Madras Kural

இதுதான் இரிடியம் ! A டூ Z அலசல் – எச்சரிக்கை …

நிரூபிக்கப்பட்ட உண்மையை விட நிரூபணம் செய்யப்படாத வதந்திக்குத்தான் மதிப்பும், மரியாதையும் இருக்கிறது என்பது, ‘மடத்தனம்’ உயிர்ப்போடு இருப்பதையே உணர்த்துகிறது !

“மண்ணுள்ளிப்பாம்பைப் பிடித்து உணவாக உட்கொண்டால், நூறு வயது ஆனாலும் வீரியம் குறையாது” என்று ஆசைகாட்டி பேசித் திரியும் ஒரு கும்பல் !

“டேய் முண்டம், நூறு வயசுல உனக்கு
வீரியம் இருந்தால் என்ன, இல்லாமல் போனால் என்ன ?” என்று கேட்கத் தோணினால் தாராளமாக உடனே கேட்டு விடுங்கள்… உங்களின் ஒரு கேள்வி, அவனை சாகவிடாமல் காப்பாற்றக்கூடும்!
இரிடியம் வரிசையில் அழியும் இனத்தைச் சேர்ந்த, மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய கடல்குதிரை, நட்சத்திர ஆமை, காண்டாமிருகம் (கொம்பு ஸ்பெஷல் என்று சொல்லியே பித்துப் பிடித்து அலைகிறார்கள்) உடும்புக்கறி, காட்டுப்பூனை போன்ற உயிரினங்களை வணிகநோக்கில் குறி வைத்து அழிக்கிறார்கள்.

கோயில் கோபுரக்கலசத்தின் மீது விழுகிற இடி – மின்னல் தாக்குதல்களே கோபுரக் கலசத்துக்கு உள்ளே இருக்கும் பொருளை இரிடியமாக மாறி விடுகிறது என்கிற
வதந்தி, பல ஆண்டுகளாக வலுவில் சுற்றி வருகிறது !
வதந்தியின் விளைவாக பல கோபுரக்கலசங்கள், பைத்தியக்கார மனிதர்களால் திருடப்பட்டுள்ளன.

ஐ.ஆர்., என்ற மூலக்கூறு கொண்ட ஒரு தனிமம்தான் இரிடியம். வெள்ளியைப் போன்ற லேசான வெண்மையும், லேசான மஞ்சள் நிறமும் கலந்ததே இரிடியம். இந்தத் தனிமத்தின் அணு எண் : 77 ஆகும். பிளாட்டினம் வகை இடை நிலைத் தனிமமான
இது, 4,471- டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தில் மட்டுமே உருகும் தன்மை கொண்டது.

இயற்கையாகத் தோன்றும் பிளாட்டினத்துடன் காணப்படும் கரையாத மாசுக்களில் இருந்து, இரிடியம் 1803 -ல் கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடிப்பாளரான, ’சிமித்சன் டென்னண்ட்’, தான் வணங்கக் கூடிய கிரேக்கக் கடவுள் ’இரிசு’ வை நினைவூட்டும் வகையில், இந்தத் தனிமத்துக்கு இரிடியம் எனப் பெயரிட்டார்.

கிரேக்கக் கடவுளான இரிசு, பலவண்ணங்களை குழைத்த வானவில்லோடு ஒப்பிடக்கூடிய கடவுள் என்பதால்தான், இரிசு -இரிடியம் ஆயிற்று ! வெண்மை, மஞ்சள் மட்டும் அல்ல, பளிச்சிடாத வண்ணங்களில் கூட இரிடியம் காணப்படும்.

பூமிப்பந்தில்தான் இரிடியம் கிடைக்கிறது என்றாலும், அது பிளாட்டினத்தோடு ஒட்டிப் பிறந்த குழந்தை எனலாம். அந்த பிளாட்டினத்தில் ஆயிரத்தில்
ஒரு பங்கு அளவுதான் இரிடியம் பிரித்து எடுக்கப் படுகிறது. ஆண்டுக்கு சராசரியாக 3 டன் அளவில் மட்டுமே இரிடியம் கிடைப்பதாகச் சொல்கிறார்கள்.

