Madras Kural

காவல்துறை உங்கள் நண்பனா ?

நூறு ரூபாய் சம்பாதிப்பவருக்கும் மன உளைச்சல் இருக்கிறது, ஆயிரத்தில் லட்சத்தில் சம்பாதிப்பவருக்கும் மன உளைச்சல் இருக்கிறது. பர்சண்டேஜில் வேண்டுமானால் மாற்றம் இருக்கலாம் – ஆனால் உளைச்சல் என்பதில் மாற்றம் இருப்பதாகத் தெரியவில்லை !

நாட்டின் முதுகெலும்பாய் கருதப்படும் காவல்துறைப் பணியில் இருப்போர் பலர், அப்படிப்பட்ட மன உளைச்சலில் சிக்கித் தவிக்கின்றனர். தமிழ்நாடு அரசும், காவல் உயரதிகாரிகளும், தேர்ந்த மனநல மருத்துவர்களும் இது தொடர்பான முன்னெடுப்புகளில் வேகம் காட்டி வருவது மகிழ்ச்சியைத் தருகிறது – இருப்பினும் பிரச்சினை இன்னும் தொடர்வதை தடுக்க முடியவில்லை !
கடந்த 01/01/2022 தொடங்கி 28/02/2022 முடிய ஒரு புள்ளி விபரக் குறிப்பு சொல்வதை இங்கே தருகிறேன். 31 தேதிகளைக் கொண்ட 2022 ஜனவரியில் 26 பேரும், 28 தேதிகளை மட்டுமே கொண்ட பிப்ரவரி -2022 ல் 30 பேரும் தமிழ்நாடு காவல்துறையில் உயிரை இழந்துள்ளனர்.

மரணத்துக்கான காரணங்கள்: கொரோனா -1, புற்றுநோய் -1, தற்கொலை -10, மாரடைப்பு (ஹார்ட் அட்டாக் என்ற வார்த்தைதானே பேமஸ் ?) – 09, விபத்து -12, பல்வேறு உடல்நலக்குறைவு காரணமாக -23 (நபர்கள்) என்றளவில் தமிழ்நாடு காவல்துறையில் உயிரை இழந்துள்ளனர். 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் இறந்தவர்களின் எண்ணிக்கையானது முறையே 337 + 414 = மொத்தம் : 751 நபர்கள் !
காவல் பணியில் உள்ள, அதிகாரிகள் அல்லாதவர்களின் இறப்புக் கணக்கைத்தான் இங்கே பார்க்கிறோம்! ஆய்வாளர் அல்லது அவருக்குக் கீழே பணியாற்றும் உதவி ஆய்வாளர், அதற்கும் கீழ்நிலை அதிகாரப்பதவியில் இருக்கும் தலைமைக்காவலர், முதல்நிலைக் காவலர், இரண்டாம் நிலைக்காவலர்கள்தான் எப்போதும் பிரச்சினைக்கு ஆளாகிறார்கள், இந்தப் பட்டியலில் இடம் பிடித்திருப்பதும் அந்த வரிசையில் உள்ள காவல் பணியாளர்களே!

மாரடைப்பு, தற்கொலை, விபத்து போன்றவைகள் அதிகாரிகளை எப்போதும் (வெகுவெகு குறைவு) நெருங்குவது இல்லை. நோய்த்தாக்குதல் மட்டும்தான் அதிகாரிகளுக்கானது.

”புகைப்பழக்கம், மதுப்பழக்கம், மன உளைச்சல் போன்றவைகளில் எதன் பிடியில் நீங்கள் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்கள் ?” காவலர் நல முகாமில் மருத்துவ வல்லுநர்களின் கேள்வி இதுதான் !

