Madras Kural

தோஷம் விலக நோய்கள் அகல செல்வம் சேர்ந்திட இங்கே போங்க !

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், காவேரிப்பாக்கத்திலிருந்து கிழக்கே ஏழாவது கிலோமீட்டரில் உள்ளது கரிவேடு கிராமம்.

பல்லவர்கள் ஆட்சி செலுத்திய காலத்தில் வடக்கு எல்லையில் யானைப் படைகள் தங்கியிருந்த இடம் என்பதால், `யானைகள் தங்கும் இடம்: படைக்கலம்’ என்ற பொருளில் கரிவேடு என்ற பெயர் இந்த கிராமத்துக்கு வந்துள்ளது.

கரிவேடு கிராமத்தின் வெட்டவெளியில் சுமார் அரை ஏக்கர் பரப்பளவில் முழுவதும் கற்றளியாக (கல்லாலயம்) அமைந்துள்ளது சிவாலயம். குடியிருக்கும் ஈஸ்வரனின் திருப்பெயர் அருள்மிகு அரிபிரசாதேஸ்வரர். அம்பிகை – அருள்மிகு தர்மவர்த்தினி எனும் அறம்வளர்த்த நாயகி.
திருமாலுக்கும் தேவி மற்றும் பூதேவிக்கும் ஏற்பட்ட பிணி தீர அகத்திய மாமுனி உள்ளிட்ட பலர் அளித்த சிகிச்சைகளும் பயனற்றுப் போக, திருமால் தேவியருடன் இங்கு வந்து ஈசனை வணங்கவே பிணி விலகியதாக செவிவழி தகவல் இன்னமும் கரிவேட்டில் உள்ளது. பிணி போக்கிய சாட்சியாக, அதே கரிவேட்டில் ஶ்ரீதேவி – பூதேவி சமேத பத்மநாப சுவாமிகளும் எழுந்தருளி உள்ளார். மாலவன் வணங்கியதால் இறைவன் பெயர் அரிபிரசாதேஸ்வரர் என்றாகி உள்ளதை நாம் அறிய முடிகிறது.
மேலும் மாலவன், தட்ச யாகத்தில் கலந்துகொண்டதால் ஏற்பட்ட குறையும் தோஷமும் நீங்கிட, இங்கு வந்து வில்வ மரத்தின் கீழே காட்சி தந்த ஈசனை வணங்கி, சாப விமோசனம் அடைந்தார்’ என்கிறது தல வரலாற்றின் இன்னொரு பக்கம். அதேபோல், ஈசனை தரிசித்த கையோடு கேட்டது யாவும் திருமாலின் கைவரப் பெற்றதால், பலன் கிடைத்த இடத்திலேயே, சிவாலயம் அமைத்து விழாவும் எடுத்தாராம்… அரிக்கு அருள் செய்த ஈசன் அரிபிரசாதேஸ்வரர் என்ற திருநாமம் கொண்டார் என்பதும் மரபு. ஆலயத்தில் இருப்பது மொத்தம், மூன்று லிங்கத் திருமேனிகள். முதலில் மூலவர் அரிபிரசாதேஸ்வரர்; இரண்டாவதாக அம்பிகை வழிபட்ட தர்மேஸ்வரர்; மூன்றாவதாக பாதாள லிங்கேஸ் வரர்.

கருவூரார் வழிபட்ட
பாதாள லிங்கம்!

பதினெண் சித்தர்களில் ஒருவரான கருவூரார் (கருவூர் சித்தர்) ஒரு பாதாள அறையை உருவாக்கி, பல காலம் தங்கியிருந்து பாதாளேஸ்வரரை வழிபட்டார்.

ராஜராஜசோழ மாமன்னனுக்கு ஆலோசகராக ஞால குருவாக விளங்கிய கருவூரார், யோக சூட்சுமங்களை பாதாள லிங்கேஸ்வரரை வழிபட்ட காலத்தில்தான் அதிகமாய் கைவரப் பெற்றார் என்பதும் வரலாறு.
மூன்று லிங்க மூர்த்தியரில் – சக்தி வழிபட்ட தர்மேஸ்வரரை வணங்கினால் செல்வம். திருமால் வழிபட்ட அரிபிரசாதேஸ்வரரை வணங்கினால் தோஷங்கள் விலகும் – நோய்கள் போம். கருவூரார் வழிபட்ட திருமேனியை வணங்கினால் முக்தி நிலை – என்பதும் வரலாறு.
வாய்ப்பும் நம்பிக்கையும் இருக்குறவங்க, கருவூரார்
வழிபட்ட சிவனை ஒருமுறை போய்த்தான் பாருங்களேன் !

-எர்ணாவூர் பச்சிலை நம்பி

Exit mobile version