சென்னையில் வாக்குப்பதிவு ஏன் சரிவு என்ற அலசலை ஊடகங்கள் ஒருபக்கம் செய்து வருகின்றன. அதே வேளையில் “சென்னையன்கள் செத்தே போகலாம்” என்றளவில் சோஷியல் மீடியா நட்புகள் (?!) குதறியெடுத்து எழுதி வருகின்றனர். இந்த வேளையில் நான் பலருக்கு அளித்த பதில் (கமெண்ட்) களை இங்கே கொடுத்துள்ளேன்! சென்னையில் வாக்குரிமை இருப்பவர்கள் அதாவது சென்னை மண்ணின் பூர்வகுடிகள் அத்தனை பேருமே வாக்களித்துள்ளனர். (இது வக்காலத்து அல்ல! ) வணிகத்துக்காகவும் வாழ்வாதாரத்துக்காகவும் சென்னைக்கு வந்து அல்லது வந்து போய்க் கொண்டிருக்கிற மக்களும் – சென்னையிலேயே வீடு இருந்தாலும் பிறந்த மாவட்டத்தில் வாக்குரிமை வைத்துள்ளோரும் வாக்குகளை எங்கு அளிப்பார்கள் என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன். “இந்த முறை தானே சென்னையில் வாக்கு குறைந்துள்ளது ?” என்று உங்கள் கேள்வி இருக்குமானால் : “கடந்த பத்து ஆண்டுகளாக கவுன்சிலர்கள் என்ற இருக்கை இல்லாமலே மாஜி கவுன்சிலர்களும் அவர்களின் அத்தான்களும் சட்டைப் பொத்தான்களும் சென்னை வாழ் பொதுமக்களை நிம்மதியாக வாழ விடவில்லை. சொந்த வீடு வைத்திருந்த பலர் ஊரைவிட்டே ஓடிப்போகும் அளவுக்கு டார்ச்சர். மக்களின் எல்லாக் கோபமும் தேர்தல் நேரத்தில் ஒருபக்கம் போட்டுத் தாக்கி இருக்கக்கூடும், இதுவும் ஒரு காரணம் ! இது கட்சி சார்ந்த சார்பு மனநிலை வெளிப்பாடு அல்ல, பொதுவான மனநிலையே இதுதான் ! சுனாமி ஒருவருக்கென்றா தனியாய் கிளம்புகிறது – இது அப்படித்தான். அதிக செ.மீ. மழை அடித்தாலும், கொரோனா பரவல் அதிகம் என்றாலும், சுனாமி கொத்தாக தூக்கினாலும், அது “சென்னையன்ஸின் திட்டமிட்ட சதி” என்ற ரெகுலர் அட்டாக்கை மக்கள் மறக்காதிருக்க வாழ்த்துகள். சென்னையில் வாக்கு சரிவு குறித்து
காலை பத்துமணியிலிருந்தே மக்கள் எழுதத் தொடங்கி விட்டனர். “சென்னையன்ஸூக்கு ஓட்டுப்போட துப்பில்லே, சென்னையன்சுகளுக்காக மத்திய அரசும் மாநில அரசும் இம்புட்டு கொட்டிக் கொடுத்தும் என்ன பிரயோஜனம்” னு ஓங்கி அடிச்சுட்ருக்காங்க! மழை அதிகமா அடிச்சாலும் சரி, தேர்தல்ல வாக்குப்பதிவு குறைஞ்சாலும் சரி, சென்னை எப்போதுமே அடிபடுவது இயல்புதான். பேரூராட்சிகளில் இந்த நிலை இல்லை என்பது வியப்புக்குரியது. தேர்தலுக்கு நான்குநாட்கள் முன்னதாகவே பூத் ஸ்லிப் செக்கப்பை அனைத்துக் கட்சியின் பிரதிநிதிகளும் தொகுதி – வார்டுகளில் செக்கப் செய்து முடித்து விடுவார்கள், இந்த முறை அப்படியான வேகம் இல்லை. இதற்கெல்லாம் மிஸ்டர் சென்னையன்கள் பொறுப்பேற்றுக் கொள்ள முடியாது அன்பர்களே. யார் ஆட்சியில் இருந்தாலும் இது – இப்படித்தான் இருக்கும்… கொரோனா தாக்கம் என்று முடக்கப்பட்ட மக்கள் எல்லா