திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வட்டாட்சியர் ரஜினிகாந்த் தலைமையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட விவசாயிகள் தோட்டக்கலை சார்பில் வழங்கப்படும் மானிய விலை விதைகள் தரமற்றவையாக உள்ளதாகவும் அத்தகைய விதைகளை பயன்படுத்தினால் தங்களுக்கு இழப்பு ஏற்படுவதாகவும் அப்போது தெரிவித்தனர். அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் வணிகர்களிடமிருந்து இடைத்தரகு முறையில் தரமற்ற நெல் கொள்முதல் செய்யப்படுவதாகவும் அவர்கள் புகார் தெரிவித்தனர். தொடர்ந்து பேசிய விவசாயிகள், “மாவட்டத்தின் நீர் ஆதாரமாக விளங்கும் ஆரணி ஆற்றில் மணல் அள்ளுவதற்காக மணல் கொள்ளையர்கள் லாரிகளில் மணல் கொண்டு செல்ல, சட்ட விரோதமாக பொதுப்பணித் துறை அதிகாரிகளின் துணையோடு சாலை அமைத்துள்ளனர், இதனால் மழைக்காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் பொழுது நீரோட்டம் தடைபட்டு ஆற்றின் கரை உடைந்து அருகிலுள்ள விளை நிலங்கள் நீரில் மூழ்கும் ஆபத்தும் உள்ளது… ஆற்று மணல் திருடர்களால் சட்ட விரோதமாக ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள சாலையை உடனடியாக அகற்ற வேண்டும்” என வலியுறுத்தியதோடு தங்களது இருக்கையில் இருந்து எழுந்து அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுப் பணித்துறை அதிகாரிகள், இரண்டு நாட்களில் ஆரணி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள சாலையை அகற்றுவதாக உறுதியளித்தனர்.
ஆற்றின் குறுக்கே சாலை அமைத்து ஆற்றுமணல் சுரண்டித் திருட லாரிகளில் ஆட்கள் போய் வருகிறார்கள். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் கீழுள்ள அதிகாரிகளுக்கோ காவல் துறையினருக்கோ மட்டும் இப்படியொரு சம்பவம் நடப்பது இதுவரை தெரியவில்லை. குறைதீர் நாள் கூட்டத்தில் பங்கேற்று, விதை சரியில்லை, உரம் சரியில்லை, என்று குறைகளை தெரிவித்து விவசாயத் தேவையை சரி செய்து கொண்ட விவசாயிகள், இப்போது நொந்துபோய் ஆற்றுமணல் திருடர்கள் குறித்து பேச ஆரம்பித்திருக்கிறார்கள்… மணல் அள்ள ஏதுவாக ஆற்றின் குறுக்கே சாலை அமைத்துள்ள உச்சபட்ச டெக்னாலஜி குறித்து பேச ஆரம்பித்திருக்கிறார்கள்… எதிர்வரப்போகும் மழைக் காலத்தில் முன்னர் சீரழிந்தது போல் திருவள்ளூர் மாவட்டம் மணல் கொள்ளையர்களால் இப்போது சீரழியக் கூடாது – தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்…
– தேனீஸ்வரன் –