Madras Kural

கால்வாயில் பள்ளம்வெட்டி வீட்டு வாசலில் கொட்டாதீங்க! சென்னை வாசிகள் கோரிக்கை !

சென்னை மாநகராட்சி மண்டலம் 8 வார்டு 95 -ல் வசிக்கும் பொதுமக்கள் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை விபரம்! “சென்னை வில்லிவாக்கம் தெற்கு திருமலை நகர் 3-ஆவது தெருவில் நாங்கள் வசிக்கிறோம். திருமலை நகர் மூன்றாவது தெருவில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இருக்கின்றன. ஏறக்குறைய பத்து ஆண்டு காலமாக இங்கு மழை நீர் தேங்கி சாலையில் சகதி பெருக்கெடுத்து பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் நோய்த் தொற்றும் பகுதி மக்களுக்கு
சாதாரணமாக வந்து சேர்கிறது இதுகுறித்து சம்பந்தப்பட்ட மழைநீர் கால்வாய் மற்றும் கழிவு நீர் வெளியேற்றும் துறை, சென்னை குடிநீர் வடிகால் வாரியம், பெருநகர சென்னை மாநகராட்சி ஆகிய துறைகளின் அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் மனு கொடுத்து வந்தோம். புதிதாக திமுக, தமிழ்நாடு அரசாங்கத்தின் ஆட்சி பொறுப்புக்கு வந்த பின் மீண்டும் சில வாரங்களுக்கு முன்பு இதே பிரச்சினையை மையப்படுத்தி புகார் செய்திருந்தோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இன்று (05.03.2022) காலையில்
சென்னை மாநகராட்சி பணிக்காக என்று எழுதப்பட்ட சிமெண்ட் கான்கிரீட் களவை (கனரக) வாகனங்கள் அங்கு வந்தன. (மழைநீர்க் கால்வாய் பகுதியில் பள்ளம் முன்னரே தோண்டி எடுக்கப்பட்ட நிலையில் அதன் உள்ளே கழிவுநீர் கால்வாயில் உடைப்பெடுத்த நீர் தேங்கிக் கிடக்கிறது) சிமெண்ட் கான்கிரீட் வண்டிகளில் இயக்கப்படும் பொக்லைன் மூலமாக ஒரு பகுதியில் கான்கிரீட் போட பள்ளம் தோண்டுகின்றனர். தெருவின் இன்னொரு பக்கமும் அதே நேரத்தில் கான்கிரீட் போட பள்ளம் தோண்டுகிறார்கள். இரண்டு பக்கமும் ஒரே நேரத்தில் எடுக்கப்படும் சகதி (கழிவுநீர்) நிறைந்த மண்குவியல் குன்று போல் குவிக்கப் பட்டுள்ளது. யார் வீடு எது என்றே தெரியாததோடு யாரும் வீட்டுக்குள் போகமுடியாமலும் வீட்டைவிட்டு வெளியில் வரமுடியாமலும் நிலைமை உள்ளது. யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால் உள்ளே ஆம்புலன்ஸ் வாகனங்கள் வருவதற்கும் வழியில்லாத சூழ்நிலையோடு துர்நாற்றமும் தெரு முழுவதும் வீச ஆரம்பித்துவிட்டது. இங்கு நடந்துவரும் பணியை துறை அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தால்தான் மழைநீர் கால்வாய் எது, கழிவுநீர் கால்வாய் எது, எந்த கால்வாயில் எடுக்கும் மண்ணை எங்கு கொட்ட வேண்டும் இப்போது எங்கு கொட்டுகிறார்கள் இது சரியான முறை தானா, மக்களுக்கு இதனால் பாதிப்பு இல்லையா என்பதை அதிகாரிகள்தான் முடிவு செய்யவேண்டும். ஏதோ வேலை நடக்கிறது என்று இதை கண்டும் காணாமல் விட்டு விட்டால், தெரு நாற்றத்தில் மூழ்கும்- நோய்த்தொற்றும் பரவும் ஆபத்து உள்ளது ! – ‘விகடகவி’ எஸ். கந்தசாமி.

Exit mobile version