Madras Kural

காலை மாலை கிறுகிறு வாக்கிங் !

எடையைக் குறைக்கிறேன்னு காலையில் பத்து கிலோமீட்டர் நடை, மாலையிலும் அதே பத்துகிலோ மீட்டர்நடைன்னு நடையா நடப்பதோடு, சாப்பாட்டையும் தமாசுக்கு சாப்பிடற ‘நண்பேன்’டா’ஸ் நம்ம வட்டத்துல
ரொம்பவே அதிகம் !
கன்னங்குழில டொக்கு விழுந்து, யாராவது கையப் புடிச்சு ரோட்டக் கிராஸ் பண்ணி விட்டாத்தான் வீட்டுக்குப் போகிற அளவுக்கு நண்பேன் ஃபுல் ஃபார்ம்ல எளைச்சு (?!) ஒரே மாசத்துல அட்மிட் பண்ணிப் பாக்குற அளவுக்கு போயிடுறதப் பாத்திருக்கேன்…
’ஏன் இப்பிடி?’ ன்னு மணிரத்னம் பட வசனம் போல ஒன் லைன்ல, நண்பேன் கிட்ட கேட்டாலே போதும்!

நம்ம நண்பர் சொன்னதை அப்படியே தருகிறேன். “ஐநூத்தி நாப்பதுலருந்து படிப்படியா கொறச்சி இப்போ நானூத்தி பத்துக்கு கொண்டாந்துட்டேன். நைட்ல ஒரே ஒரு சப்பாத்தி மட்டும்தான். மத்தியானத்துல ராகி இட்லி ரெண்டு, சுகர் இல்லாம ப்ளாக் டீ, காலைல ஒன்னு, ஈவ்னீங் ஒன்னு. வாக்கிங் மட்டும் விடறதேயில்ல”
‘எல்லாம் சரி நண்பா, வயித்தக் காயப்போட்டுட்டு இப்படி நடந்தா சுகர் போயிட்டு உனக்கு டி.பி. வந்துடும் போலருக்கே, ஆள் வேற தொளதொளன்னு மாறிருக்கே. தினமும் ரெண்டு ட்ரிப் க்ளூகோஸ் ஏத்துனாதான் உன்ன காப்பாத்தவே முடியும் போலருக்கே’ என்றதும் நண்பேன் ஒரு மாதிரியாக ஆகாயத்தை வெறித்துப் பார்த்தபடி இன்னொரு புது கதை சொன்னான் !

”கொய்யாப்பழம்தான் சாப்பிடக் கூடாதுன்னு சொன்னதைக் கேக்காம தெனமும் ரெண்டு மூணுன்னு உள்ளே தள்ளுனதாலதான் இன்னிக்கு அவஸ்த படறேன் நண்பா, நீதான் ஏதாவது வழி சொல்லணும்” னு, சொல்லிட்டு ஆக்ராவ்ல தொலைஞ்ச சேத்துப்பட்டு கொழந்த மாதிரி முழிச்சான்.

‘டேய் வெளக்கெண்ண… மனுஷனோட ஆரோக்கியத்துக்குத் தேவப்படற வைட்டமின்கள், புரதங்கள், நார்ச்சத்து எல்லாமே கொய்யாப்பழத்துல இருக்குடா… நிறையவே சாப்பிடலாம். வெயிட் போடாது. உடம்புக்குத் தேவையான எல்லா சத்தும் கொய்யாவுல இருக்கு. சுகர் பிரச்னை இருக்கவங்களுக்கு பழ வகைகள் ஆகாதுதான், ஆனா கொய்யா ஆகும்.
டைப்-2 நீரிழிவைத் தடுக்க கொய்யாப்பழம்தான் உடம்புக்குள்ள வேலை பாக்குது.
கொய்யாவ்ல இருக்குற பொட்டாசியம், வைட்டமின் சி போன்ற சமாச்சாரங்கள், நெஞ்சுவலியை போக்கி மாரடைப்பைத் தடுக்குற வேலையை அடிசனலா பாக்குது. உடம்புல சேர்ந்துப்போய் கிடக்கிற நச்சுக்களை வெளியேத்தறதோட, இன்னொன்னையும் கொய்யா செய்யுது சொல்ட்டா?’

“சொல்லு நண்பா, உனுக்குப் புண்ணியமாப் போவட்டும்”…

’ஒரு மண்ணாங்கட்டியும் வேணாம், நல்லாயிருக்க வழி சொல்றதே உங்கணக்குல புண்ணியமா… அத நீயே பொட்டலம் கட்டி எடுத்துக்க,
ஆரம்பக்கட்ட கேன்சர் கிருமிகளை தடுக்கும் வேலையையும் கொய்யா சிறப்பாகவே செய்யுது.

“ஓஓஓ… அப்படீன்னா காய் மாதிரி இருக்குற எல்லாத்துலயும் கேன்சருக்கு மருந்து இருக்கா ?”

‘உனக்கு சுகர் வந்ததுல தப்பே இல்ல ராசா !
கேரட்டை எடுத்துக்கோ, அதுவும் நீ சொல்றது போல காய்தான். சுகர் இருக்குறதால, அத நீ சாப்பிடாத. கேரட்டுல அதிகமா இருக்குற ’கேரட்டின்’ குற சத்து கேன்சர்ங்குற புற்று நோய் வராம தடுக்குது. அதேபோல அதுலருக்குற பீட்டா கரோட்டின் குற சத்து மனுஷனோட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்குது. ரத்தத்துலருக்க கெட்ட கொழுப்போட அளவைக் குறைக்குது. பெண்கள் தொடர்ந்து சாப்பிட்டால் ஆரம்பகால மார்பகப் புற்று நோய்க்கு எதிராகவும், மார்பகப் புற்று நோய் முற்றிப் போய்விடாமலும் பாதுகாக்குது. நீ தெரிஞ்சுக்க மட்டும்தான் இதெல்லாம் சொல்றது, அதாவது வருமுன் காப்போம் போல ! உனக்குத்தான் எல்லாம் வந்து ரூம் எடுத்து தங்கியிருக்கே

தினமும் இருவது கிலோ மீட்டருக்கு எதுக்கு வாக்கிங் போறோம், ஏன் ரெண்டு சப்பாத்தி ரெண்டு இட்லியோட ஒரு நாளை முடிச்சுக்கறோம்ன்னு யோசிக்கறதே கிடையாதுல்ல. கண்மூடித்தனமா எதையும் நம்பாத, கேக்காத, பேசாதே, கடைபிடிக்காத, இதான் இன்னிக்கு உனக்கான மெசேஜ், சரியா ?’

“சரி நண்பா !”
’ங் ‘கொய்யா’ ல பொசுக்குன்னு சரின்னுட்டே…

-எர்ணாவூர் பச்சிலைநம்பி.

Exit mobile version