Madras Kural

போதைப் பொருள் ஆய்வகம்! சீல் வைத்த சென்னை போலீஸ்… அடுத்தடுத்து சிக்கிய சப்ளையர்கள்!

ஆந்திர மாநிலத்தில் ஆய்வகம் வைத்து போதைப்பொருளை தயாரித்த கும்பல், சென்னையில் ஆட்களை நியமித்து சப்ளை செய்ததை தனிப்படை போலீசார் கண்டு பிடித்துள்ளனர். மெத்தம்படமைன் என்ற போதைப்பொருளை தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் சிலர் பயன்படுத்தும் தகவல் சென்னை போலீசாருக்கு கிடைத்தது.

https://madraskural.com/wp-content/uploads/2022/03/WhatsApp-Video-2022-03-09-at-1.59.43-PM.mp4

போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவில் வடக்கு ஜாய்ன் கமிஷனர் ரம்யாபாரதி தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். முதல்கட்ட தேடுதலில் தண்டையார்பேட்டை வஉசி நகர் ரயில்நிலையம் அருகே கஞ்சா மற்றும் மெத்தம்படமைன் ஆகியவற்றை வைத்திருந்த ரோஹித் மணிகண்டன் பிடிபட்டார். புதுவண்ணாரப் பேட்டையை சேர்ந்த இவர் கொடுத்த தகவலின்பேரில் ராயபுரம் காதர் என்பவர் பிடிபட்டார். அங்கிருந்து செயின் லிங்க் போல தண்டையார்பேட்டை நாகூர்ஹனீபா மூலம் சப் டீலராக வாங்கி விற்றதை சொன்னதும் நாகூர் ஹனீபாவையும் போலீசார் பிடித்தனர். அம்பத்தூர் ஷேக்முகம்மது, ராயபுரம் காஜாநவாஸ், மண்ணடி தமீம் என்கிற ரசுல்லா ஆகியோர்தான் தனக்கான மெயின் சப்ளையர் என்று நாகூர்ஹனீபா தெரிவிக்க அவர்களை மொத்தமாக வளைத்துப் பிடித்தது போலீஸ் டீம். அம்பத்தூர் ஷேக் முகம்மது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமான மெத்தம்படமைன் போதைப்பொருள் சிக்கியது. ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தின் ஓங்கோல் பகுதியிலுள்ள ரமேஷ்தான் போதைப்பொருள் ஆய்வகமே வைத்து தயாரிக்கிறார் என்ற தகவல் ஷேக் முகம்மது மூலம் போலீசாருக்கு கிடைத்தது. சென்னை தனிப்படை இதைத்தொடர்ந்து ஓங்கோல் விரைந்தது. போதைப்பொருள் தயாரிப்பு தொழிற்சாலை நடத்தி வந்த ரமேஷ் சிக்கவில்லை, ரமேஷின் உதவியாளரான வெங்கட்ரெட்டி மட்டும் சிக்கினார். பிடிபட்ட அனைவரையும் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர். இன்னும் சிலர் வழக்கில் சிக்குவார்கள் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. தலைமறைவான ரமேஷ் சிக்கிய பின்னர் வழக்கின் அடுத்தடுத்த செயின் லிங்க் தெரியவரும்!

-ந.பா.சேதுராமன்

Exit mobile version