Madras Kural

பாலியல் கொடூரங்களும் பொறுப்பற்ற ஊடக அறமும் !

போக்ஸோ போன்ற கடுமையான சட்டப்பிரிவுகள் இருந்தும் சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் முற்றாக குறைந்த பாடில்லை. குற்றவாளிகளின் மனநிலையை விட, குறிப்பிட்ட அந்த செய்தியை வாசகனுக்கு அளிக்கும் ஊடகங்களின் வார்த்தைகளைப் பார்க்கும் போது வேதனையும், கோபமும் பீறிடுகிறது.
“அந்த சிறுமியை மாறி மாறி கற்பழித்தார்கள், நூறு பேருக்கு விருந்தாக்கப் பட்ட சிறுமி, தான் பெற்ற இன்பத்தை நண்பர்களுக்கும் விருந்தாக்கி மகிழ்ந்த செக்ஸ் வெறியன்” என்றெல்லாம் வார்த்தைகளில் கொடூரத்தை கொட்டித் தீர்ப்பதா ஊடக அறம் ? இப்படி எழுதித் தீர்ப்பவர்கள் மீது போக்ஸோ சட்டம் நடவடிக்கை எடுக்க ஏதாவது சட்டப்பிரிவு இருக்கிறதா என்று தெரியவில்லை. அப்படி இருந்தால் அதையும் சம்மந்தப்பட்ட வழக்குகளைக் கையாளும் அதிகாரிகள் பொதுமைப் படுத்த வேண்டியது அவசியம் !
சென்னையில் பதிமூன்று வயதான ஒரு சிறுமியான பள்ளி மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக சில கொடூரன்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
தென்மாவட்டத்திலிருந்து படிப்புக்காக சென்னைக்கு வந்து தங்கியுள்ள மருத்துவ மாணவர் ஒருவருடன் ஏற்பட்ட நட்புதான் அந்த மாணவியின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கியிருக்கிறது. மாணவிக்கு தொடர்ந்து ஏற்பட்ட உடல் சோர்வை வைத்து, பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தபோதுதான் மாணவிக்கு நடந்த அநியாயம் தெரியவந்துள்ளது.
மாணவிக்கு போதைப் பழக்கத்தை ஏற்படுத்தி அடுத்த கட்டமாக அவரை பாலியல் வன்கொடுமைக்கு, மருத்துவ மாணவர் ஆளாக்கியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மருத்துவ மாணவரின் நண்பர்கள் சிலரும் மாணவிக்கு எதிரான கொடூரத்தில் ஈடுபட்டதாக போலீஸ் தரப்பு தெரிவிக்கிறது.
மாணவிக்கு எதிரான பாலியல் குற்றத்துக்கு துணையாக உடன் நின்றது மருத்துவ மாணவர்கள் மட்டுமல்ல, போதை என்கிற இன்னொரு அரக்கனும் தான். கூட்டாளிகள் ஹூக்கா என்ற போதைப்பொருளைப் பயன்படுத்தியதாக பரவலான செய்திகள் மூலம் அறிய முடிகிறது.
விலை உயர்ந்த போதைப் பொருள்களில் தொடங்கி, மலிவான விலையில் கிடைக்கும் போதைப் பொருள்கள் வரையில் (இவற்றில் மதுவை நான் குறிப்பிடவில்லை!) உடல் ஆரோக்கியத்தின் எதிரியாகவே அவைகளின் இயக்கம் இருக்கிறது.
அடுத்ததாக சமூகத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் தன்னிலை மறந்து செயல்படவும் அதே போதைப் பொருள்கள்தான் துணை நிற்கிறது. போதைப் பொருளை உட்கொண்டதால் தவறுகளில் எல்லை மீறுகிறவர்கள் ஒரு ரகம். தவறு செய்வதற்காகவே போதைப் பொருள்களை உட்கொள்கிறவர்கள் இன்னொரு ரகம். இந்த இரண்டு ரகங்களுமே ஒழிக்கப்பட வேண்டுமென்றால், முதலில் ஒழிக்கப்பட வேண்டியது எளிதாய் மக்களின் கைகளில் கிடைக்கும் போதைப் பொருள்களைத்தான். சமூகத்தின் அத்தனை தவறுகளில் தொண்ணூறு சதவீதத்தை போதைகளின் பங்களிப்பே அதிகம் !
ந.பா.சே –

Exit mobile version