சேவையின் இன்னொரு பெயர் விஜயபாஸ்கர் !
சென்னை தீ அவிப்பு மற்றும் மீட்புத்துறையில் பணியாற்றும் வந்த வாசிக்காரர், கட்டுரையின் நாயகர் விஜயபாஸ்கர். என்ன செய்து விட்டார் அப்படி?
போலீஸ், தீ அவிப்பு மற்றும் மீட்புத்துறை, இராணுவம் போன்ற துறைகளில் சேர ஒரு காலத்தில் கஜினிமுகம்மதுக்கு இணையாக 13 முறை முயன்று தோற்றுப் போனார். தோல்விதான் வெற்றியின் படிக்கட்டு என்றுணர்ந்தவர் 14வது முறையாக எடுத்த முயற்சியில் தீ அவிப்பு மற்றும் மீட்புப்பணி துறையில் 2006 ஆம் ஆண்டில் பணியமர்த்தப் பட்டார். 4800 ரூபாய் அப்போது அவருக்கான மாத ஊதியம்.
சிறுவயதில் கணவனை இழந்த தங்கைக்காகவும் தங்கையின் பிள்ளைகளுக்காகவும் ஒரு பக்கம் போராட்டம்…
தாயாரின் உடல் நலம் குன்றவே சொந்த ஊரான (தேசூர்) வந்தவாசிக்கு பணியிடமாற்றல் மூலம் சென்னையிலிருந்து மாறுதல் பெற்று போய்விட்டார்.
இங்கிருந்துதான் தொடங்குகிறது விஜயபாஸ்கரின் சேவை அத்தியாயம்.
பிளஸ் டூ வகுப்பில் விஜபாஸ்கரின் மனைவி 980 மதிப்பெண் பெற்றவர். இவ்வளவு மதிப்பெண் பெற்று விட்டு சமையற்கட்டோடு மனைவி சுருங்கி விடக் கூடாது என்ற உந்துதலில் இரவும் பகலுமாய் போட்டித் தேர்வுக்கு அவருக்கு பயிற்சியை தருகிறார். காஞ்சிபுரத்தில் ஒரு பயிற்சி மையத்தில் கூடுதல் பயிற்சிக்கு தயார்ப் படுத்துகிறார். டைப்ரைட்டிங்கில் ஹையர் லெவல் முடிக்கவும் இன்னொரு பயிற்சியும் தனியாகப் போய்க் கொண்டிருக்கிறது. எதிர்பார்த்துக் காத்திருந்த தமிழ்நாடு அரசுப் பணி தேர்வாணைய தேர்வும் (TNPSC) வரவே மனைவியை தேர்வு எழுத வைக்கிறார். கல்வித்துறையில் இளநிலை உதவியாளராக பணி கிடைக்கிறது. மனைவிக்கு வழிகாட்ட நான் இருந்தேன், வழிகாட்டல் இல்லாமல் எத்தனை பேர் மூலையில் முடங்கிக் கிடக்கின்றனரோ என்ற வேதனை வாட்டியது, விஜயபாஸ்கரை… வாட்சப்பில் ஒரு மெசேஜைப் போட்டார். வழிகாட்ட நான் இருக்கிறேன் வாங்க தம்பிகளே, தங்கைகளே என்று அழைப்பு விடுத்தார்.
முதல் அழைப்பிலேயே வந்தனர் முன்னூறு பேர்!
வந்தவாசி போலீஸ் டிஎஸ்பியாக இருந்த பெயருக்கேற்ற திரு. தங்கராமனை அணுகினார். “படிக்க இடம்தானே, அதற்கு நான் பொறுப்பு” என்றார், தங்கமான ராமன். வந்தவாசி RCM திருச்சபையின் ஃ பாதர், திருச்சபையிலேயே ஒரு அறை ஒதுக்கி பலர் எதிர்கால கனவுகள் நிறைவேற கதவை திறந்து விட்டார்.
