காலை பத்துமணியிலிருந்தே எழுதத் தொடங்கி விட்டனர்… “சென்னையன்ஸூக்கு ஓட்டுப்போட துப்பில்லே, சென்னையன்சுகளுக்காக மத்திய மாநில அரசும் மாநில அரசும் இம்புட்டு கொட்டிக் கொடுத்தும் என்ன பிரயோஜனம்” னு ஓங்கி அடிச்சுட்ருக்காங்க! மழை அதிகமா அடிச்சாலும் சரி, தேர்தல்ல வாக்குப்பதிவு குறைஞ்சாலும் சரி, சென்னை எப்போதுமே அடிபடுவது இயல்பு தான். பக்கத்து மாவட்டங்களான திருவள்ளூர் காஞ்சிபுரம் ராணிப்பேட்டை வேலூர் செங்கல்பட்டுகளிலும் இதே டவுன் நிலைதான். பேரூராட்சிகளில் இந்த நிலை இல்லை என்பது வியப்புக்குரியது. 40% பதிவு நடந்துள்ளது. தேர்தலுக்கு நான்குநாட்கள் முன்னதாகவே பூத் ஸ்லிப் செக்கப்பை அனைத்துக் கட்சியின் பிரதிநிதிகளும் தொகுதி – வார்டுகளில் செய்து முடித்து விடுவார்கள், இந்த முறை அப்படியான வேகம் பரவலாகவே இல்லை. இதற்கெல்லாம் மிஸ்டர் சென்னையன்கள் பொறுப்பேற்றுக் கொள்ள முடியாது அன்பர்களே. எல்லாவற்றையும் விட இன்னொரு விஷயம், யார் ஆட்சியில் இருந்தாலும் இது – இப்படித்தான் இருக்கும்… கொரோனா தாக்கம் என்று முடக்கப்பட்ட மக்கள் எல்லா வகையிலும் நொடிந்து போய்க் கிடக்கிறார்கள். தேர்தல், அரசியல், கட்சிகள், தலைவர்கள் என்று எந்த பிம்பத்தின் மீதும் மக்களின் மனம் மகிழ்வாய் ஒட்டியிருக்க விரும்பாத மனநிலைதான் இப்போது இருக்கிறது. மனதளவிலும் பொருளாதார அளவிலும் காலிப்பை போல மக்கள் ஆகிவிட்டார்கள். முன்னெப்போதும் இல்லாதபடி பெரிய கட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் இந்த வார்டு (உள்ளாட்சி) தேர்தலில் அதிகளவில் போட்டிக் களத்தில் இருப்பதும் கூட மக்கள் மனதில் இனம் புரியாத வருத்தத்தையும் ஏக்கத்தையும் குழப்பத்தையும் உண்டு பண்ணி இருக்கக் கூடும். வேர்களுக்கு வைத்தியம் பார்க்காமல் கிளைகளுக்கும் இலைகளுக்கும் வைத்தியம் பார்ப்பது எப்போதுமே சரியாய் வராது!
(ந.பா.சேதுராமன் 19.02.2022)