நூறுபேரிடம் இந்தக் கேள்வியைக்கேட்டால் ஐம்பது பேருக்குக் குறையாமல், ‘மன உளைச்சல்’ தான் காரணம் என்றே அப்போது பதில் வந்திருக்கிறது ! புகைப்பழக்கம், மதுப்பழக்கம் இரண்டாம் பட்சம்தான். விபத்து மரணங்களும் மன உளைச்சலை விட அதிகளவில் மரணத்தைக் கொடுத்து வருகிறது. விபத்து மரணத்தின் பின்னணியில் இருப்பதும் மன உளைச்சல்தான் என்பதை மறுப்பதற்கில்லை !

காணொலிக்காட்சி மூலம் தலைமை மருத்துவர் ஒருவர், சிறப்பு மருத்துவர்கள் (இரண்டு பெண் மருத்துவர், ஒரு ஆண் மருத்துவர்) இருவர் வழியேற்று நடத்தும் காவலர்களுக்கான மருத்துவ முகாம் தமிழ்நாட்டின் அத்தனை மாவட்டத்திலும் தொடர்ந்து நடந்து வருகிறது ! சென்னையிலும் முகாம் நடக்கிறது.
சென்னை நமக்குப் (கட்டுரையாளர்) பக்கம் என்பதால், முகாம் நடக்கும் ஏரியா பக்கம் பார்வையை செலுத்திய வகையில் காவலர்கள் சிலர் பேசினர். “போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலும், கூடுதல் கமிஷனர் லோகநாதனும் தொடர்ந்து இந்த முகாம் மீது தனிக்கவனம் செலுத்தி வருகின்றனர். எந்தப் பிரச்சினை என்றாலும் காது கொடுத்துக் கேட்டு, அதற்கான தீர்வுக்கு வழியைக் காட்டி விடுகிறார்கள். அரசாங்கத்தின் பதிலுக்காக சில நாட்கள் கூட காத்திராமல் தனிப்பட்ட முறையில் உதவிகளை செய்யும் அடிசனல் கமிஷனர் லோகநாதன், போற்றுதலுக்குரியவர். அவருக்கு மேலதிகாரியாக இருக்கும் கமிஷனர் (டிஜிபி அந்தஸ்து அதிகாரி) சங்கர்ஜிவால், மருத்துவ உதவிக்குப் பண உதவி செய்வதை நாங்களே கண்முன்னால் பார்த்துக் கொண்டிருக்கிறோம்… தமிழ்நாடு முழுவதும், சங்கர்ஜிவால்களும், லோகநாதன்களும் காவல்பணி அதிகாரிகளாக இருந்தால், மன உளைச்சல் மரணங்களை குறைத்து விடலாம் – தடுத்து விடலாம்” என்றனர்.

“உங்களுக்கு என்னதான் பிரச்சினை, சுற்றி வளைக்காமல் மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் புரிவது போல் நேரடியா சொல்லுங்க ஏட்டையாஸ்?” என்றேன்…

“சார், எங்களுக்கு மேலதிகாரி, சப் – இன்ஸ்பெக்டர், அவருக்கு மேலதிகாரி இன்ஸ்பெக்டர். எங்க பிரச்சினையை நாங்க சப் இன்ஸ்பெக்டர்தான் கிட்ட கொண்டு போகணும், அதுதான் முறை. ஒரு ஸ்டேசனுக்கு ஏழு சப் இன்ஸ்பெக்டருக்குக் குறையாம இருப்பாங்க. யார்கிட்டே அதைக் கொண்டு போவது என்பதுதான் முதல் சிக்கல். யார்கிட்டே போய் சொன்னாலும், அவரு இன்னொருத்தரை கையைக் காட்டுவாரு, அவரு இன்னொருத்தரைக் கையைக் காட்டுவாரு, இப்படியேதான் அது போகும். முடிவு இருக்காது. இன்ஸ்பெக்டர் கிட்ட நேரடியா போய் எங்களுக்கான பிரச்சினையை சொல்ல முடியாது. ‘அய்யா, ஸ்ட்ரெய்ட்டா, ஆய்வாளரத்தான் பாப்பீங்களோ’ ன்னு கான்ஸ்டபிள்கிட்ட எகிறாத இன்ஸ்பெக்டர்கள் ரொம்பவும் குறைவு. அப்படிப்பட்ட இன்ஸ்பெக்டர் இருக்குற ஸ்டேசனை தேடிக்கண்டு புடிச்சுத்தான் அங்க வேலைக்குப் போகணும்.

ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வு என்பது இப்படித்தான் தீராமல் போய்க் கொண்டே இருக்கிறது. நான்கோ அல்லது ஐந்து காவல் நிலையங்களை உள்ளடக்கிய காவலர்களுக்கு என்றே வெல்ஃபேர் ஆபீசர்ன்னு ஒரு போஸ்டிங்கை (ரூரலில் டி.எஸ்.பி., நகரங்களில் ஏ.சி.பி) போட்டு, ‘காவலர்கள் குறை தீர்ப்பு மையம்’ அப்படீன்னு சில ஆண்டுகள் முன்னே நடைமுறைப் படுத்துனாங்க… அந்த மையம் எத்தனை இடங்களில் செயல்படுகிறது என்பது யாருக்குமே இப்போது சொல்லத் தெரியாது.
யெல்லோ பிரிகேட், ப்ளூ பிரிகேட்னு கலருக்கு ஒரு பிரிகேட் (குழு போலீஸ்) போட்டு கொஞ்சநாள் இருந்தது. பழையபடி சைக்கிளில் ரவுண்ட்ஸ் போனால், எக்ஸர்சைஸ் பண்ணது போல் இருக்கும்னு போலீஸ் ஸ்டேசன்களில் சைக்கிள்களை கொண்டு வந்து நிறுத்தினாங்க, அந்த சைக்கிள்களும் கொஞ்சநாள் ரவுண்ட்ஸ்ல இருந்தது…
ஒவ்வொரு காலகட்டத்திலும் அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப காவல்பணியிலும் அவர்கள் பயன்படுத்தும் பொருள்களிலும் மாற்றங்களை உண்டாக்கிக் கொண்டேதான் வந்திருக்கிறார்கள் – கடைசிவரையில் யாரும் ‘காவலர்கள் திடீர் சாவு’ கான தீர்வைக் கண்டுபிடிக்கும் மாற்றத்தைக் கொண்டு வரவில்லை”… என்கின்றனர் !
காவலர்கள்தான் காவல்நிலையங்களின் அஸ்திவாரம். அஸ்திவாரம் அஸ்தியாகி விடக்கூடாது என்றால், அஸ்திவாரம் ஆட்டங்காணாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது காவல் உயரதிகாரிகளின் கடமை – ஆட்சியாளர்களின் பொறுப்பு ! காவலர்களோடு மனம் விட்டுப்பேசவோ, அவர்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவோ உயரதிகாரிகளும், அரசாங்கங்களும் முன் வரவில்லையென்றால் என்னாகும்? மனக்குமுறல்களை காவலர்கள் இறக்கி வைக்கும் இடமாக பொதுமக்கள்தான் கிடைப்பார்கள்… காவல்துறை மீதான் மக்களின் அதிருப்திக்கு இந்த இடத்தில்தான் விதை போடப்படுகிறது ! போலீஸ் என்றாலே பொதுமக்கள் கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்பு மனநிலைக்குப் போவதும் இதன் நீட்சிதான் ! காவல்துறை உங்கள் நண்பன் என்ற விளம்பரத்துக்கு லட்சத்தில் செலவு செய்ய வேண்டியதில்லை – சில விஷயங்களில் காம்ப்ரமைஸ் செய்து கொண்டாலே போதும். பல வழக்குகளின் முடிச்சுகளை அவிழ்க்கும் வித்தையை பொதுமக்களிலும் பலர் அறிவர் – அதை நீங்களும் அறியவேண்டும் ஆபீசர்ஸ் !

யாருக்குப் புரிந்தாலும் சரி, புரியாமல் என் மீது எரிந்து விழுந்தாலும் சரி !

ந.பா.சேதுராமன் –

Exit mobile version