ஸ்டேட் வங்கிகளில் பணியாற்றும் மகளிர்க்கு தனி கழிப்பறைகள் அமைத்துக் கொடுக்குமாறு சி.பி.எம். மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் விடுத்த கோரிக்கையை வங்கியின் தலைமை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர். அது குறித்து ஸ்டேட் வங்கி சேர்மனுக்கு சு.வெங்கடேசன் எம்.பி., எழுதிய கடிதமும் ஸ்டேட் வங்கி சேர்மன் எழுதிய பதில் கடித விபரமும் :
ஜனவரி 25, 2022 அன்று நான் (சு.வெங்கடேசன் எம்.பி.,) ஸ்டேட் வங்கி சேர்மனுக்கு மகளிர் ஊழியர்களுக்கு எல்லா ஸ்டேட் வங்கி அலுவலகங்களிலும் தனிக் கழிப்பறை உறுதி செய்யப்பட வேண்டும் என கடிதம் எழுதி இருந்தேன்.
அதற்கு ஸ்டேட் வங்கி மைய அலுவலகத்தில் இருந்து பதில் அளிக்கப்பட்டுள்ளது. ஸ்டேட் வங்கியின் மனித உறவுகள் மற்றும் நிறுவன மேம்பாட்டு துணை மேலாண்மை இயக்குனர் திரு ஓம் பிரகாஷ் மிஸ்ரா எனக்கு எழுதியுள்ள கடிதத்தில் (PRM/RS/2021-22/587),
“2018 லேயே மகளிர் தனிக் கழிப்பறை அமைத்திட வலியுறுத்தி சுற்றறிக்கை விடுத்துள்ளோம்; எனினும் உங்களின் கடிதம் கிடைத்தவுடன் எங்கள் எல்லா வட்டார அலுவலகங்களுக்கும் மகளிர் கழிப்பறைகளை எல்லா கிளைகள்/ அலுவலகங்களிலும் உறுதி செய்திட வேண்டுமென மீண்டும் அறிவுறுத்தல்களைத் தந்துள்ளோம். தற்போது தனிக் கழிப்பறை மகளிருக்கு இல்லாத அலுவலகங்களில் உடனே அமைத்திட கட்டிட உரிமையாளர்கள் இடம் பேசுமாறும், கட்டிட உரிமையாளர்கள் இயலாதென கூறினால் மாற்று ஏற்பாடுகளை செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளோம்.”
ஸ்டேட் வங்கியின் பதிலுக்கு நன்றி.
இப் பிரச்சினையை எனது கவனத்திற்கு இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் (BEFI) மற்றும் அதன் மகளிர் துணைக் குழு கொண்டு வந்திருந்தது.
ஸ்டேட் வங்கி மைய அலுவலக வழிகாட்டல் உடனடியாக வட்டார அலுவலகங்களால் அமலாக்கப்படும் என நம்புகிறேன்.
பாலின நிகர் நிலை, பெண்களின் பிரத்தியேக கோரிக்கைகளில் ஒரு நேர் மறை நகர்வு இது” இவ்வாறு சு.வெங்கடேசன் எம்.பி., யின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வேளையில் நம்முடைய “மெட்ராஸ்குரல்” இணையதளம் சார்பில், எம்.பி., திரு. சு.வெங்கடேசன் பார்வைக்கு நம்முடைய ஒரு வேண்டுகோள்! “காவல்துறையில் பணியாற்றும் மகளிர் காவலர்களுக்கு (பணி நிமித்த) பயண வேளைகளில் தனி கழிப்பறை வசதி இல்லை ! சென்னை காவல் ஆணையராக ஆர். நட்ராஜ் இருந்த போது, செய்தியாளர் சந்திப்பில் ஹிண்டு நிருபர் திருமதி சுஜாதா இந்த விஷயத்தை கேள்வியாகவே அவரிடம் முன் வைத்தார். (சக ஊடகவியலாளனாக அப்போது நான் அருகிலிருந்தேன்) ! “பெண் காவலர்கள் பந்தோபஸ்து டூட்டியின் போது, நீண்ட நேரமும் நெடுந்தூரமும் போலீஸ் வேனில் பயணப் படுகின்றனர். ஆண் காவலர்கள் தங்களின் இயற்கை உபாதையை பொதுவெளியில் சூழலுக்கேற்ப பயன்படுத்திக் கொள்கின்றனர். பெண் காவலர்களின் நிலைமை பரிதாபம். காவல் வேனிலேயே அவர்களுக்கு (நடமாடும் கழிப்பறை போல) கழிப்பறையை அமைத்துக் கொடுக்க சிட்டி போலீஸ் கமிஷனரான நீங்கள் ஏதாவது முயற்சி செய்யலாமே? ” என்று கேட்டே விட்டார். “கண்டிப்பாக உங்கள் கோரிக்கையை உரிய இடத்துக்கு கொண்டு செல்கிறேன். நியாயமான உங்கள் கோரிக்கையை பாராட்டுகிறேன்” என்றார் கமிஷனர் நட்ராஜ். கொடுத்த வாக்குறுதியை சில வாரங்களிலேயே நடைமுறைக்கு கொண்டு வந்து விட்டார் போலீஸ் கமிஷனர் நட்ராஜ். ஓரிரு சென்னை நகர போலீஸ் வேன்களில் அது நடைமுறைப் படுத்தப்பட்டது. செய்தியாளர் சுஜாதா வைத்த கோரிக்கையை கமிஷனர் நட்ராஜ், அமல்படுத்திய அதே இடத்திலேயே அந்த விவகாரம் நிற்கிறது. சென்னை பெருநகரிலேயே பெண் காவலர்களுக்கான தனி கழிப்பறை அதன்பின்னர் விரிவு படுத்தப்படவில்லை. பிற நகரங்களுக்கும் அந்தத் திட்டம் சென்று போய் சேரவில்லை. மதிப்பிற்குரிய சு.வெங்கடேசன் எம்.பி., அவர்கள் இது குறித்து பாராளுமன்றத்தில் குரலெழுப்ப வேண்டுகிறோம்!
-ந.பா.சேதுராமன் 👏