பிளாட்டினம் போலவே பல நூறு ஆண்டுகள் பழமையான தாமிரத்திலும், இரிடியம்
கலந்திருப்பதாக சொல்லப்படுவதால்,
தாமிரத்தைத் தேடியும் பலர் சுற்றுகிறார்கள்.

361 டிகிரி பாரன்ஹீட்டில் தாமிரத்தையும். பின்னர் நிக்கலையும் பிரித்து எடுத்து விட்டால் இரிடியம் மட்டுமே மிஞ்சுமாம். ஒரு கிலோ இரிடியத்தின் கள்ளச்சந்தை மதிப்பு கோடி ரூபாயில்தான் தொடங்குகிறது என்பதால் இரிடியம் தேடி ஓடும் கும்பல் நாளுக்கு நாள்
அதிகரித்து வருகிறது !
திருமணமான புதிதில் இரிடியத்தை தேடி, பயணத்தைத் தொடங்கிய பலர், குடும்ப உறவுகளுக்கே அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைந்து நாற்பது ஆண்டுகள் கழித்து வீடு திரும்பியது எல்லாம் நடந்திருக்கிறது !

இரிடியத்துக்கு ஏன் இத்தனை மதிப்பு, இத்தனை கோடிகள் ஏன் இதில் புழங்குகிறது ?

”இரிடியம் வைத்திருந்தால் கேட்டது கிடைக்கும், எதிர்வரும் சூழ்ச்சிகள், நம்பிக்கை துரோகங்கள் தவிடு பொடியாகும், நினைத்த பதவியும், அதிகாரமும், ஏழேநாளில் கை கூடும்”
என்று பரப்பி விடப்பட்ட வதந்திதான் !

ஆதாரமற்ற – நிரூபிக்கப்படாத இந்த விஷயத்தை இன்னமும் சிலர் – நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் சாதாரணமாகப் பேசித் திரிகின்றனர்.
“ரெண்டு ‘சி’ பேசிட்டேன், கைக்கு ஒன்றரை ‘சி’ வந்துடுச்சு, பேலன்ஸ வாங்கிட்டு, பொருளைக் கொடுத்து விட்ரு” என்று இன்னமும் பலர் முட்டுச் சந்துகளில் செல்போனில் பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது !
அப்படிப் பேசிக் கொண்டிருப்பவன்களைப் பார்த்தால், அவன் சாப்பிட்டே நான்கைந்து நாள்களாகி இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளலாம் !

“போலீஸ் வந்து ரெய்டு அடித்து இன்று மாலை கூண்டோடு உங்களை தூக்கப் போகிறது என்ற தகவலை முன்னரே சொல்லி காப்பாற்ற வில்லை என்றால், அதற்குப்பெயர் இரிடியமா?”

மூணு சீட்டு – மங்காத்தா, சுரண்டல் லாட்டரி, அரியவகை உயிரினங்கள் (ம) கலைப் பொருள்கள் கடத்தல், போதைப்பொருள் விற்றல் – கடத்தல், விபச்சாரத்துக்காக பெண்களை கடத்தி விற்றல்,
மனித உடல் உறுப்புகளை நூதனமாய் கவர்ந்து
திருடல் – விற்றல் நபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது, உழைப்பை மட்டுமே நம்பும்
தனி மனிதனின் தன்னம்பிக்கையை
குலைத்துப் போட்டு விடும் !

“உழைக்கக்கூடாது
வியர்வை வரக்கூடாது
சம்பாதிக்கணும் அவ்வளவுதானே…” !
‘ஆமாண்ணே, அதேதான்… அதேதான்’…
”நீங்க செத்துடுங்க பிரதர்” !

ந.பா. சேதுராமன் –

Exit mobile version