Madras Kural

காவிரி டெல்டாவில் தொடரும் ஹைட்ரோகார்பன் அபாயம் !

‘பூவுலகின் நண்பர்கள்’ எச்சரிக்கை …
காவிரி டெல்டாவில் மேலும் ஒன்பது எண்ணைக் கிணறுகளை அமைக்கப் போகும் திட்டம் ஆபத்தானது என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை :
காவிரிப் படுகையில் Greater Narimanam ML Block, Adiyakkamangalam ML Block, Nannilam-I & Nannilam-II ML Block, Kali & Kali 6 ML Block, Kuthanallur ML Block, Greater Kovilkalapal ML Block and Pundi ML Block ஆகிய ஏழு எண்ணெய் வயல்களில் 30 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைப்பதற்காக ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் துறையானது, கடந்த 2015 ஆம் ஆண்டில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியிருந்தது.

அனுமதி பெறப்பட்ட 30 கிணறுகளில் 21 கிணறுகளை மட்டுமே ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தற்போது வரை அமைத்துள்ளது. இன்னும் 9 கிணறுகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப் படவில்லை. இந்த நிலையில் சுற்றுச்சூழல் அனுமதியின் கால அவகாசம் விரைவில் முடிவடையவுள்ளதால் மீதமுள்ள 9 கிணறுகளை அமைப்பதற்காக சுற்றுச்சூழல் அனுமதியை மேலும் நீட்டிக்கக்கோரி ஒ.என்.ஜி.சி. நிறுவனம் ஒன்றிய அரசிடம் விண்ணப்பித்துள்ளது.

ஓ.என்.ஜி.சியின் விண்ணப்பத்தை பரிசீலித்த ஒன்றிய அரசு சுற்றுச்சூழல் துறையின் நிபுணர் மதிப்பீட்டுக் குழு 2025ம் ஆண்டு வரைக்கும் சுற்றுச்சூழல் அனுமதியை நீட்டிக்கலாம் என ஒன்றிய அரசிற்கு பரிந்துரை செய்துள்ளது. இதன் காரணமாக விரைவில் காவிரி டெல்டாவில் மேலும் ஒன்பது ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கும் பணி தொடங்கும் நிலை உருவாகியுள்ளது.

தமிழ்நாடு அரசு கடந்த 2020 ஆம் ஆண்டே காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டம் இயற்றியுள்ளது. இந்த சட்டத்தால் புதிதாக அனுமதி பெற்று எந்த ஹைட்ரோ கார்பன் கிணறுகளையும் அமைக்க முடியாது. ஆனால், ஏற்கனவே அனுமதி பெறப்பட்ட கிணறுகள் தொடர்ந்து இயங்குவதை இச்சட்டம் கட்டுப்படுத்தாது என்பதால் இச்சட்டத்தால் காவிரி டெல்டாவை பாதுகாக்க முடியாது என பூவுலகின் நண்பர்கள் சார்பில் தொடர்ந்து கூறி வருகிறோம்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரகள் தமிழ்நாடு முழுவதும் எங்கும் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதிக்க மாட்டோம் எனவும் காவிரி டெல்டா விவசாயிகளை கண்ணை இமை காப்பதுபோல காப்போம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஹைட்ரோகார்பன் கிணறுகளால் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் தலைமையிலான நிபுணர் குழுவும் அரசிடம் அண்மையில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இந்த நிலையில் புதிய கிணறுகளை தமிழ்நாட்டில் அமைப்பதற்கு ஒ.என்.ஜி.சி. முயல்வது கடும் கண்டனத்திற்குரியதாகும்.

காவிரி டெல்டாவின் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு காவிரி டெல்டாவில் மேற்கொண்டு ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க முயலும் ஓ.என்.ஜி.சியின் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என முதலமைச்சரை கேட்டுக்கொள்கிறோம். மேலும் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் அவர்களின் அறிக்கையின் அடிப்படையில் ஏற்கனவே செயல்பட்டு வரும் ஹைட்ரோகார்பன் கிணறுகளையும் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கிறோம். – இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version