வகையிலும் நொடிந்து போய்க் கிடக்கிறார்கள். தேர்தல், அரசியல், கட்சிகள், தலைவர்கள் என்று எந்த பிம்பத்தின் மீதும் மக்களின் மனம் மகிழ்வாய் ஒட்டியிருக்க விரும்பாத மனநிலைதான் இப்போது இருக்கிறது. மனதளவிலும் பொருளாதார அளவிலும் காலிப்பை போல மக்கள் ஆகிவிட்டார்கள். முன்னெப்போதும் இல்லாதபடி பெரிய கட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் இந்த வார்டு (உள்ளாட்சி) தேர்தலில் அதிகளவில் போட்டிக் களத்தில் இருப்பதும் கூட மக்கள் மனதில் இனம் புரியாத வருத்தத்தையும் ஏக்கத்தையும் குழப்பத்தையும் உண்டு பண்ணி இருக்கக் கூடும். வேர்களுக்கு வைத்தியம் பார்க்காமல் கிளைகளுக்கும் இலைகளுக்கும் வைத்தியம் பார்ப்பது எப்போதுமே சரியாய் வராது! “கிராமங்கள்ல வசதி வாய்ப்பே இல்லே அந்த மக்கள், வாக்குகளை வாரி வழங்கிருக்காங்க, நகர்ப்புற மக்கள் (சென்னைதான்! ) ஆயிரம் (😂) வசதிகளை அனுபவித்தும் கூட (அட !) பில்டிங்கிலிருந்து (எதே பில்டிங்கா?😡) கீழிறங்கி வாக்களிக்க வரவில்லை “னு ஒரு ஏரியாவ்ல குத்துறாங்க! இன்னொரு ஏரியாப் பக்கம் போனா, “ஆட்சி மீது அதிருப்தி இருந்தால் வாக்குப்பதிவு எகிறும், இப்போது அப்படி எகிறாததைப் பார்க்கும் போது” ன்னு இழுத்து நிறுத்திட்டாங்க ! பேரூராட்சிகளில் வாக்குப்பதிவு அபாரமாய் எகிறி இருப்பதை எப்படி எடுத்துக் கொள்வது? சென்னைல மட்டும் அதிருப்தி – திருப்தி மேற்கோள் டிசைன் வேற மாதிரி இருப்பதுதான் விளங்கல! தேர்தல் ஆணையம் சொன்ன லிமிட்டை மீறாமல்தான் வேட்பாளர்கள் பிரசாரம் செய்தார்களான்னு கொஞ்சம் உண்மையோடு கவனிங்கப்பா. மேளம் என்ன தாளம் என்ன பட்டாசு என்ன பைக்ஸ் ஊர்வலம்தான் என்ன என்ன? போஸ்டர ஒட்டலே சரி, பிட் நோட்டீசை எத்தனை கலர்ல எம்மாம் பெரிய சைஸ்ல வேட்பாளர்கள் பறக்க விட்டாங்க என்பதையும் எழுதுங்க பேசுங்க சாமீயளா ! கூட்டணியில இருக்குற எம்.எல்.ஏ. வோட மனைவி, கணவரின் பிரசார ஆசிர்வாதத்தோடு சுயேச்சையா போட்டி களத்துல இருப்பதைப் பற்றிக்கூட பேசலாம், எழுதலாம், கதைக்கலாம். அந்த எம்.எல்.ஏ. மீது ஒழுங்கு நடவடிக்கைய இதுவரை கட்சியோட தலைமை எடுக்கல. அரசு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செஞ்சுட்டு ஒருத்தரு கட்சியோட வேட்பாளரா வார்டுல நிக்கறாரு. வேட்பாளர் சீட்டு இவருக்குத்தான்னு தலைமை முடிவு செஞ்சி வெச்ச பிறகு அவருக்கு ஏன் அரசு வழக்கறிஞர் பதவியைக் கொடுக்கணும்? இப்ப நான் குறிப்பிட்ட விஷயங்கள் சென்னை – சென்னைக்கு அருகாமை ஏரியாக்களில் நடந்தவைகள்தான். இதெல்லாம் மக்களின் மனப்புழுக்க வறையறைக்குள் தானே வரும்? வலியோரை எளியோர் வீழ்த்தும் ஆயுதம் தேர்தல் ஒன்றுதானே சாமீயளா? ( ந.பா.சேதுராமன் – 20.02.2022)