம். உணவை விழுங்கும்
போது தொடர் சிரமம். தொண்டையில் அடைப்பு போல தோன்றுதல்.
நாக்கை அசைப்பதில் சிரமம்.
காரணமில்லாமல் எடை குறைவு. பெண்களுக்கு மார்பகங்களில் கட்டி.
உடலில் திடீரென கட்டி தோன்றுதல் ஆகியனவாம்.

நோயை தடுக்கும் இயற்கை உணவுகள்:
புற்றுநோய்க்கு நெல்லிக்காய் மற்றும் துளசி அற்புத மருந்தாகிறது. துளசியை பயன்படுத்தி புற்றுநோய் வராமல் தடுக்க தேனீர் தயாரித்து அருந்தலாம்.
அருகம்புல் ஒரு நல்ல மருந்து.
கேரட்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் புற்றுநோய் வராமல் தடுக்கலாம். பப்பாளி ஒரு சிறந்த மருந்து இது சர்க்கரை நோய்க்கும் புற்று நோய்க்கும் சிறந்த மருந்தாகிறது.
இந்நிகழ்ச்சி வேளாண் உதவி இயக்குனர் ஜா.ரவிசங்கர் எம்.எஸ்.சி. (தோ.க) அவர்களால் சிறப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

– (பிரீத்தி எஸ். )

Exit mobile version