Madras Kural

செங்கல்பட்டு அரசியலில் என்னதான் நடக்கிறது?

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சியைக் கைப்பற்றி ஆளுங்கட்சியான தி.மு.க. விற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது அ.தி.மு.க!

இது என்ன அதிர்ச்சி, வெற்றியும், தோல்வியும் மாறி மாறி வருவது இயல்புதானே என்று, இதை கடந்து செல்ல முடியாது!

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் உள்ளது மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சி. ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள், 22.02.2022 – அன்று வெளியான போது அங்குள்ள 15 வார்டுகளில் அதிமுக 9 வார்டுகளில் வெற்றி பெற்றிருந்தது. ஆளுங்கட்சியான தி.மு.க.வின் மாவட்ட துணைச் செயலாளர் வெ.விஸ்வநாதன் மற்றும் ம.தி.மு.க.வின் துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா போன்றோர் இதே பகுதியில்தான் வசிக்கின்றனர். விசுவநாதனின் மகன் 5 வது வார்டிலும், மல்லை சத்யாவின் மனைவி 14வது வார்டிலும் இங்கு வெற்றி பெற்றனர். தனிப்பட்ட முறையிலான செல்வாக்குதான் இந்த வெற்றி என்று கருத்தில் கொள்ள முடியும். இவர்கள் இருவர் தவிர மற்றும் இருவர் என்றளவில் திமுக வெற்றியை இங்கே கைப்பற்றியுள்ளது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களில் வெற்றியைப் பார்த்த தி.மு.க. செங்கல்பட்டு மாவட்டத்தின் மதுராந்தகம் தொகுதியை மட்டும் அ.தி.மு.க.விடம் இழந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்த திருப்போரூர் ஒன்றியக் குழு பெருந்தலைவர் தேர்தல் முடிவின் போதும் அதேபோல் ஒரு சோதனை திமுகவுக்கு… அ.தி.மு.க.வும், திமுகவும் அங்கே சமபலமாக வெற்றிக் கோட்டில் நின்றிருந்ததால் பா.ம. க.வின் இரண்டு உறுப்பினர்கள் ஆதரவுடன்தான் தி.மு.க. வெற்றி பெற முடிந்தது. தமிழ்நாடு முழுவதும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வேறு மாதிரியான முடிவுகளை அதிமுக கூட்டணிக்கு கொடுத்த போதிலும் கைவிடவில்லை செங்கல்பட்டு! இப்பொழுதும் பேரூராட்சியில் தனிப்பெரும்பான்மையாக ஒன்பது உறுப்பினர்களை தக்க வைத்திருக்கிறது. அடுத்து நடைபெறப்போகும் தலைவருக்கான மறைமுகத் தேர்தலில் அதிமுகவின் வளர்மதி எஸ்வந்த்ராவ் தலைவராகவும், ஜி.ராகவன் துணைத் தலைவராகவும் அமரப்போகிறார்கள் என்கிற அளவில் வேகம் காட்டி வருகிறது அதிமுக…

(பிரீத்தி -எஸ்)

Exit mobile version