மாணவர்களுக்கு பயிற்சியளிக்க காஞ்சிபுரத்திலிருந்து நான்கு பாடப் பிரிவுகளுக்கு வகுப்பெடுக்க நான்கு ஆசிரியர்களை நாளொன்றுக்கு தலா ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வைத்து பயிற்சிக்கு வழி செய்தார். மொத்தம் ஐம்பது நாட்கள் வகுப்பு போனது. கேள்வி – பதிலுக்கான தாள்களை தயார் செய்வது இதில் வராத தனிச்செலவு! பயிற்சியில் பங்கேற்ற முப்பது பேரில் 22 பேர் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றனர்.
வந்தவாசி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி விளையாட்டுத் திடலில், விஜயபாஸ்கர் பயிற்சி அளிப்பதைப் பார்த்து விட்டு மேலும் 15 பேர் புதிதாக என்ட்ரி ஆக எண்ணிக்கை இன்னும் கூடிப்போனது. மொத்தம் 42 பேரில் உடல் தகுதித் தேர்வில் 11 பேர் வெற்றி பெற்றனர். பதினோரு நபர்களுக்கும் கிடைத்தே விட்டது அரசுப்பணி. சென்னை ஆவடி, வேலூர் காவலர் பயிற்சி மையங்களில் தற்போது 11 பேரும் பயிற்சியில் இருக்கின்றனர். ஐவர் பெண்கள், அறுவர் ஆண்கள். மொத்தம் 11. பயிற்சிக்காக சேர்ந்தனர்.
இவர்களில் ஐந்து பெண்கள். ஆறு பேர் ஆண்கள்.
வெற்றிகரமாக பயிற்சி முடித்து வருபவர்களை யூனிபார்மோடு விஜயபாஸ்கர் அழைத்துப் போகும் இடமாக இரண்டு இடம் இருக்கிறது. படிக்கவும் பயிற்சி பெறவும் மனக்கதவை திறந்து வைத்த போலீஸ் டிஎஸ்பி திரு. தங்கராமன், வந்தவாசி கத்தோலிக்க திருச்சபையின் அருட்தந்தை பன்னீர் செல்வம் ஆகிய அன்புறவுகளே அந்த இடம்!
மூன்றாவதாகவும் ஒரு கதவு இருக்கிறது – அது திருமதி விஜயபாஸ்கரின் இதயக்கதவு. பேருள்ளம் கொண்ட அந்த பெருமாட்டி முகம் சுளியாது காட்டிய கனிவும், வெளியில் சொல்லாது செய்து முடித்த உதவிகளும் சிறப்பன்றோ! வந்தவாசி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளிலுள்ள அரசு மற்றும் தனியார் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் விளையாட்டில் ஆர்வமுள்ள யாவருக்கும் நேரில் இலவச பயிற்சியளிக்க விஜயபாஸ்கர் பெரும் திட்டம் ஒன்றை மனதில் வைத்திருக்கிறார். கொடுக்க தயாராக இருக்கிறார். சேவை மனப்பான்மையுடன் எதையும் எதிர்பாராது பாடப் பிரிவுகளுக்கு வகுப்பெடுக்கும் நல்லாசிரியர்கள் விஜயபாஸ்கர் போன்றவர்களுக்கு தோள் கொடுக்க துணையாய் நிற்பது எதிர்கால தலைமுறைக்கு பேருதவியாய் இருக்கும்.
பேசித்தான் பாருங்களேன், திரு. விஜயபாஸ்கரிடம்…
(Mobile : 9551137234 – )
மனிதநேயர் -சமூக சேவகர் – சீனியர் சிட்டிசன் – அண்ணன் வந்தவாசி எம்.பி. பத்மநாபன் உதவியுடன் எழுதப்பட்ட பதிவில் பெரிதும் மகிழ்கிறேன்
– ந.பா.சேதுராமன் – (படம் – திருவாளர்கள் விஜயபாஸ்கர் மற்றும் எம்.பி. பத்மநாபன்)