Madras Kural

சேதமடைந்த சிவன் கோவிலை புனரமைத்து தருக ! அரசுக்கு கிராம மக்கள் கோரிக்கை…

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்துக்கு உட்பட்ட மீஞ்சூரை அடுத்த காணியம்பாக்கம் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த சிவன் கோயில் உள்ளது. முற்றிலும் இடிந்து தரைமட்டமான நிலையில் காணப்படும் சிவாலயம், மூன்றடி உயர சிவலிங்கம், தனி சன்னதியில் நின்ற கோலத்திலுள்ள அம்மன் சிலை மற்றும் நந்தி சிலை மட்டுமே இப்போதைய அடையாளம் என்றளவில் சிவாலயம் இருக்கிறது. மற்ற கோவில்களில் சிவலிங்கத்தின் ஆவுடையார் வட்ட வடிவில் இருக்கும், இப்படித்தான் பார்த்திருப்போம். இந்த சிவாலயத்தில் சதுர வடிவில் ஆவுடையார் காணப்படுவதால் இது சோழர் காலத்தில் கட்டப்பட்டதாகவும் இருக்கலாம் என்று கருத வேண்டியுள்ளது. கோவில் வரலாற்றையும் கட்டப்பட்ட காலத்தை குறிப்பிடும் கல்வெட்டுக்கள் ஏதும் இல்லை என்றாலும் செவி வழி செய்தியை இங்கே தருகிறேன். கைலாயத்தில் சிவபெருமானுக்கும் பார்வதிதேவிக்கும் திருமணம் நடைபெற்றபோது தேவர்களும் முனிவர்களும் அங்கு சென்றதால் உலகின் தென்பகுதி உயர்ந்தும் வடபகுதி தாழ்ந்தும் போகவே அதனை சமன் செய்ய எண்ணிய சிவபெருமான் அகத்திய முனிவரை தெற்கு நோக்கி சென்று அமர கட்டளையிட்டார். அதனை, சிரமேற்று கொண்ட அகத்திய முனிவர் தெற்கு நோக்கி வருகையில் தற்போது காணியம்பாக்கம் என்று அழைக்கப்படும் தேவதானத்தில் இளைப்பாற எண்ணினார்… அவ்வழியாக வந்த வேடன் ஒருவன் குடுவையில் வைத்திருந்த தேனை அகத்தியரிடம் பசியார கொடுத்துவிட்டு பின் மாயமாகியுள்ளார். குடுவை தேனில் சிலதுளிகள் வழிந்து பூமியில் விழுந்து அதுவே சிவலிங்கமாக மாறி நின்றதாகவும், சிவபெருமானே வேடனாக அகத்தியரின் பசியாற்ற கனிவுடன் தேன் கொடுத்த இடம் என்பதால் இங்கு எழுந்தருளிய சிவபெருமான் தேனீஸ்வரர் என்றழைக்கப் படுகிறார். தேனீஸ்வரரை, அகத்திய மா முனிவர் வழிபட்டதால் அகத்தீஸ்வரர் என்றும் பெருமான் அழைக்கப்படுகிறார். அம்பாள் பார்வதி என்ற திருப்பெயருடன் அருள்பாலிக்கிறார். (கி.பி. 1333-1378) டெல்லியை ஆண்டு வந்த சுல்தான்கள் தங்களது மேலாண்மையைத் தமிழ்நாட்டின் மீதும் செலுத்திய காலகட்டம் அது. மாலிக்காபூர் படையெடுப்பை அடுத்து குஸ்ருகான், உலூக்கான் போன்றோர் தங்களின் படையெடுப்பில் தமிழ்நாட்டின் சில பகுதிகளை சிதைத்து வைத்திருந்தனர். அதன் நீட்சியாக மதுரையில் சுல்தானியர் ஆட்சி நிலைபெற்றது. டெல்லி அரச பிரதிநிதி ஒருவரால் மதுரை நிர்வாகம் செய்யப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் சுல்தானிய படைத்தளபதி மாலிக்காபூர் மதுரையை நோக்கி தனது படைகளுடன் வந்தபோது, சாளுக்கிய மன்னர்கள் ஆளுமையின் கீழ் இருந்த இந்த (தேனீஸ்வர் கோயில் உள்ள பகுதி) பகுதியை தன் வசப்படுத்த போர் கொடுத்ததாகவும் அந்த தாக்குதலில் இந்த சிவாலயம் சேதம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. சிவலிங்கத்தையும், அம்மன் சிலையையும் பக்தர்கள் மீட்டு சுல்தான் படையணி கண்களில் படாதவாறு பூமியில் குழி தோண்டி புதைத்து விட்டதாகவும் கூறுகின்றனர். அதன் காரணமாக இங்குள்ள சிவபெருமான், மன்னீஸ்வரர் என்ற மற்றொரு பெயராலும், அழைக்கப்படுகிறார். சிறிய அளவில் சிமெண்ட் கூரை அமைத்து வழிபாடு நடத்தி தற்போது சிவாலயத்தை கிராம மக்கள் காப்பாற்றி போற்றி வருகின்றனர். வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவிலை தமிழக இந்து சமய அறநிலைத்துறை புனரமைத்து மீண்டும் அதே இடத்தில் புதிதாக கோவில் கட்டி தரவேண்டும், தொல்லியல் துறையினர் அகழ்வாய்வு நடத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோருகின்றனர். ‘சிவத்தொண்டன்’ – பிகேஎம்.

Exit mobile version