Madras Kural

பத்திரிகையாளரை பாராட்டிய போலீஸ் கமிஷனர் !

தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் மூத்த செய்தியாளராக பணியாற்றி வருபவர் கார்த்திகேயன். கடந்த 3 ஆம் தேதி இரவு 8 மணி அளவில் சென்னை எம்ஜிஆர் நகர் பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையத்திற்கு செய்தியாளர் கார்த்திகேயன் சென்றுள்ளார். அப்போது ரூபாய் 2 லட்சம் ரொக்க தொகை கேட்பாரற்று ஏடிஎம் மையத்தில் கிடந்ததைப் பார்த்துள்ளார். அந்தப் பணம் யாருடையது யாருக்காவது தெரியுமா என்று அந்தப் பகுதியில் உள்ளவர்களை திரு. கார்த்திகேயன் விசாரித்த போது யாருக்கும் அதுபற்றி விபரம் தெரியவில்லை. பணத்திற்கு உரிமை கோராத நிலையில் அந்தப் பணத்தை எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் கார்த்திகேயன் ஒப்படைத்ததோடு விசாரித்து உரியவரிடம் பணத்தை சேர்த்து விடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். இதைத்தொடர்ந்து எம்ஜிஆர் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து பணம் குறித்து விசாரித்தனர். விசாரணையில் அந்தப்பணம், வங்கி நிர்வாகத்தின் பணம்தான் என்றும் ஏடிஎம் எந்திரத்தில் பணத்தை நிரப்பும் போது தவறுதலாக அங்கேயே விட்டது தெரிய வந்தது. மாம்பலம் துணை வட்டாட்சியர் கவனத்துக்கு போலீசார் விஷயத்தை கொண்டு சென்று பணத்தை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இந்தத் தகவல் சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கவனத்திற்கு சென்றதும், அவர் பத்திரிகையாளர் கார்த்திகேயனை வரவழைத்து அவரை வெகுவாகப் பாராட்டி, ‘வாழ்த்துக்கள்’ என்று தட்டிக் கொடுத்தார், தட்டிக் கொடுக்கும் பணியை செய்துள்ள கார்த்திகேயனை “மெட்ராஸ் குரல்”இணைய தளம் சார்பாக நாமும் தட்டிக் கொடுத்து வாழ்த்துவோம் ! -விகடகவி எஸ். கந்தசாமி.

Exit mobile version