Madras Kural

கொத்தடிமைகளாக வாழும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வியும் மறுப்பா?

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, கும்மிடிபூண்டி போன்ற இடங்களில் 50க்கும் மேற்பட்ட தனியார் செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன. பிற மாவட்டங்கள் வட மாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் குறைந்த ஊதியத்தில் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வருகின்றனர். செங்கல் சூளை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறிய குடிசைகளில் குடும்பத்துடன் வசித்து வரும் இந்தத் தொழிலாளர்களின் குழந்தைகள் ஆரம்பக்கல்வி கூட கற்க முடியாத நிலை உள்ளது. கல்வி அறிவு இன்றி வருங்காலத்தில் இந்த குழந்தைகளும் கொத்தடிமைகளாகவே தங்களது வாழ்க்கையை ஓட்டும் நிலை உருவாகி வருகிறது. புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ராஜா தகவலின் பேரில் ஆட்சியர் உள்ளிட்ட பல தரப்புக்கு புகார் அளித்த பிறகும் நடவடிக்கை ஏதும் இல்லை என்று தெரிகிறது. கொத்தடிமைகளாக பணிபுரிந்து வரும் தொழிலாளர்களை மீட்கவும் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் கட்டாய கல்வியை அந்த குழந்தைகளுக்கு வழங்கவும் புகார்கள் வாயிலாக புரட்சிபாரதம் கட்சி மேற் கொண்ட நடவடிக்கை பலனில்லாமல் போனது. இதைத்தொடர்ந்து பொன்னேரி அம்பேத்கர் சிலையிலிருந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை கவன ஈர்ப்பு நடைபயணம் மேற்கொள்ள, புரட்சி பாரதம் கட்சியினர். முடிவெடுத்தனர். போலீசார் அனுமதி தர மறுத்தனர். இருப்பினும் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகையிட்டு புரட்சி பாரதத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முழுவதும் கொத்தடிமைகளாக இருப்போரின் பிள்ளைகளுக்கு கல்வியை உறுதிப்படுத்தி அரசு நடவடிக்கை எடுக்க அப்போது வலியுறுத்தப்பட்டது.

– தேனீஸ்வரன் –

Exit mobile version